Tuesday 10 February 2015

வடதேசி

3. பாட்டி வடை சுட்ட கதையை நம் தமிழ் சினிமா இயக்குநர்கள் இயக்கியிருந்தால் ஒரு ஜாலி கற்பனை...

இயக்குநர் பாலா...

சுடுகாட்டில் உள்ள ஒரு மரத்தில் வசிக்கிறது அந்த பிணந்தின்னி காக்கா.! ஒரு கட்டத்தில் அங்கு வரும் பிணங்களை ஒரு நரிக்கூட்டமே அகோரிகள் போல வந்து தின்றுவிட்டு சுடுகாட்டிலேயே குடியேறி விடுகிறது.! நரிகளின் வரவால் பசியில் வாடிய காகம் பித்துப்பிடித்த சித்தன் போல"உன்னையே எண்ணி நீ பாரு, இந்த நரியால நான் இப்ப பட்னின்னு கூறு" என்று கத்திய படியே சுடுகாட்டை விட்டு பறக்கிறது.!

வெகுநேரம் பறந்த அந்த காக்கா களைப்புடன் இறங்கிய இடம் ஒரு தேயிலைத் தோட்டம். அங்கு கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் பசியாற ஒரு பாட்டி வடை சுட்டு விற்கிறாள்.. இது வரை சதையின் ருசி மட்டுமே அறிந்த காகத்துக்கு வடையின் ருசி அறிய ஆசை பிறக்கிறது. அப்ப பரதேசி போல நியாயமாரேரேரேரேரேன்னு கத்திகிட்டு ஒருத்தன் அங்கு வர பாட்டி அவனுக்கு கை நிறைய வடை தருகிறாள்.!

அந்த பையன் தான் பாட்டியின் பேரன்.. அவன் கையில் உள்ள மேளத்தை கீழே வச்சிட்டு ஒரு பாறையில் உட்காந்து வடையை சாப்பிடும் போது காக்காவை பார்க்குறான் பரிதாபப்பட்டு காக்காய்க்கு வடை போட  பசியில இருந்த காக்கா அவசரமா வந்து வடையை சாப்பிடுது.. அதோட ருசி ரொம்ப புடிச்சு போகுது அந்த பையனுக்கு காக்காவை பிடிச்சி போகுது..ரெண்டு பேரும் நல்ல தோஸ்த்தாகுறாங்க!

அடுத்த காட்சியில் இளங்காத்து வீசுதே, வடை கேட்டு பேசுதேன்னு ரெண்டு பேரும் பாடிக்கிட்டே பிரண்ட்ஷிப்பை டெவலப் பண்ணிக்கிறாங்க.. அந்த எஸ்டேட் கங்காணி அவனோட கடையில் வடைபோட்டு எல்லோரும் அங்கதான் வாங்கணும் அப்டின்னு சொல்றான்.! விலையும் அதிகம் கொதிச்சு போனாலும் கொத்தடிமையான நாம என்ன செய்யறதுன்னு நொந்து கிட்டே மக்கள் வாங்குறாங்க.

வாங்கி சாப்பிட்ட எல்லோருக்கும் உடம்பு முடியாம போகுது.. அவங்க சாகறதுக்கு முன்னாடி அவங்க எல்லோருடைய கிட்னியையும் திருடி விக்க திட்டம் போட்டு இருக்கான் கங்காணி.. இது தெரிஞ்ச பரதேசி ஊரு புல்லா அதை தண்டோரா போட்டு சொல்ல மக்கள் அந்த தேயிலை தோட்டத்த விட்டு கிளம்புறாங்க காக்கா தான் பங்குக்கு கங்காணி போட்ட வடையை எல்லாம் தூக்கிட்டு போகுது..

காண்டான கங்காணி பரதேசி கெண்டைக்கால் நரம்பை அறுத்து அவனை நடைபொணமா ஆக்கிடுறான்.. தன் நண்பனுக்கு இப்படி ஆயிடுச்சேன்னு வெகுண்டெழுந்த காக்கா பாட்டியை பத்திரமா ஒரு இடத்துல கொண்டு போய் விட்டுட்டு நேரா பழைய சுடுகாட்டுக்கு போய் அகோரி நரிங்க கிட்ட இந்த கதையை சொல்லுது.. காக்காவுக்கு உதவ அகோ(ந)ரிகள் ஒப்புக்கொள்கின்றன.

க்ளைமாக்சில் நரிக்கூட்டம் தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருக்க அது தெரியாமல் வரும் கங்காணியை அவை விரட்டி விரட்டி கடித்து குதறுகின்றன.. உயிருக்கு பயந்து ஓடும் கங்காணியை அவை வேட்டையாட கங்காணியின் குரல் அவலக்குரலாக ஒலிக்க வானத்தில் டாப் ஆங்கிளில் இருந்து காகம் சர்ரென பறந்து வந்து மிகச்சரியாக கங்காணியின் குரல் வளையில் கொடூரமாக ஒரு கொத்து...

குரல் வளையில் தன் அலகை நுழைத்து அவன் ரத்தத்தை குடிக்கிறது.அப்போது அதன் கண் முன்னால் பாட்டி கடை மூடியது,  வடை தின்னவர்களுக்கு வயிறு வலித்தது, நண்பனின் கால் நரம்பை அறுத்தது எல்லாம் நினைவுக்கு காட்சிகளாக வந்து போக காக்கா இன்னும் ஆங்காரமாக அழுத்த கங்காணி இறந்து விடுகிறான்.

தூரத்தில் அந்த பரதேசி காலை விந்தி விந்தி நடந்து வருவது அவுட் ஆஃப் போகஸில் தெரிய.. கிளியராக தெரியும் காட்சியில், பச்சை நிற தேயிலைத் தோட்டம் ரத்தக்களறியாய் சிவப்பாய் மாறி ஆங்காங்கே சதைத் துண்டுகள் எலும்புகள் சிதறி கிடக்க மூக்கெல்லாம் ரத்தம் வடிய காக்கா வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்க திரையில்... Film By பாலா.

காகா பிலிம் ஃபேக்டரி பெருமையுடன் வழங்கும்..

பாலாவின் #வடதேசி

No comments:

Post a Comment