Friday 16 October 2015

நைஜீரியப் பயணக்குறிப்புகள் 9

#நைஸ்_நைஜீரியா

PART - 9

மகேஷ் சார் வாசித்த நன்றியுரை தான் அன்று எல்லாராலும் பேசப்பட்டது அதிலும் அது அவரது முதல் மேடைப்பேச்சு..! மதியம் 3 மணிக்கே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் படித்து படித்து  மனதில் உருவேற்றிக் கொண்டிருந்தார்.

கொஞ்சம் நெகிழ்வுடன் எழுதப்பட்ட வார்த்தைகள் அதை உணர்ச்சி ததும்ப படிக்க வேண்டும்... அதில் நன்றி என்னும் சொல்லே இல்லாது நன்றியுரை எழுதித் தந்திருந்தேன்.!

எல்லாவற்றையும் மிக கவனமாகக் கேட்டார் மகேஷ் சார் அவரது ஆர்வம் எங்களை வியக்க வைத்தது.. பயிற்சி எடுத்துக் கொண்டார்.. புளிக்காத நல்ல மாவில் ரொம்பக் கனமாக இல்லாமல் மெலிதாக தோசை வார்த்து ரெண்டு கரண்டி நெய் விட்டு

சின்ன வெங்காயம் பொடிப் பொடியாக அரிந்து போட்டு அதில் லேசாக இட்லி பொடி தூவி முறுகலாகவும் இன்றி பதமாகவும் இன்றி நடுநிலையாக பொன்னிறத்தில் ஒரு ஊத்தப்பம்..

இந்த வர்ணனை போல எழுதப்பட்ட நன்றியுரை ஸ்கிரிப்ட்டைத் தான் மகேஷ் சார்... சாருக்கு ஒரு ஊத்தாப்பம்ம்ம்ம்ம்... எனப் படித்துவிட்டு நன்றி சொல்லப் போவதில்லை.. நன்றி...! எனக்குழப்பி சல்லியடித்தார்...

இதை அவரை கிண்டல் செய்யும் நோக்கில் எழுதவில்லை.. இருப்பினும் அன்றைய இரவு விருந்தில் எங்களால் கலாய்க்கப்பட்டார். அதை அவர் ஸ்போர்டிவாக எடுத்துக் கொண்ட குணம் எங்களுக்கு பிடித்திருந்தது.

நிகழ்ச்சி முடிந்த மறுநிமிடம் நான் கிளம்பியது தோழி லலிதப்ரியா வீட்டுக்கு.. முற்றிலும் சர்ப்ரைஸ் விசிட்.! அடுத்த நாள் காலையில் எங்களுக்கு விமானம்..  நிச்சயம் நான் வரப் போவதில்லை என்றே நினைத்திருப்பாள். நண்பர் ராமசாமியுடன் அவள் வீட்டுக்கு சென்றேன்.. (அவர் அண்ணி தான் என் தோழி)

திடீர் சர்ப்ரைஸ் ராமசாமி சாருக்கும் தான் அவர் வீட்டுக்கும் போனதால். தோழியின் வீடு சென்றது நட்பில் சில இறுக்கங்களை தகர்த்தது.. 45 நிமிடங்கள் செலவிட்டோம்.. அவரது குடும்பத்தினருடன் அறிமுகம் ஆகிக் கலந்து பேசி ஒரு ஸ்வீட் ஒரு ஜுஸ் சாப்பிட்டு அவள் முகத்தில் புன்னகையை பார்த்த பின்பே விடை பெற்றேன்.

நேராக இரவு விருந்து.. லாகோசில் எங்களது கடைசி இரவு.. அருமையான ஒரு இந்திய உணவகத்தில் நீச்சல் குள பின்னணியில் திறந்த வெளி உணவகம். விழாக் குழுவினர் அனைவரும் குடும்பத்துடன் வந்திருந்தனர்.. பரஸ்பரம் அலங்காரமாக இல்லாது மனதில் எழுந்த வார்த்தைகளால் அனைவரும் பேசியது நிறைவாக இருந்தது.

பாராட்டுப் புயலில் சிக்கினோம்.. பிறகு அற்புதமான இந்திய உணவு வகைகளை ருசித்துக் கொண்டே இரவு 8 மணிக்கு துவங்கிய உற்சாகப் பேச்சு 12 மணி வரை நீண்டு சிரிப்பொலிகளால் அந்தக் குளமும் குலுங்கியது.. அறைக்குத் திரும்பினோம். மறுநாள் காலை 7 மணிக்கே எழுந்து தயாரானோம்..

மீண்டும் நண்பர் உத்திரம் வீட்டில் அட்டகாசமான வெண் பொங்கல், வடை,  சாம்பார் சாப்பிட்டு விட்டு விடை பெற்றோம். காலை 11மணி லாகோஸ் விமான நிலையம் வந்தோம்.. சிவா சார், கமல் சார், ராமசாமி சார் மூவர் அணி எங்களை வழியனுப்ப வந்திருந்தனர். கடைசி பாயிண்ட் வரை வந்து வழியனுப்பி வழிச்செலவுக்கும் சில ஆயிரம் நைராக்களையும் தந்து விட்டு பிரியா விடை பெற்றனர்

எல்லா பரிசோதனைகளும் முடிந்து எங்கள் கேட் அருகே சென்ற போது சட்டென ஒரு வெறுமை வந்து சூழ்ந்து கொண்டது ஏதோ எங்கள் தாய்நாட்டை விட்டு கிளம்புவது போல.. விமானத்தில் ஏறி அமர்ந்தோம்.. ஜிவ்வென மேலேறிய போது மெல்ல யாருமறியாமல் முகத்தை துடைத்துக் கொண்டோம்.. எங்களுக்கு மட்டுமே தெரியும் நாங்கள் துடைத்தது எங்கள் கண்ணீரை என்று.


நிறைந்தது.

No comments:

Post a Comment