Tuesday 27 October 2015

லவ்லி லாகோஸ் - 1

#லவ்லி_லாகோஸ்

PART -1

இந்தப் பதிவில் நான் எழுதப் போகும் ஆப்பிரிக்க சிகை அலங்காரம் லாகோஸ் மட்டுமின்றி எல்லா ஆப்பிரிக்கர்களுக்கும் பொருந்தும். ஆப்பிரிக்கர்களின் கூந்தலை டெக்ஸ்டர்டு ஹேர் என்றழைப்பர். ஸ்பிரிங் வடிவம் கொண்டது அவர்கள் முடி..  சுருள் சுருளாக முடிச்சு போல சுருண்டிருக்கும். சீப்பால் தலைவாரவோ பிரஷ் செய்யவோ முடியாது..

மேலும் ஹேர் ஸ்டிரைட்டிங் செய்தாலும் நாய் வால் நிமிர்த்தும் கதை தான்... திரும்ப சுருண்டு கொள்ளும்.. Helix Shape என்னும் இந்தக் கூந்தல் அமைப்பு அவர்களுக்கு ஓர் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியது. நம் இந்தியப் பெண்களின் நீண்ட கூந்தல் மீது அவர்களுக்கு கொள்ளை ஆசை ஆனாலும் இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவில் சுருண்ட முடித் தலையர்களாக பிறந்து விட்டோமே என ஏங்கி தவித்தனர்.

வெகு காலம் நீடித்த இந்த சிக்கலுக்கு ஒரு புதிய சிகையலங்கார கண்டுபிடிப்புக்கு பின்பு தான் தீர்வு கண்டனர்.. இன்று உலகிலேயே சிகை அலங்காரத்துக்கு அதிகம் செலவழிப்பது ஆப்பிரிக்கர்களே. அதிலும் புகழ் பெற்ற ஹேர் ஸ்டைல் அலங்காரம் தான் கானா வீவிங் என்னும் அலங்காரம். Ghana Braids என்னும் பெயரில் கிட்டத்தட்ட 100 க்கும் அதிகமான ஸ்டைல்கள். அதென்ன கானா வீவிங்..!

நம்ம ஊரு பெண்கள் போடும் ஜடையைப் போலவே குட்டிக் குட்டி ஜடைகள் தாம்.. மை டியர் மார்த்தாண்டன் படத்தில் பிரபு தலையில் இருக்கும் ஜடையை நினைவு படுத்திக் கொள்ளவும். இம்முடியை ஒரு வகையான சிந்தெடிக் இழைகளால் தயாரிக்கிறார்கள்.. பராமரிப்பதும் எளிது.. இதை ஒவ்வொரு ஆப்பிரிக்க சுருள் முடிச்சிலும் இணைத்து விட்டால் அது தான் கானா வீவிங்.. இமயமலைச் சாமியார்கள் போல ஜடா முடி போல இருக்கும்.

தலையிலேயே சுருண்டு கிடந்த தங்கள் முடி தோள் வழியாக அருவி போல நீண்டு தொங்குவது ஆப்பிரிக்க பெண்களுக்கு பேரானந்தத்தை அளித்தது.. Ghana cornrow, banana cornrow, Cherokee cornrow, invisible cornrow போன்ற ஸ்டைல்கள் அதிக பிரபலம் Pencil Braids என்னும் ஸ்டைல் இளைஞிகளுக்கு ரொம்பப் பிடித்த ஹாட் ஸ்டைல். கோல்டு, பிளாக், சில்வர், வயலட், க்ரே, பர்கண்டி என பல வண்ணங்கள் வேறு.

முடி பஞ்சத்தில் இருந்த ஆப்பிரிக்கர்கள் தற்போது பஞ்சவர்ணத் தலையர்களாகத் திரிகிறார்கள். கிட்டத்தட்ட 5 மணிநேரம் பச்சைக் குத்துவது போல தலையில் வலி இவையெல்லாம் இந்த அலங்காரத்திற்காக பொறுத்துக் கொள்கிறார்கள். அந்தளவிற்கு நீள முடியின் மீதான காதல் அவர்களுக்கு. ஒரு வேளை போய்யா மயிரு என்றால் கூட சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்வார்கள் போல... ஒரு வகையில் வாழும் கவரிமான்களாக வாழ்கிறார்கள் ஆப்பிரிக்க பெண் மான்கள்.

ஆப்பிரிக்க பெண்கள் தங்கள் காஸ்மெடிக், துணிகளுக்கு செலவிடுவதை விட முடிக்கு செலவிடுவது அதிகம் 18 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பாதிக்கும் பெண் கூட மாதம் 5 ஆயிரம் ரூபாயை இதற்கு சராசரியாக செலவழிக்கிறார்கள்... சுருக்கமாகச் சொன்னால் நம்ம ஊரு பெண்கள் நகைக்காவும் ஆப்பிரிக்க பெண்கள் சிகைக்காவும் அதிகம் செலவழிக்கிறார்கள்.

இந்த சிகை அலங்காரத்தால் தங்கள் தாழ்வு மனப்பான்மை மறைந்து தன்னம்பிக்கை பெருகுவதாக தற்போது அவர்கள் உணர்கிறார்களாம்.. அடுத்த முறை இது போல முடி அலங்காரம் செய்யப்பட்ட ஆப்பிரிக்கர்களை பார்த்தால் ஒரே ஒரு வார்த்தை அது அழகாக இருக்கிறது எனப் பாராட்டுங்கள் அவர்கள் முகத்தில் விரியும் மகிழ்ச்சி அழகாக பல தன்னம்பிக்கைக் கதைகளைச் சொல்லும்...

இனி அடுத்தப் பதிவில் லெபனான் உணவுகள்...

வரும்...

No comments:

Post a Comment