Friday 16 October 2015

நைஜீரியப் பயணக்குறிப்புகள் 3

#நைஸ்_நைஜீரியா

PART - 3

அறைக்கு வெளியே கேட்ட காலடியோசைகள் தேய்ந்து மறைய கிடு கிடு கிடுவென புல்லட் பைக் ஓடுவது போன்ற சத்தம்.. பதறினோம்.. சில விநாடிகளில் கரண்ட் வந்தது... அந்த சத்தம் ஜெனரேட்டர் ஓடும் சத்தம் என்பது நினைவுக்கு வந்தது.. ஆளாளுக்கு கொடுத்த பீதியில் அந்த சில நிமிடங்கள் பதை பதைப்பாகவே இருந்தது. லாகோசை பொறுத்தவரையில் தினசரி 8 மணிநேர மின்வெட்டு அமலில் உள்ளது.

இன்வெர்ட்டர், யூ.பி.எஸ், ஜெனரேட்டர் என அவரவர் வசதிப்படி அவைகள்  இல்லாத வீடுகளோ கடைகளோ அங்கு இல்லை. இது இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக அப்படித்தானாம்.. இப்ப நம்ம தமிழ்நாடு பரவாயில்லையோன்னு தோணுது.. தூக்கம் போனது  அதிகாலை 4:30 மணி நம்ம ஊருக்கு காலை 9 மணி.. வாங்க சூரியன் உதிப்பதற்குள் லாகோஸ் மக்களைப் பத்தி தெரிஞ்சுக்குவோம்.

நாங்க அங்க போன அக்டோபர் 1 ஆம் தேதி தான் அவங்க சுதந்திர தினம்..! பிரிட்டிஷிடம் இருந்து 1960 அக்டோபர்1ஆம் தேதி சுதந்திரம் பெற்று1963 அதே அக்டோபர்1ஆம் தேதி குடியரசு ஆகி ஒரு நாள் அரசு விடுமுறையை மிச்சம் பிடித்து வைத்திருக்கிறார்கள். நைஜீரியாவின் தலைநகர் அபூஜா... ஆனா நாட்டின்  பெரிய ஊரு லாகோஸ் தான். அவர்களது கரன்சி பெயர் நைரா.. நம்ம 1ரூபாய் அங்க 3 ரூபாய்.

நைஜர் என்னும் ஆறு ஓடுவதால் நைஜீரியா எனப் பெயர் வந்ததாம். பாதி கிறிஸ்துவ மதம் பாதி இஸ்லாமிய மதம் அரசு மொழி ஆங்கிலம் Hausa, lgbo,Yoruba ,இந்த மூணும் தான் முக்கிய ஆப்பிரிக்க மொழிகள் இது தவிர ஏறக்குறைய 20 மொழிகள் பேசப்படுகின்ற ஊரு. கொஞ்சம் டாக்குமெண்ட்ரி ஃபீல் வருதா ஒரு இரண்டு பாரா அப்படித் தான்  இருக்கும் இந்த நைஜீரியா தான் ஆப்பிரிக்காவின் முக்கிய நாடு.

2014 இல் ஆப்பிரிக்காவில் அதிக பொருளாதாரத்தை ஈட்டித்தந்த நாடு உலகளவில் 20வது இடம்.. அது மட்டுமல்ல ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை உள்ள நாடும் இது தான் கிட்டத்தட்ட 20 கோடி பேர். க்ரூட் ஆயில் வளம்மிக்க நாடு இந்த நாட்டில் தான் உலகிலேயே தரமான க்ரூட் ஆயில் கிடைக்கிறது. எபோலா காய்ச்சலை வெற்றிகரமாக முறியடித்த முதல் நாடு நைஜீரியா தான்.

அதன் பிறகுதான் அமெரிக்கா கூட அவர்கள் வழி முறையை பின் பற்றினார்களாம். உலகிலேயே அதிக இளைஞர்களை மக்கள் தொகையில் வைத்திருக்கும் நாடு நைஜீரியா.. 1.109 டிரில்லியன் டாலர்களை தங்களது பொருளாதார மதிப்பில் ஈட்டி 2014 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது

ஓ.கே டாக்குமெண்ட் ரி ஓவர்.. நைஜீரிய மக்களிடம் இரண்டே ஏற்றத் தாழ்வுகள் தான்.. ஒண்ணு பணக்கார அம்பானி இல்லாட்டி பிச்சைக்கார அந்தோணி.. நடுத்தர வர்க்கம் அப்படின்னு ஒண்ணு கிடையவே கிடையாது.. அங்க மிடில் க்ளாஸ் அப்பர் மிடில் கிளாஸ் எல்லாம் நம்ம இந்தியர்கள் தமிழர்கள் தான்.. இவ்வளவு நல்ல ஊரை ஏன் பாதுகாப்பு இல்லைன்னு பயமுறுத்துனாங்கன்னு யோசித்தேன்.. அப்போது...

அறைக் கதவு தட்டப்பட்டது வியூ ஹோலில் பார்த்தால் முரட்டு ஆப்பிரிக்கர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.. அங்கெல்லாம் கதவை தட்டி விட்டு துப்பாக்கியடன் உள்ளே வந்து திருடுவது சகஜம் என்றெல்லாம் படித்திருந்தது வேறு நினைவுக்கு வந்தது.. என்ன செய்வது என்றே தெரியவில்லை மீண்டும் அவர் கதவைத் தட்டினார் பட படவென்று.... அறையில் தொலைபேசி அலறியது.

எடுத்து பேசினோம் தலைவர் கமல்நாத் சார் பேசினார்.. என் டிரைவர் ஜும்ப்போவை அனுப்பியிருக்கேன் கதவை தட்டுனா திறங்க என்றதும் தான் போன உயிர் வந்தது.. கதவை திறந்தோம்.. குட்மார்னிங் மாஸ்டர் என்றபடி உள்ளே வந்தார் ஜும்ப்போ.. அவரது ஆப்பிரிக்க ஆங்கில உச்சரிப்பு குத்மார்னிங் மாஸ்தர் என விநோதமாக இருந்தது.

என் தங்கை அருணா அங்கு தான் வசிக்கிறார் (சித்தியின் பெண்) அவர்கள் வீட்டில் தான் காலை சாப்பாடு.. தங்கை கணவர் ரவி தான் என்னை இந்த விழாக் குழுவினருக்கு அறிமுகம் செய்தவர் அவர் வீட்டில் தான் நேற்று இரவே சாப்பிட்டு இருக்கவேண்டும்.. விமானம் தாமதமானதால் ப்ளான் மாறியது. கிளம்பினோம்..

நான்கு தெரு தள்ளி தான் வீடு இருப்பினும் நடக்கவிடவில்லை இந்தத் தெருக்கள் ஒவ்வொன்றிலும் குரூப் குரூப்பாக இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர் இவர்கள் தான் ஏரியா பாய்ஸ் இவர்கள் உதவுவதும் உண்டு உபத்திரவம் தருவதும் உண்டு.. "பாஸ் அப்ப நாம காட்டியும் கொடுக்குறோம்... கூட்...."என்னும் டயலாக் நினைவுக்கு வந்தது. இந்த குரூப்பில் சில ஒக்கடா பைக் ஓட்டுநர்களும் இருந்தார்கள்.

ஒரு க்ரூப்பா தானய்யா அலையறாங்க என்ற வடிவேலு வசனம் மிகப் பொருத்தம். தங்கை வீட்டில் சுடச்சுட அருமையான இட்லி & சாம்பார், மெதுவடை, கொஞ்சம் ஸ்வீட் பழரசம் என சிம்பிளான ஆனால் சூப்பரான டிபன்.. அவர்களுடன்  கொஞ்ச நேரம் பேசிவிட்டு கிளம்புகையில் என் பள்ளித்தோழி லலிதப்ரியாவிடம் இருந்து போன். என்னைப் பார்க்க தங்கை வீட்டுக்கே வருவதாக.. வந்தார்...

கொஞ்சம் மலரும் நினைவுகள் எங்கள் பால்ய காலத்து மதுரை ஏரியாவுக்குள் எல்லாம் போய் வலம் வந்தோம்... அது உங்களுக்குப் புரியாது.. (எங்க ஏரியா உள்ள வராதே) அங்கு டீச்சராக இருக்கிறார் என் தோழி.. நைஜீரிய மக்கள் பற்றி அவளிடம் கேட்டேன் அதற்கு அவள் சொன்ன பதில் எனக்கு அப்படியே ஆச்சரியம் அளித்தது.. அது....

வரும்......

No comments:

Post a Comment