Thursday 19 February 2015

அ.கி.ப. தொடர் -2

அ.கி.ப.

#தமிழ்_அன்றும்_இன்றும் 33

அ.கி.பரந்தாமனார்...

பிறமொழிகளில் இருந்து தமிழில் புகுந்த சொற்களைத் திசைச் சொற்கள் என்பர். அவற்றைப்பற்றி பார்ப்போம். இதெல்லாம் தமிழ்ச்சொற்கள் இல்லையா.! தெலுங்கு சொற்களா என நீங்கள் வியக்கும்படி இருக்கும்... ஒவ்வொரு சொல்லுக்கும் எதிரே அதன் தமிழ்ச் சொல் தந்து இருக்கிறேன். இனி

#தெலுங்குச்_சொற்கள்

அப்பட்டம் - கலப்பில்லாதது, ஆஸ்தி - செல்வம், எக்கச்சக்கம் - மிகுதி, ஏடாகூடம் - ஒழுங்கில்லாமை, ஏராளம் - மிகுதி, ஒய்யாரம் - குலுக்குநடை, கச்சிதம் - ஒழுங்கு, கெட்டியாக - உறுதியாக, கெலிப்பு - வெற்றி, கேப்பை - கேழ்வரகு, சந்தடி - இரைச்சல், சரக்கு - வாணிகப்பொருள், சாகுபடி - பயிரிடுதல், சொகுசு - நேர்த்தி. 

சொச்சம் - மிச்சம், சொந்தம் - உரிமை, துரை - பெரியோன், தெம்பு - ஊக்கம், தொந்தரவு - தொல்லை, பண்டிகை - பெருநாள், பந்தயம் - பணயம், மச்சு - மேல்தளம், மடங்கு - அளவு, வாடகை - குடிக்கூலி, நிம்மதி - கவலையின்மை, வாடிக்கை - வழக்கம், விக்கிரயம் - விற்பனை, ரீதி - ஒழுங்கு, வேடிக்கை - காட்சி, எச்சரிக்கை - முன்கூட்டி சொல்லி வைத்தல்/விழிப்பாக இருத்தல்.

எழுந்திருக்கை என்னும் தமிழ்ச்சொல்லே எச்சரிக்கை என மருவிற்று என்றும், இக்காலத்திலும் கோயில்களில் திருவீதி புறப்பாடு முடிந்ததும் சுவாமி கோயிலுக்குள் எழுந்தருள எச்சரிக்கை பாடுவதுண்டு என்றும் பன்மொழிப் பெரும்புலவர் திரு.வே. வேங்கடராஜுலு ரெட்டியார் கூறியுள்ளார்.

#கன்னடச்_சொற்கள்

அக்கடா - வாளா, கோசரம் - ஆக (அதற்கோசரம் - அதற்காக), அக்கறை - கவனம்.

நாளை போர்த்துகீசிய, அரபு,பாரசீக,இந்துஸ்தானி சொற்கள்.. (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 34

அ.கி.பரந்தாமனார்...

தமிழ்ச்சொற்களாகவே மாறிவிட்ட பிற மொழிச்சொற்களும் அதன் எதிரே தமிழ்ச்சொல்லும் தந்திருக்கிறேன்... தமிழ்ச்சொல் தராத சொற்களை அப்படியே பயன்படுத்துவதில் தவறில்லை என்று பரந்தாமனார் எழுதியுள்ளார்.

#போர்த்துக்கீசிய_சொற்கள்

சாவி - திறவுகோல், ஜன்னல் - காற்று வழி/சாளரம், பாதிரி - கிறித்துவ சமயத் தொண்டர், கிராம்பு, அலமாரி (கடைசி 2 சொற்களை அப்படியே பயன்படுத்தலாம்)

#அராபியச்_சொற்கள்

அகஸ்மாத்தாய் - தற்செயலாய், ஆஜர் - வருகை, இனாம் - நன்கொடை, ஈது - பண்டிகை, ஐவேஜ் - உடைமை, கலால் - சாராயம், கஜானா - கருவூலம், காலி - ஏதுமில்லாத, காயம் - நிலையான, காஜி - நீதிபதி, குலாம் - அடிமை, கைதி - சிறையாளி, சராப்பு - காசுக்கடை, சவால் - அறைகூவல், ஜவாப் - மறுமொழி.

ஜப்தி - கைப்பற்றுதல், ஜாஸ்தி - மிகுதி, ஜாமீன் - பிணையாதல், சாமான் - பண்டம், ஜூட் - பொய்/மோசம், தபா - காலம், தாவா - வழக்கு, திவான் - அமைச்சர், நபி - தீர்க்கதரிசி, பக்கிரி - துறவி, தோபா - கப்பம், பதில் - மறுமொழி, பாக்கி - நிலுவை, மஹஜர் - வேண்டுகோள், மஹால் - அரண்மனை, மாமூல் - பழைய வழக்கம்.

மாஜி - முன்னைய, முகாம் - தங்குமிடம், முலாம் - மேற்பூச்சு, மைதானம் - திடல், ரத்து - விலக்கு, ராஜி - உடன்பாடு, லாயக்கு - தகுதி, வகையறா - முதலான, வாரிசு - உரியவர். இனி தமிழ்ப்படுத்த தேவையில்லாத அராபியச் சொற்களை நாளை பார்ப்போம். (வரும்..)


#தமிழ்_அன்றும்_இன்றும் 35

அ.கி.பரந்தாமனார்...

கீழ்க்கண்ட அராபியச் சொற்களை தமிழ்ச் சொல்லாக்காமல் அப்படியே பயன்படுத்துவதில் தவறில்லை..

அசல், அமீனா, அமுல், அனாமத்து, அல்வா, அண்டா, அத்தர், ஆபத்து, இலாகா, நகல், உஷார், உருமால், ஊதா, கடுதாசி, சர்தார், சலாம், ஜாப்தா, ஜாரி, ஜிப்பா, ஜில்லா, தகரார், தாக்கீது, தர்பார், தாலுகா, தாக்கல், தினுசு, நபர், நமூனா, பாபத்து, பிர்கா, மசோதா, ருஜு, ருமால், ரையத்து, வக்கீல், வக்காலத்து, வஸுல், வாய்தா, வஜா, முன்சீ, ஷர்பத்,ஷரத், ஷரா. இவையெல்லாம் அரபுச் சொற்கள்.

#பாரசீகச்_சொற்கள்

அம்பாரி - குவியல், அலாதி - தனி, ஆப்காரி - மதுவரி, கறார்விலை - ஒரேவிலை, கம்மி - குறைவு, கிஸ்தி - வரி, கரம் - சூடு/காரம், சரகம் - எல்லை, சந்தா - கட்டணம், சர்க்கார் - அரசாங்கம், சாவி - பதர், சிப்பந்தி - வேலையாள், சிப்பாய் - படை வீரன், ஜமீன் - நிலம், ஜமீன்தார் - நிலக்கிழார், ஜரூர் - விரைவாக.

சுமார் - ஏறக்குறைய, தயார் - ஆயத்தம், நாதார் - ஏழை, படுதா - திரைச்சீலை, பந்தோபஸ்து - பாதுகாப்பு/திட்டப்படுத்திய ஒழுங்கு, பாரா - காவல், பூரா - முழுவதும், பேஷ் - மிகநன்று, ரஸ்தா - பாதை/சாலை, ஷோக் - பகடு. இனி நாளை தமிழ்ப்படுத்த தேவையில்லாத பாரசீகச் சொற்கள். (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 36

அ.கி.பரந்தாமனார்...

தமிழ்ப்படுத்தத் தேவையில்லாத பாரசீகச்சொற்கள் : கச்சேரி, குஸ்தி, குமாஸ்தா, குருமா, கூஜா, சபாஷ், சவாரி, ஜரிகை, ஜாங்கிரி, ஜோர், டபேதார், தராசு, தர்பார், தஸ்தாவேஜு, தபேலா, தாசில்தார், பட்டா, பர்தா, பிரியாணி, பிராது, புகார், புலாவ், பூந்தி, பூரி, பைசல், பயில்வான்,பைஜாமா, மனு, மனுதார், மேஜை, ரகம், ராஜிநாமா, வாபஸ். இப்பகுதியில் ஒரளவே அயல் மொழிச்சொற்கள் தரப்பட்டுள்ளது.

பிறமொழிச்சொற்களை அளவு கடந்து புகுத்துவது தமிழின் இனிமையை கெடுக்கும். மொழி வளர்ச்சிக்கு நம் மொழியோடு பிற மொழிச்சொற்களைப் புகுத்த வேண்டும் என்பது அண்மையில் தோன்றிய மொழிகளுக்கு வேண்டுமானால் பொருந்தும் ஆனால் செம்மொழியான தமிழுக்கு அது முற்றும் பொருந்தாது.

ஆனால் நம் முன்னோர்கள் இன்றியமையாத பிறமொழிச் சொற்களை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு "திசைச்சொல்" என்ற ஒரு பாகுபாடு வைத்தார்கள். அவர்களது பேரறிவை எண்ணும் போது நாம் வியப்படையாமல் இருக்க முடியாது. இன்றியமையாத இடங்களில் பிற மொழிச்சொற்கள் பயன்படுத்துதல் தவறல்ல.

அயல்மொழிகள் அதிகம் கலப்பதால் ஒரு மொழி அழிய வாய்ப்புண்டு. ஆர்மீனிய மொழியுடன் அளவு கடந்த ரஷ்ய மொழி கலந்ததால் ஆர்மீனிய மொழி அழிந்தது. இங்கிலாந்தில் கெல்ட் என்னும் மொழி அதிக அளவு ஆங்கிலக் கலப்பால் அழிந்தது. இது போல ஒரு நிலை நம்முடைய தமிழ்மொழிக்கும் வந்துவிடக்கூடாது.

பிறமொழிகளின் கலப்பால் ஆங்கிலமும், மலையாளமும் புதிய சொற்களை உண்டாக்கும் ஆற்றலை இழந்து விட்டதாக மொழி நூலறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் தமிழ் மொழி மட்டும் அந்த ஆற்றலை இன்னும் இழக்கவில்லை என்பது தமிழர்களாகிய நமக்கெல்லாம் பெருமை.

நல்ல தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி இன்றியமையா இடத்தில் பிற மொழிச்சொற்களை அனுமதிப்போம் முடிந்தால் அதற்கும் புதுச்சொல் உருவாக்குவோம்.. மீண்டும் நாளை (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 37

அ.கி.பரந்தாமனார்...

செல்லாத காசுகளை நல்ல காசுகளுடன் சேர்த்து அறியாதவர்களிடம் மாற்றிவிடலாம் ஆனால் விழிப்புணர்வோடு இருக்கும் இடத்தில் மாற்ற முடியுமோ.? முடியாதல்லவா.! அதே போல சரியான சொற்கள் என எண்ணி நாம் எழுதிவரும் தவறான சொற்களை (செல்லாக்காசுகள்) இங்கு பார்ப்போம்

"என் வீடு அருகாமையில் இருக்கிறது" என்று எழுதுவது தவறு.! அருகில் என எழுதவும். முயற்சித்தல், முயற்சித்தான் என எழுதாமல் முயற்சி செய்தல், முயலுதல், முயன்றான் என்றும் முறையே எழுதுக. நாம் பூவை முகருகிறோம் என்பது தவறு மோக்கிறோம் என்பதே சரி. முகருகிறோம் என்பது தவறான பேச்சு வழக்கு.

"பிரதி ஞாயிறு தோறும் விடுமுறை" என அச்சிட்ட அட்டைகளை பார்த்திருப்பீர்கள். அது தவறு... ஞாயிறு தோறும் விடுமுறை" என்பதே சரி. பிரதி & தோறும் இரண்டும் ஒரே அர்த்தம் தான் ஆகவே பிரதி என்பது வேண்டுவதில்லை. மாடுகள் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன என்பது தவறு.. புல்லை என்று எழுவதே சரி.

"பல ஆறுகளின் நீர்களை குடித்தேன்" என்பது தவறு.. நீரைக்குடித்தேன் என்பதே சரி. பலருடைய தாகங்களை தண்ணீர் கொடுத்து நீக்கினான் என்பது தவறு. தாகத்தை என்க. "நாட்டுமக்களுடைய வறுமைகளை ஒழிக்க" என்பது தவறு.. வறுமையை என்க. புல்,நீர்,தாகம்,வறுமை ஆகியவற்றிற்கு பன்மை கிடையாது.

மீண்டும் நாளை (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 38

அ.கி.பரந்தாமனார்...

கால்கள் என்பதை காற்கள் என்று எழுதுகிறோமா? இல்லையே. ஆகையால் நூற்கள் என்றும் தொழிற்கள் என்றும் எழுதாமல் நூல்கள், தொழில்கள் என்றும் எழுதுக. தோள்கள் என்பதை தோட்கள் என்றா கூறுகிறோம்.? பின் ஏன் நாட்கள் என்று எழுதுகிறோம்.? நாட்கள் என்பது தவறு, நாள்கள் என்பதே சரி.

நாட்கள் என்றால் புதிய கள் என்றே பொருள். கொடுக்கப்பெறும், கொடுக்கப்படும் இந்த இரு சொற்களுக்குமே வேறுபாடு உண்டு. "இவன் தமிழ் முதுகலைப்பட்டம் கொடுக்கப்பெற்றான்" இது மனமுவந்து பெறுதலைக் குறிக்கும். "இவன் விலங்கிடப்பட்டான்" இது வலியச்செய்தலைக் குறிப்பிடும்.

இயலாது, கூடாது, வேண்டும் என்னும் சொற்களைப் பயன்படுத்துவதிலும் வேறுபாடு உண்டு.

 "நீ இதனைச் செய்ய இயலாது (cannot)

"நீ இதனைச் செய்யக்கூடாது (should not)

"நீ இதனைச் செய்ய வேண்டும் (should do)

இவ்வெடுத்துக் காட்டுகளைக்கண்டு வேறுபாடு தெரிந்து கொள்வோம்.தமிழில் வடமொழிச் சொற்கள் பற்றி நாளை (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 39

அ.கி.பரந்தாமனார்...

கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த தொல்காப்பியரே வடசொல்லை தமிழில் பயன்படுத்தும் முறையை கூறியுள்ளார். சங்க நூல்களில் வடசொல் மிக மிகக்குறைவு. வடமொழி புராணங்கள், சமயங்கள் தமிழகத்தில் புகுந்த போது செய்யப்பட்ட மொழி பெயர்ப்பினால் வடமொழிச்சொற்கள் தமிழில் கலந்துவிட்டன.

கிபி12ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை தமிழில் வட மொழி சொற்கள் கலந்தே பல நூல்கள் இயற்றப்பட்டன.. வில்லிபுத்தூரார்,அருணகிரிநாதர், தாயுமானவர் போன்றோர் தங்களது பாடல்களில் வடசொற்களை மிகுதியாக புகுத்தினார்கள். நம்முடைய மக்களும் தமிழில் வடமொழிச்சொல் கலந்து பேசுவது.. 

திருமணம் மற்றும் கோயில் விழா பத்திரிக்கைகளில் வடமொழி சொற்களை எழுதுவது போன்றவற்றைப் பெருமையாகக் கருதினார்கள். வட மொழியாளர்கள் வடமொழியில் இருந்து தான் தமிழ் தோன்றியது எனத் தவறாக நம்பினார்கள். அது தவறு தமிழ் தான் ஒரே திராவிட மொழி என அறிவித்தவர் யார் தெரியுமா.!

அவர்தான் கால்டுவெல் எனும் ஐரோப்பியர். திராவிட மொழி ஒப்பிலக்கணம் என்னும் நூலில் திராவிட மொழிகளுள் தமிழ் மொழி ஒன்றே.. வடமொழியின்றியும் தமிழ் மொழி தனித்து இயங்க வல்லது என்று எடுத்துக்காட்டினார். இதன்பிறகு தனித்தமிழ் இயக்கம் தோன்றிய பின் தமிழில் வட சொற்களுக்கு விடையளித்தோம்.. 

நாளை வடசொற்களுக்கு தமிழ்ச் சொல்.. (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 40

அ.கி.பரந்தாமனார்...

வடசொல்லும் தமிழ்ச் சொல்லும் : அகங்காரம் - செருக்கு, அகதி - புலம் பெயர்ந்தோர்/ஆதரவற்றோர், அகிம்சை - ஊறு செய்யாமை, அக்னி - எரி,தீ, அங்கத்தினர் - உறுப்பினர், அங்கீகாரம் - ஒப்புதல், அசுத்தம் - துப்புரவின்மை, அநீதி - முறையற்றது, அபயம் - அடைக்கலம், அபாயம் - துன்பம், அப்பியாசம் - பயிற்சி, அபிவிருத்தி - பெருவளர்ச்சி, அபிஷேகம் - திருமுழுக்கு, அபிப்ராயம் - உட்கருத்து.

அபூர்வம் - அருமை, அம்சம் - கூறு, அர்ச்சனை - மலரிட்டு ஓதுதல், அவகாசம் - ஓய்வு, அவசரம் - விரைவு, அவயம் - உறுப்பு, அனுக்கிரகம் - அருள் செய்தல், அனுபவம் - பட்டறிவு, அனுமானம் - யூகித்தல்/உய்த்தறிதல், அதிகாரி -அலுவலர், ஆக்ரமிப்பு - வலிந்து கவருதல், ஆகாயம் - வானம், ஆசீர்வாதம் - வாழ்த்து, ஆபத்து - துன்பம், ஆராதனை - வழிபாடு, ஆன்மா - உயிர், இராகம் - பண், இலக்கம் - எண்.  

இரத்தம் - குருதி, இரத்தினம் - செம்மணி, இலட்சணம் - அழகு, இலெளகீகம் - உலகியல், உதாரணம் - எடுத்துக்காட்டு, உத்திரகிரியை - நீத்தார் கடன், உத்யோகம் - அலுவல், உபத்திரவம் - வேதனை, உற்சவம் - விழா, ஐக்கியம் - ஒற்றுமை, ஒளபாஷாணம் - எரியோம்பல், கஷ்டம் - தொல்லை, கல்யாணம் - திருமணம், காரியம் - செயல், காரியாலயம் - அலுவலகம்.

வடசொல்லுக்கு தமிழ்ச் சொற்கள் நாளையும்.. (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 41

அ.கி.பரந்தாமனார்...

வடசொல்லுக்கு தமிழ்ச்சொற்கள் : காரியதரிசி - செயலாளர், கஷாயம் - துவராடை, கிரமம் - ஒழுங்கு, கிரகம் - கோள், கிரகசாரம் - கோள்பயன், கிரகணம் - பற்றுகை, கிரயம் - விலை, கிராமம் - சிற்றூர், கிருஷ்ணபக்ஷம் - தேய்பிறை, குஷ்டம் - தொழுநோய், குதூகலம் - எக்களிப்பு, கும்பாபிஷேகம் - குடமுழுக்கு, கைங்கர்யம் - திருப்பணி, கோஷ்டி - குழாம், கோத்திரம் - குடி, சக்தி - ஆற்றல், சகஜம் - வழக்கம்.

சகோதரன் - உடன்பிறந்தான், சக்ரவர்த்தி - பேரரசன், சந்தேகம் - ஐயம், சமத்துவம் - சமன்மை, சபதம் - வஞ்சினம்/சூள், சந்தோஷம் - மகிழ்ச்சி, சச்சிதானந்தம் - மெய்யறிவின்பம், சமீபம் - அண்மை, சத்யாகிரகம் - அறவழிப்போராட்டம், சந்ததி - வழித்தோன்றல்/கால்வழி, சிகிச்சை - மருத்துவ முறை, சந்திரன் - நிலா/மதி, சந்தர்ப்பம் - வாய்ப்பு, சம்பிரதாயம் - தொன்மரபு, சரணம் - அடைக்கலம்.

சமுதாயம் - பொதுமக்கள், சாபம் - கெடுமொழி, சாதாரண - எளிதான, சாக்ஷி - சான்று, சாதம் - சோறு, சாமியார் - அடிகளார், சாசுவதம் - நிலையான, சிங்காசனம் - அரியணை, மதம் - நெறி, சிநேகம் - நட்பு, சீமந்தம் - முதற்சூல் விழா, சீதோஷ்ணம் - தட்ப வெப்பம், சுதந்திரம் - உரிமை/விடுதலை, சுத்தம் - துப்புரவு, சுத்தத்தங்கம் - தூய பொன், சுக்கில பக்ஷம் - வளர்பிறை, சுயராஜ்யம் - தன்னாட்சி.

நாளையும் இப்பகுதி... (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 42

அ.கி.பரந்தாமனார்...

வடசொல்லுக்கு தமிழ்ச்சொற்கள் : சுவிசேஷம் - நற்செய்தி, சுபாவம் - இயல்பு, சுவீகாரம் - தத்தெடுத்தல்/மகன்மை செய்தல், சூட்சமம் - நுண்மை/நுட்பம், சூரியன் - கதிரவன்,ஸ்தூலம் - பருமை, சேவை - தொண்டு, சேஷ்டை - குறும்பு, செளகரியம் - வசதி, ஞாபகம் - நினைவு, தற்காலிகம் - நிலையில்லா, தர்மம் - அறம்/கடமை, தாகம் - வேட்கை, சாசனம் - பட்டயம், தேதி - நாள், திருப்தி - நிறைவு.

நகரம் - பேரூர், நஷ்டம் - இழப்பு, நிபுணர் - வல்லுநர், நிரந்தரம் - நிலையான, நீதி - நன்னெறி, பகிரங்கம் - வெளிப்படை, பஞ்சாங்கம் - நாளோதி, பரிகாசம் - நகையாடல், பதிவிரதை - கற்புடையாள், பத்தினி - கற்பணங்கு, பத்திரிக்கை - இதழ், பஜனை - கூட்டுப்பாடல், பரீட்சை - தேர்வு, பந்துக்கள் - உறவினர்கள், பாரம் - சுமை, பாலகன் - குழந்தை, பாஷை - மொழி, பாணிக்கிரகணம் - திருமணம்.

பார்வதி - மலைமகள், பிரயாணி - வழிச்செலவினன், பிரசாரம் - பரப்பு வேலை, பிரசாதம் - திருப்பொருள், பிரகாரம் - திருச்சுற்று, பிரதட்சணம் - வலம் வருதல், பிரார்த்தனை - வேண்டல், பூர்வம் - முன்னாள்/முந்திய, பெளர்ணமி - முழுமதி, மத்தியானம் - நண்பகல், மந்திரம் - மறைமொழி, மரணம் - சாவு /இறப்பு, மார்க்கம் - நெறி/வழி, மாதம் - திங்கள், மாமிசம் - இறைச்சி, மிருகம் - விலங்கு.

வடசொல்லுக்கு தமிழ்ச்சொற்கள் தொடர்கிறது நாளையும்.. (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 43

அ.கி.பரந்தாமனார்...

முகூர்த்தம் - நல்வேளை, மோசம் - கேடு, யமன் - காலன்/கூற்றுவன், யந்திரம் - பொறி, யாகம் - வேள்வி, யாத்திரை - திருச்செலவு, யாத்திரிகன் - திருச்செலவினன், யுத்தம் - போர், ரகசியம் - மறை பொருள், ருசி - சுவை, லாபம் - ஊதியம், லோபம் - கஞ்சத்தனம், வம்சம் - குடி, வருஷம் - ஆண்டு, வாகனம் - ஊர்தி, வாக்கியம் - முற்றுச் சொற்றொடர், வாக்குமூலம் - சான்றியம், வாதம் - சொற்போர்.

வாலிபர் - இளைஞர், விகிதம் - விழுக்காடு, விக்கிரகம் - திருவுருவம், விஷயம் - பொருள்/செய்தி, விபத்து - துயர நிகழ்ச்சி, வேகம் - விரைவு, ஜனங்கள் - மக்கள், ஜன்னி - இசிவு, ஜயம் - வெற்றி, ஜாதகம் - பிறப்புக்கணிப்பு, ஜாக்கிரதை - விழிப்பாக, ஜெபம் - தொழுகை, ஜென்மம் - பிறவி, ஜோதிடன் - கணியன், ஸ்தாபனம் - நிலையம், க்ஷவரம் - மழிப்பு,க்ஷேத்திரங்கள் - திருப்பதிகள் ஶ்ரீலஶ்ரீ - தவத்திரு.

இது போதும் என்று நினைக்கிறேன்.. தெலுங்கிலிருந்து வடமொழியை நீக்குவது அரிது, கன்னடத்தில் மிக அரிது, மலையாளத்தில் அரிதினும் அரிது.. இம்மொழிகள் கணக்கு வழக்கில்லா வடசொற்களை கடன் வாங்கிய மொழிகள்.. தங்கள் சிறப்புகளைத் தொலைத்து நிற்கின்றன. ஆனால் நம் தமிழ் மொழி மட்டுமே வடசொல் இன்றி தனித்தியங்கும் மொழியாக விளங்குகிறது.

கூடிய மட்டும் வடசொற்களை தவிர்த்து தமிழில் எழுதுவோமானால் புதுச்சொற்களை உருவாக்கும் ஆற்றல் தமிழுக்கு பெருகும்.. நீங்கள் அதைச் செய்யவீர்கள் தானே.. வாருங்கள் ஊர் கூடி தேரிழுப்போம்..

இந்த தொடரை படித்து வந்த அனைவருக்கும் எனக்கு ஊக்கமளித்த நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.. ஒரு சிறு இடைவேளைக்குப் பின் இதன் இரண்டாம் பாகம் தொடரும்.. தற்சமயம் பிரிவோம் தமிழால் என்றும் இணைவோம்.

#வாழ்க_நற்றமிழ்_வாழ்க_தமிழகம்_வாழிய_தாய்த்திரு_நாடு












No comments:

Post a Comment