Saturday 21 February 2015

ராஜாதி ராஜா.

#ராஜாதி_ராஜனிந்த_ராஜா

அமைதியான இரவில் அல்லது தனிமையான பொழுதில் மனதில் எவ்வளவு கவலைகள் இருப்பினும் சில பாடல்கள் அதற்கு மருந்தாவது உண்டு.! புண்ணாகி எரியும் காயங்களுக்கு குளு குளுவென மயிலிறகால் மருந்து தடவும் சுகத்திற்காகவே மீண்டும் காயம் ஏற்படாதா என ஏங்க வைக்கும் ஒரு சுகம் அலாதியானது..!

இளையராஜாவை எத்தனையோ புகழுரைகளால் பாராட்டியிருக்கிறார்கள் பலர்.. ஆனால் எனது வார்த்தை ராஜா என்றொரு ஜீவன் இல்லாவிட்டால்  தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும். தன் மாய இசையால் பலரின் மனக் காயங்களுக்கு மயிலிறகால் இசை மருந்து தடவியவர் ராஜா..!

விரையும் பேருந்தோ, கார் பயணமோ, வீடோ,
இரைச்சலான டீக்கடைகளோ, அல்லது மலை பிரதேசத்தில் அமைதியான சூழலோ தூரத்தில் ஒலிக்கும் மைக் செட்டோ எதுவாக இருப்பினும் காது வழியாக உள்ளத்தில் இறங்கி நம்மை உருகவைக்கும் வித்தை ராஜாவின் பாடல்களுக்கு மட்டுமே சாத்தியம்.!

அப்படி ஒரு பாடல்.. படம் ஒன்றும் பெரிய வெற்றிப்படமல்ல 80களில் வந்த ஒரு சாதாரணப்படம்.. ஜெயச்சந்திரனும் உமாரமணனும் தங்கள் தேன் குரலில் பாட ராஜாவின் புல்லாங்குழல் மற்றும் டிரம்பட் இணைந்து குழைய டிரம்ஸ் ஒலி மூங்கிலால் தட்டப்பட்டது போல ஒரு வித்யாசமான ஒலியுடன் தொடங்கும் பாடல் அது..!

இப்போதும் நம் எல்லாரது வாழ்க்கைக்கும் ஒரு ரீவைண்ட் பட்டன் தருவது ராஜாவின் இசையே.. நடிகர் சுரேஷ் நடிகை கலாரஞ்சனி (நடிகை ஊர்வசியின் அக்கா) ஜோடியாக நடித்த மஞ்சள் நிலா படத்தில் வரும்..

#பூந்தென்றல்_காற்றே_வா_வா பாடலை மீண்டுமொருமுறை கேளுங்கள் உங்கள் வயதில் இருபது குறையும் கவலைகள் அனைத்தும் மறையும்.. நெஞ்சம் மகிழ்வில் நிறையும்..!

No comments:

Post a Comment