Friday 16 October 2015

நைஜீரிய பயணக்குறிப்புகள் 2

#நைஸ்_நைஜீரியா

PART - 2

விமானம் ஓடு பாதையில் இருந்து விலகி சேற்றில் இறங்கியிருந்தது.. விமானங்கள் அதிகம் விபத்துக்குள்ளாவது தரை ஏறும் போதும் இறங்கும் போது தான்.. அதன் பின் பழுது பார்த்து சரியான பாதைக்கு திருப்பி சுமார் 2 மணிநேரம் கழித்து தான் விமானத்திலிருந்து நாங்கள் கீழிறங்கினோம்.

நைஜீரியா வந்த முதல் சகுனமே இப்படி.. விமான நிலைய சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியேறினோம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான தலைவர் கமல்நாத் உபதலைவர் சிவக்குமார் விழாக் குழு உறுப்பினர்  ராமசாமி ஆகியோர் காத்திருந்தனர். காரில் ஏறி கிளம்பினோம்.

வெளிநாடு பயணத்தில் காணும் வானளாவ உயர்ந்த கட்டிடங்கள் ஏதுமில்லை.. நம்ம விழுப்புரம், செஞ்சி, ஆரணி பக்கம் போன மாதிரி இருந்தது.. சாலைகளில் பழைய கார்கள் தான் அதிகம் தென்பட்டன. ஆச்சரியமாக நம்ம ஊரு ஆட்டோக்கள் அதிகம் இருந்தன..இந்தியர்கள் தான் அறிமுகப் படுத்தினார்களாம்.

வசதியானவர்கள் கார் வைத்திருக்க மக்களின் லோக்கல் போக்குவரத்துக்கு 3 வாகனங்கள் இருக்கிறது அவை கேகேநாபெப் (ஆட்டோ)ஒக்கடா (பைக்)டேன்ஃபோ(மினி வேன்) பல டேன்ஃபோக்கள் எல்லாம் நம்ம ஊரு டவுன் பஸ் கணக்கா பட்டப் பழையதாக இருந்தது. வண்டி பாடியில் ஏராளமான கம்பி கயிறுகள் வைத்து பாகங்களை கட்டி இருந்தனர்.

பாடி கட்டுதல் என்பதை தப்பா புரிஞ்சிகிட்டாங்க போல.. ஒக்கடா என்பது பைக் சர்வீஸ்..அந்தப் பெயரில் ஒரு ஏர்லைன்ஸ் இருந்ததாம்.. நிச்சயம் பொருந்தும்.. சாலையில் பறக்கிறார்கள் டிரிபிள்ஸ் எல்லாம் சர்வ சாதாரணம் ஹெல்மெட்டும் அணிவதில்லை.. மிக இளவயது ஆண்களே ஒக்கடா ஓட்டுகிறார்கள்.

ஆட்டோ டிரைவர்களாக ஆண் பெண் இருவரையுமே பார்க்க முடிந்தது.நம்ம ஊரு போல லோக்கல் பஸ் ஸ்டாண்டு, ஆட்டோ ஸ்டாண்டு தெருவோரக் கடை, மெக்கானிக் ஷாப் எல்லாம் அப்படியே இருந்தன மக்கள் மட்டும் ஆப்பிரிக்கர்களாக இல்லாம இருந்தா இதை நம்ம தமிழ்நாட்டு பக்கம் ஒரு ஊருன்னு சொல்லிக்கலாம்.

பொருட்களைத் தலைச் சுமையாக சுமந்து நடந்து கொண்டிருந்தவர்களையும் பார்க்க முடிந்தது.. நமக்கும் அவர்களுக்கும் நிச்சயம் மரபு வழித்தொடர்பு இருந்திருக்கலாம். எங்கள் கார் அங்கிருந்த இந்திய உணவகத்தில் நின்றது. அவர்கள் ஊரில் மாலை 5:30 மணி நம்ம ஊரில் இரவு 10 மணி நாலரை மணி நேர வித்யாசம்.

சோ நம்ம ஊர் நேரத்துக்கு அது டின்னர்.. சப்பாத்தி,பட்டர் நான்,சிக்கன் என வட இந்திய சாப்பாடு.. தால் கிச்சடி என்று நம்ம ஊரு உப்புமா வந்தது.. எனக்கு நைஜீரியாவில் இது இரண்டாவது அபசகுனம்..
அதை புறக்கணிக்க முடியாது சாப்பிட... அட ரியலி சூப்பராக இருந்தது பருப்பு உப்புமா. அங்கிருந்து நேராக தங்கும் ஓட்டல் வந்தபோது இரவு மணி 8.

அன்று எதுவும் வேலை இல்லை.. மேலும் மணி நம்மூருக்கு இரவு12:30 ஆனாலும் கொஞ்சம் விழித்திருக்க சொன்னார்கள் அந்த ஊரு டைம் செட்டாகும் என்று.. இரவு உணவு ஓட்டலுக்கு அடுத்த கட்டிடத்தில் இருக்கும் நண்பர் உத்திரம் என்பவர் வீட்டில்... சிக்கன் குழம்பு சட்னி சாம்பாருடன் இட்லி, தோசை, சப்பாத்தி தந்தூரி என அட்டகாசமான சாப்பாடு.. ஷாம்பெயின் எல்லாம் தந்து அமர்க்களப் படுத்திவிட்டார்.

அவர்கள் ஊர் 12:30 மணிக்கு தான் படுக்கப் போனோம்.. தெருவில் இறங்காதிங்க... ஓட்டலுக்கு உள்ளேயே இருங்க கதவை தட்டினா யாருன்னு பார்த்துட்டு திறங்க.. இப்படி பல பாதுகாப்பு வழிகளை சொல்லி சாப்பிட்டதை அப்போதே ஜீரணமாக்கி விட்டார்கள்.நன்கு உறங்கிக் கொண்டிருந்தோம்.. திடீரென பவர்கட் ஆனது கும்மிருட்டு வெளியே சத்தம் குழப்பமான காலடி யோசைகள் கேட்டது...

வரும்....


No comments:

Post a Comment