Friday 16 October 2015

நைஜீரியப்பயணக்குறிப்புகள் 4

#நைஸ்_நைஜீரியா

PART - 4

"யாரு நைஜீரிய மக்களா? ரொம்ப நல்லவங்க மிகுந்த விசுவாசமும் மரியாதையும் உள்ளவங்க" லலிதாவிடம் இந்த பதிலை நான் எதிர்பார்க்கவில்லை.! அப்புறம் ஏன் இவ்வளவு பயமுறுத்துனாங்க என்றேன்.. ஏன் மதுரைக் காரங்கன்னா ரவுடித்தனம்ன்னு சினிமாவுல காட்டுறாங்க அங்க என்ன எல்லாரும் அருவாளோடவா திரியறாங்க.? லலிதாவின் இக் கேள்வி வேதம்புதிது பாலுத்தேவருக்கு விழுந்த அறை போல என் காதில் விழுந்தது..

ஏன் கொலை கொள்ளை நடைபெறாத ஊரு எதுவும் உலகத்துல இருக்கா சொல்லு வெங்கி? தோழியின் இந்தக் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.. இங்க கொஞ்சம் கெட்ட ஆட்களும் இருக்காங்க ஆனா நம்ம ஊரைவிட பரவாயில்லை என்றாள். அதற்குள் சிவா சார் வீட்டில் இருந்து அழைப்பு.. லலிதா வீட்டுக்கு நாளை சாப்பிட வருவதாக சொல்லிவிட்டு விடை பெற்றோம் நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல்..!

அடுத்த தெருவில் இருக்கும் சிவா சார் வீட்டுக்கு மீண்டும் காரில் பயணம்.. இப்போது கவனித்தேன்.. அங்கு வீட்டுக்கு மட்டுமல்ல தெருவுக்கும் கேட் இருந்தது அதற்கு காவலாளிகள் இருந்தார்கள். தெரிந்த முகங்கள் மட்டுமே அனுமதி அடுத்து வீடுகளிலும் கேட் அங்கும் காவலாளி. லலிதப்ரியாவின் வார்த்தைகள் எவ்வளவு தூரம் உண்மை சிவா சாரிடம் கேட்க முடிவெடுத்தேன்..

சிவா சாரும் அவரது மனைவி சுமதி மேடமும் வரவேற்றார்கள் அருமையான ஒரு ஜுஸ் பிறகு சம்பிரதாய பேச்சு மீண்டும் நைஜீரிய மக்களைப் பற்றி ஆரம்பித்தேன்.எடுத்தவுடன் சிவா சொன்னார் அதெல்லாம் வீட்டு கதவை தட்டி உள்ளே வந்து நெற்றியில் துப்பாக்கி வைத்து மிரட்டுவாங்க என்றார் கூலாக.. பதை பதைத்து இங்க நம்ம தமிழர்களிடம் கூடவா என்றோம்.

மெல்ல தலை சாய்த்து அவர் மனைவியை குறும்பாக பார்த்தார். எங்க வீட்டுல 2தடவை அப்படி நடந்து இருக்கு என்றார் சுமதி மேடம் அதைவிட கூலாக... அய்யோ என்ன சொல்றிங்க என்றோம்.. ஆமா வீட்டுக்கு வருவாங்க கேட்டதை கொடுத்தா பேசாம போயிடுவாங்க நகை, பணம், செல், லேப்டாப் அவ்வளவு தான்.. மத்த எந்த பொருள் மீதும் கை வைக்க மாட்டாங்க பெண்களிடம் அத்து மீற மாட்டாங்க ஆனா கேட்டதை சத்தமில்லாம கொடுத்துடணும்....

திஸ் இஸ் த எண்ட் ஆஃப் சாலமன் கிரண்டி எனச் சொல்வது போலச் சாதாரணமாகச் சொன்னார். நைஜீரியாவில் மக்கள் இரண்டு வகை ஒன்று விசுவாசமாக உழைப்பது இன்னொன்று வில்லங்கமாக திருடிப் பிழைப்பது.. இதற்காக நம் மக்கள் போய்த் தொலை என்று கொஞ்சம் பணத்தை மாமூல் மாதிரி தருகிறார்கள். ஆப்பிரிக்காவில் நம்மவர்களுக்கு இரட்டைச் சம்பளம்.

ஒன்று இந்தியாவில் வங்கிக் கணக்கில் அப்படியே சேர்ந்துவிடும் மற்றொன்று அலவன்ஸ் போல வீடு, கார், வேலைக்காரி, டிரைவர்களின் ஊதியம் சாப்பாடு இதற்கெல்லாம். சிலர் இதிலேயும் மிச்சம் பிடித்து சேமிக்கிறார்கள். நம் தமிழர்கள் இல்லங்களில் ஆப்பிரிக்கர்கள் பணி புரிவது அதிகம். வீட்டுக்கு ஒரு ஆப்பிரிக்க பணிப்பெண் ஒரு ஆப்பிரிக்க டிரைவர்..

சிலர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எல்லாம் வேலை பார்க்கிறார்களாம்.! அவ்வளவு எஜமான விசுவாசம் மரியாதை, கடின உழைப்பு.. முக்கியமாக தன் எஜமான்/னி பற்றி யாரிடமும் எந்தப் புரணியும் பேசுவதில்லை. வற்புறுத்திக் கேட்டாலும் பதில் வராது. இப்படி வேலைக்காரர்கள் நமக்கு இல்லையே என்ற பொறாமை எங்களுக்குள் மெல்ல எழுந்தது.

இங்குத் திருடிப் பிழைப்பவர்கள் கூட அவசியம் ஏற்பட்டால் ஒழிய தாக்குவது இல்லை மிரட்டலோடு சரியாம்.. நம்ம ஊரு மாதிரி சுத்தமா வீட்டை துடைச்சிட்டு போற அளவுக்கெல்லாம் திருடுவது இல்லை.. தன் தேவைக்கு ஏற்றபடி திருட்டு.. இந்த நாட்டில் குழந்தைகள் பாலியல் பலாத்காரமே இல்லை என்ற செய்தி இன்னும் வியப்பை தந்தது.

அதிலும் கடந்த 2 ஆண்டுகளாக இந்தச் சம்பவங்கள் முற்றிலும் குறைந்து விட்டனவாம் எங்காவது அஜாக்கிரதையாக இருந்தால் மட்டுமே நடக்கிறதாம்..பணத் தேவை இருப்பவர்கள் முன் நாம் போய் வாலண்டியராக வண்டி ஏறிவிடக்கூடாது என்பதற்காகத் தான் எங்களுக்கு இவ்வளவு எச்சரிக்கைகளும் எனப் புரிந்தது.

மீண்டும் ஒரு சூப்பரான டீ வந்தது.. மெல்ல டீயை உறிஞ்சிய படி சிவா சார் குடும்பத்துடன் நிறைய பேசினோம்.. கமல்நாத் சார் வந்தார்.. வாங்க பெப்சி தயாரிக்கும் ஃபேக்டரிக்கு போகலாம் என்றார்.. கிளம்பினோம்.. கார் சாலையில் விரைந்த போது நீண்ட டிராபிக்கில் நம் சென்னை போல சாலையில் நின்று சிக்னலில் பலர் வியாபாரம் செய்வதைக் கண்டேன்.

யாரு சார் இவங்க என்றோம் அவர் சொன்ன பதிலில் அட இது புதுசா இருக்கே என தெரிந்தது... இன்னொரு உழைக்கும் வர்க்கம் அது... அந்த வியாபாரிகளின் தொழில் பற்றி...

வரும்....

No comments:

Post a Comment