Saturday 7 February 2015

அ.கி.ப தொடர்.

அ.கி.ப.

#தமிழ்_அன்றும்_இன்றும் 22

அ.கி.பரந்தாமனார்...

ட - டகரம் சொல்லுக்கு முதலில் வாராது.. ஆனால் இது தமிழ்ச் சொற்களுக்கு மட்டுமே பொருந்தும். டங்கன் துரையை இடங்கன் துரை என்று எழுதலாமா? டயர் என்ற சொல்லை இடயர் என்று சொன்னால் பொருள் மாறாதா? டில்லி என்று எழுதாமல் இடில்லி என்று எழுதினால் என்ன பொருள் ஏற்படும்.?

டென்மார்க் என்னுஞ் சொல்லை இடென்மார்க்கு என்று எழுதினால் பொருள் மாறுபடாதா? பிறமொழிச்சொற்களை தமிழில் எழுதும் போது இ சேர்க்க தேவையில்லை ஏனெனில் அவர்கள் மொழியில் டகரம் சொல்லுக்கு முன் வரும். இதேபோலத்தான் ரகரமும் பிறமொழிகளில் முதல் எழுத்தாக வருகிறது.

தொன்று தொட்டு அரங்கநாதன்,இராமன், இராமாயணம் என்று எழுதுவதை நாம் இன்றும் மேற்கொள்வதில் தவறில்லை. ஆனால் எல்லாவற்றையும் அப்படி எழுத வேண்டுவதில்லை. ரதம் என்ற சொல்லை இரதம் என எழுத வேண்டுவதில்லை. ரப்பர் என்னும் சொல்லை இரப்பர் என்று எழுதினால் யாசிப்பர் என்றன்றோ பொருள் படும்.

லகரத்திலும் பிறமொழிச் சொற்கள் வரும் லங்காஷயரை இலங்காஷயர் என்று எழுதுவது தவறு. லூக்கா என்பதை உலூக்கா என்று எழுதினால் நன்றாயிராது. லூயிபிஷர் என்பதை உலூயிபிஷர் என்று எழுதுவது கூடாது. லட்டு என்பதை இலட்டு என்று எழுதுவது நன்றாக இருக்காது.

ஆகவே பிறமொழி சொற்களுக்கும் புதிய சொற்களுக்கும் இகரம் அகரம் பெய்து எழுதுவது தவறு. நம் பழைய சொற்களுக்கு மட்டுமே அதை பயன்படுத்தலாம். 
(மீண்டும் நாளை..)


#தமிழ்_அன்றும்_இன்றும் 23

அ.கி.பரந்தாமனார்...

போலி ( Interchange of Letters ) ஒரு சொல்லில் இயல்பாய் இருக்கும் எழுத்துக்கு ஈடாக மற்றொரு எழுத்து வந்து அந்த பொருள் வேறுபடாது  நின்றால் அவ்வெழுத்து போலி எழுத்து எனப்படும். இது தமிழ்ச் சொல்லில் மட்டுமே வரும். 

இதை எளிமையாக விளக்க ஒரு உதாரணம்..(வெங்கடேஷ் ஆறுமுகத்தின்)

தினசரி பார்க்கும் டிவி சீரியல்களில் பல எபிசோடுகள் நடித்து மக்கள் மனதில் பதிந்த சில நடிகையையோ நடிகரையோ திடீர் என மாற்றிவிட்டு அவருக்கு பதில் இவர் என்று கார்டு போட்டு மாற்றிவிடுவார்கள்.. 

அன்றிலிருந்து அவர் ஏற்கனவே நடித்தவரின் அதே பாத்திரத்தை தொடர்வார்.. இந்த வேறுபாட்டால் கதை ஒன்றும் மாறாது அர்த்தத்தை புரிந்து கொள்வோம் அல்லவா.! சினிமாவில் ஹீரோக்களுக்கு போடும் டூப்பை கூட இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். போலி எழுத்து என்பது இப்போது புரிந்திருக்கும்.(ஓவர் டூ அ.கி.ப.)

போலி மூவகைப்படும் அவை முதற்போலி, இடைப்போலி, கடைபோலி என்பவை. 

1(முதற்போலி Initial Interchange) சொல்லுக்கு முன் ந"கரத்துக்கு ஞ"கரம் போலியாக வரும். நாயிற்றுக்கிழமை - ஞாயிற்றுக்கிழமை. நயம்பட உரை - ஞயம் பட உரை. சொல்லுக்கு முதலில் ஒள"க்கு போலியாக அவ்" வரும். ஐ"காரத்தித்திற்கு அய்"போலியாக வரும்.. ஐயன் - அய்யன்

இனி மற்ற போலிகளை நாளை காண்போம்..


#தமிழ்_அன்றும்_இன்றும் 24

அ.கி.பரந்தாமனார்...

 
(இடைப்போலி Medial Interchange) 

சொல்லுக்கு இடையில் அ"கரத்திற்கு ஐ" போலியாக வரும். அரயன் (அரசன்) - அரையன். 

(கடைப்போலி Final Interchange) சில சொற்களின் இறுதியில் ம்" என்னும் எழுத்துக்கு"ன்" போலியாக வரும்... நலம் - நலன். அறம் - அறன் 

(இதுவே புலம் - புலன் என்று எழுதும் போது அர்த்தம் மாறுவதை கவனிக்கவும் போலியில் அர்த்தம் மாறக்கூடாது.)

சில சொற்களின் இறுதியில் உள்ள ல்" என்னும் மெய்யெழுத்துக்கு ர்"எனும் எழுத்து போலியாக வரும்.. குடல் - குடர், பந்தல் - பந்தர், சாம்பல் - சாம்பர், சுவல் - சுவர். சில சொற்களின் இறுதியில் ல்" எனும் எழுத்துக்கு ஈடாக ள்" எனும் எழுத்து போலியாக வரும்.. மதில் - மதிள், செதில் - செதிள்.

இச்சொற்களை இரு வகையாக எழுதினாலும் தவறில்லை.. இதற்காகவே போலியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.. (மீண்டும் நாளை...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 25

அ.கி.பரந்தாமனார்...

போலிகளை பற்றி தெரிந்து கொண்டோம்.. இதில் இருவகையாக எழுதக்கூடிய வார்த்தைகளுக்கும் எழுதக்கூடாத வார்த்தைகளுக்கும் உதாரணம்... இருவகையாக எழுதக்கூடிய வார்த்தைகள் : கறுப்பு - கருப்பு, சிவப்பு - சிகப்பு, குடல் - குடர், மதில் - மதிள், செதில் - செதிள், ஐயர் - அய்யர், அவ்வையார் - ஒளவையார்.

எழுதக்கூடாத வார்த்தைகள் : வரட்சி - வறட்சி, அக்கரை - அக்கறை, சில்லரை - சில்லறை, நிலயம் - நிலையம், வேண்டா - வேண்டாம்.

கருமை - பண்புச்சொல்.. கறுப்பு - பெயர்போலி ஆகவே இரண்டும் உபயோகிப்பதில் தவறில்லை. வரட்சி வறட்சி என்பவை அகராதியில் காணப்படினும் வறட்சி என எழுதுவதே மொழி நூற்படி பொருத்தமாகும்.அக்கரை அக்கறை என்னும் சொற்களின் அர்த்தம் வேறு.. அக்கறை என்பது கன்னடச்சொல்.!

சில்லரை சில்லறை என்னும் சொற்களில் சில்லறை என்று எழுதுவது நலம்.. சில்லறை என்பது தெலுங்குச் சொல்.! (சிலவாக அறுத்தல் என்பது பொருள்) நிலயம் நிலையம் இவற்றுள் நிலையம் என்று எழுதுவதே சிறந்தது. வேண்டாம் என்பது தவறாயினும் இன்று அது ஒப்புக்கொள்ளும் நிலையை அடைந்து விட்டது.

வேண்டாவாம் என்பதே வேண்டாம் என மருவிற்றுப்போலும். பழமை என்பதை விட பழைமை என எழுதுவது சிறப்பு.பழமை என்னும் சொல்லின் வடிவம் பழைமை ஆகும். எனினும் பழமை எனும் சொல்லே பெரு வழக்காக வழங்கி வருகிறது. இது மரூஉ.

நாம் அன்றாடம் எழுதும் சொற்களில் பிழையானது எது.? திருத்தமானது எது.? நாளை அதை காணலாம் (வரும்)


#தமிழ்_அன்றும்_இன்றும் 26

அ.கி.பரந்தாமனார்...

கீழே பலர் அடிக்கடி செய்யும் எழுத்துப் பிழைகளுக்குத் திருத்தங்கள் தரப்பட்டுள்ளன:

#பிழை.                       #திருத்தம்.

அடமானம்                    அடைமானம்.
அடமழை                      அடைமழை
அனியாயம்                    அநியாயம்
அருவெறுப்பு                  அருவருப்பு
இராமனாதபுரம்             இராமநாதபுரம் 
இடது பக்கம்                 இடப்பக்கம்
உத்திரவு                        உத்தரவு
உடமை                          உடைமை
ஊரணி                           ஊருணி
எண்ணை (Number)        எண்ணெய் (Oil)
எல்லோரும்                    எல்லாரும்
ஏமாந்து போனான்          ஏமாறிப் போனான்
ஒருவள்                          ஒருத்தி
கத்திரிக்கோல்               கத்தரிக்கோல்
கர்ப்பூரம்                        கருப்பூரம்
குத்துதல் (நெல்)             குற்றுதல்
கோர்த்தான் (முத்து)        கோத்தான்
கோடாலி                        கோடரி
சம்மந்தன்                       சம்பந்தன்
சம்பாரித்தான்                 சம்பாதித்தான் 

செய்யுளில் மட்டுமே எல்லாரும் என்பது எல்லோரும் என்று வரும். உரைநடையில் எல்லாரும் என்று எழுதுவதே சிறப்பானது. ( மீண்டும் நாளை வரும்..)


#தமிழ்_அன்றும்_இன்றும் 27

அ.கி.பரந்தாமனார்...

#பிழை                                    #திருத்தம்

சித்தரிக்கிறாள்                        சித்திரிக்கிறாள்
சுவற்றில்                                 சுவரில்
சித்தரம்                                  சித்திரம்
சோத்துப்பானை                     சோற்றுப்பானை
திரேகம்                                  தேகம்
துகை                                     தொகை
துளிர்                                      தளிர்
துவக்கம்                                 தொடக்கம்
துடங்கிவத்தார்                       தொடங்கிவைத்தார்
தொந்திரவு                             தொந்தரவு
தோற்கடித்தான்                      தோல்வியுற அடித்தான்
நாகரீகம்                                 நாகரிகம் 
நாத்தம்                                   நாற்றம்
பண்டகசாலை                        பண்டசாலை
பீத்தல்                                     பீற்றல்
புத்து                                       புற்று
புண்ணாக்கு                            பிண்ணாக்கு
புணையம்                               பிணையம்
புழுக்கை                                பிழுக்கை
பூசிணிக்காய்                          பூச்சுணைக்காய்
மண்எண்ணை                         மண்எண்ணெய்
முழுங்கு                                  விழுங்கு
மெள்ள                                   மெல்ல
மென்மேலும்                           மேன்மேலும்

இங்கே தமிழ்ச்சொல் வட சொல் பாராமல் பிழையாக எழுதும் சொற்களுக்கு திருத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. (மீண்டும் நாளை வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 28

அ.கி.பரந்தாமனார்...

#பிழை                                    #திருத்தம்

மோவாக்கட்டை                    முகவாய்க்கட்டை
வயறு                                     வயிறு
வரட்சி                                   வறட்சி
வரவுசிலவு                              வரவு செலவு
வினாயகர்                              விநாயகர் 
வெய்யில்                                வெயில்
வென்னீர்                                வெந்நீர் 
வைக்கல்                               வைக்கோல்
அருகாமை                            அருகண்மை,அருகில்
இன்னாளில்                          இந்நாளில்
ஈர்க்குளி                                ஈர்கொல்லி
எல்கை                                  எல்லை
கிடாய்                                   கடா
கம்மனாட்டி                           கைம் பெண்டாட்டி
வருவல்                                  வறுவல்
குத்துயிர்                                குற்றுயிர்
குருக்குத்தெரு                       குறுக்குத்தெரு
கெவுளி                                  கெளளி
கைமாத்து                              கைம்மாற்று
சிலது                                      சில
சீயக்காய்                                சிகைக்காய்
தேனீர்                                     தேநீர்
நோம்பு                                    நோன்பு
பெரிசு                                     பெரிது
முந்தாணி                                முன்தானை
வல்லுனர்                                வல்லுநர்
வெங்கலம்                               வெண்கலம்
விரை                                      விதை
மேநாடு                                   மேனாடு (மேல் + நாடு)
வெத்திலை                              வெற்றிலை
மார்வலி                                   மார்பு வலி
வேர்க்குரு                                வேர்க்குறு

நாளை இருவகையாய் எழுதும் சொற்களைப் பார்க்கலாம்.. (வரும்..)


#தமிழ்_அன்றும்_இன்றும் 29

அ.கி.பரந்தாமனார்...

இருவகையிலும் எழுதும் சொற்கள் : சுருசுருப்பு - சுறுசுறுப்பு, பவழம் - பவளம், துளை - தொளை, வியர்வை - வேர்வை, கோவில் - கோயில், யாண்டு - ஆண்டு, யார் - யாவர்,ஆர், யாறு - ஆறு, யானை - ஆனை, சாம்பல் - சாம்பர், பொழுது - போது, போழ்து, எமன் - யமன் கருப்பூரம் - கற்பூரம்.

ரி" மற்றும் றி" குழப்பம் தீர ஒரு எளிய வழி... பெரிய என்னும் சொல்லில் சிறிய ரி" இருக்கும் சிறிய என்னும் சொல்லில் பெரிய றி" இருக்கும் இதை நினைவில் வைத்துக்கொண்டால் தவறு வருமோ.? வாராதே.! நீக்ரோ என்னும் சொல்லை தமிழில் கறுப்பர்,கரிய நிறத்தினர், கரு நிறத்தவர்,என்றே எழுதவேண்டும்.!

கருப்பர் என்று எழுதுவது பிழையாகும். குறிலுக்கும் நெடிலுக்கும் ஒரே பொருள் தருவனவும் உண்டு. அங்கு,ஆங்கு - இவ்விரண்டும் அவ்விடம் எனும் பொருளையே தருவன. இங்கு,ஈங்கு - இவ்விரண்டும் இவ்விடம் என்னும் பொருளையே தரும். ஓர் எழுத்துக்கு மாறாக மற்றோர் எழுத்தை எழுதினால் பொருளே மாறுபடும்.

அறை என்பதற்கு மாறாக அரை என்றெழுதினால் பொருள் மாறுபடாமல் இருக்குமா? ஆதலால் பொருளுக்கு ஏற்றவாறு எழுத்தறிந்து எழுத வேண்டும். எழுத்து வேறுபாடு அறிவதற்கு உதவி செய்யும் சொற்களை நாளை காண்போமா.?! 

மீண்டும் நாளை.... (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 30

அ.கி.பரந்தாமனார்... #ரகர_றகர_வேறுபாடுகள்

அரம் - ஒரு கருவி, அறம் - தருமம், உரை - சொல், உறை - தலையணை உறை, அஞ்சலுறை, அரன் - சிவன், அறன் - தருமம், எரி - தீ, எறி - வீசு, அரி- வெட்டு, விஷ்ணு, ஏரி - நீர்நிலை, ஏறி - மேலே போய், அரை - மாவாக்கு, பாதி, அறை - வீட்டுப்பகுதி,கன்னத்தில் அடி, ஒரு - ஒன்று ஒறு - தண்டி, ஆர - நிறைய (வயிறாற) ஆற - சூடு குறைய, கரி - யானை,அடுப்புக்கரி, கறி - காய்கறி, இறைச்சி.

இரை - தீனி, இறை - அரசன்,கடவுள்,வரி,நீர் இறை, சீரடி - சீர்மையுடைய அடி, சீறடி - சிறிய அடி, சொரி - பொழி, சொறி - தினவு, கரையான் - வலைஞன், கறையான் - வெள்ளெறும்பு, துரவு - பெருங்கிணறு (தோட்டம் துரவு நினைவில் கொள்க) துறவு - துறந்துவிடுதல், குரவர் -பெரியோர், குறவர் - குற சாதியினர், துரை - பிரபு, துறை - நீர் நிலையில் இறங்குமிடம் (படித்துறை, பரிசல் துறை)

நரை - வெண்மயிர், நறை - வாசனை, நிரை - பசு,வரிசை, மந்தை, நிறை - எடை,  திருப்தி, பரவை - கடல், பறவை - பட்சி, பிரை - உறை, பிறை - கீற்று, புரம் - நகரம், புறம் - பக்கம்,கிராமம், மாரன் - மன்மதன், மாறன் - பாண்டியன், பெரு - பெரிய, பெறு - அடை,வாங்கு, விரகு - தந்திரம், விறகு - மரத்துண்டு, பொருப்பு - மலை, பொறுப்பு - உத்திரவாதம் பொரி - நெற்பொரி, பொறி - எந்திரம். 

மருப்பு - யானைத்தந்தம், மறுப்பு - மறுத்துப்பேசுதல், மரம் - விருட்சம், மறம் - வீரம் மருகன் - வழிவந்தோன், மருமகன் - மாப்பிள்ளை, மறுமகன் - வேறுமகன்.

நாளை லகர ளகர ழகர வேறுபாடுகள்.. (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 31

அ.கி.பரந்தாமனார்... #லகர_ளகர_ழகர_வேறுபாடுகள்

உலவு - சுற்றி வா, உளவு - வேவு பார்த்தல், உழவு - பயிர்த்தொழில், ஒலி - சப்தம், ஒளி - வெளிச்சம், ஒழி - நீக்கு, வலி - நோய், வளி - காற்று, வழி - பாதை, வால் - கடைப்பகுதி உறுப்பு, வாள் - கத்தி,ரம்பம், வாழ் - வாழி, விலா - விலாஎலும்பு, விளா - விளாமரம், விழா - திருவிழா, மூலை - ஓரம், மூளை - உடலுறுப்பு, மூழை - அகப்பை,கரண்டி, தால் - நாக்கு, தாள் - காகிதம்,கால்,முயற்சி, தாழ் - தாழ்வடை.

#லகர_ளகர_வேறுபாடுகள்

குலம் - சாதி, குளம் - நீர்நிலை, கொல் - கொன்று விடு, கொள் - பெறு, சூல் - கர்ப்பம், சூள் - சபதம், நால் - நான்கு, நாள் - தினம், புல் - தாவரம், புள் - பறவை, விலக்கு - நீக்கு, விளக்கு - விவரி, ஒளி தரும் தீபம், வேல் - ஆயுதம், வேள் - மன்மதன், அரசன், வேலை - தொழில், வேளை - பொழுது, காலை - பொழுது, காளை -எருது, கோல் - கம்பு, கோள் - கலகம், கிரகம்.

#னகர-ணகர_வேறுபாடுகள்

அன்னாள் - அவள், அந்நாள் - அந்த நாள், அன்னம் - பறவை, அண்ணம் - வாயின் மேற்பகுதி, ஆண் - ஆடவன், ஆன் - பசு,சுண்ணம் - வாசனைப்பொடி, சுன்னம் - சுழி,  தன் -தனது, தண் -குளிர்ச்சி, உண்ணல் - புசித்தல், உன்னல் - நினைத்தல், ஊன் - மாமிசம், ஊண் - உணவு, கான் - காடு, காண் - பார்,

 மான் - விலங்கு, மாண் - சிறப்பு,கன்னன் - கர்ணன், கண்ணன் - கிருஷ்ணன், வன்மை - வலிமை, வண்மை - வள்ளல்தன்மை. இவ்வேறுபாடுகளை அறிந்தால் ஒருவர் எழுத்துப்பிழையின்றி எழுதலாம் என்பது உறுதி. 

நாளை நம் தமிழின் முக்காலமும் பார்க்கலாமா.?!  மீண்டும் நாளை... (வரும்...)



#தமிழ்_அன்றும்_இன்றும் 32

அ.கி.பரந்தாமனார்...

தமிழில் பன்னெடுங்காலமாக இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலங்களே சொல்லப்பட்டு வருகின்றன. ஆங்கிலத்தில் காலவேறுபாடுகள் காட்டும்  சொற்கள் இருப்பது போல தமிழ் இலக்கணங்களில் கூறப்படவில்லை. ஆனால் கால வேறுபாடுகள் காட்டும் சொற்கள் உண்டு என எழுதியுள்ளார்கள் இரு தமிழறிஞர்கள்.

வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமாற்கலைஞர்) தமது "தமிழ் மொழி வரலாறு"நூலிலும், டாக்டர் மு.வரதராசனார் தமது  "மொழி நூலிலும்"  இறப்பு, இறப்பில் இறப்பு, இறப்பில் நிகழ்வு, இறப்பில் எதிர்வு, தொடரும் இறப்பு எனவும் நிகழ்வு, தொடரும் நிகழ்வு, எனவும் எதிர்வு, தொடரும் எதிர்வு எனவும் கால வேறுபாடுகளைக் காட்டியுள்ளார்கள். இதோ அந்த உதாரணங்கள்...

#இறந்த_காலம் 
எழுதினான் - இறப்பு, எழுதிவிட்டான்/எழுதியுள்ளான் - இறப்பில் இறப்பு, எழுதியிருக்கிறான் - இறப்பில் நிகழ்வு, எழுதியிருப்பான் - இறப்பில் எதிர்வு, எழுதிக் கொண்டிருந்தான் - தொடரும் இறப்பு.

#நிகழ்காலம்
எழுதுகிறான் - நிகழ்வு, எழுதிக் கொண்டிருக்கிறான் - தொடரும் நிகழ்வு.

#எதிர்காலம்
எழுதுவான் - எதிர்வு, எழுதிக் கொண்டிருப்பான் - தொடரும் எதிர்வு

இதில் பரிதிமாற்கலைஞர் நிகழ்வு மூன்று (நிகழ்வில் நிகழ்வு) எதிர்வு ஒன்றே என்று எழுதியிருக்கிறார்.. மு.வ அவர்களே நிகழ்வு 2 எதிர்வு 2 என "எழுதியுள்ளார்" (எழுதியுள்ளார் என்பது இறப்பு)

இவ்வாறு துணை வினைகளை பயன்படுத்துவதால் வினைச் சொற்களின் கால வேறுபாடுகள் தோன்றுவதை காணலாம். (மீண்டும் நாளை...)




 






No comments:

Post a Comment