Friday 16 October 2015

நைஜீரியப் பயணக்குறிப்புகள் 6

#நைஸ்_நைஜீரியா

PART - 6

பெப்சி நிறுவன அதிகாரி பழனிச்சாமி என்னிடம் சொன்னது இது தான் நான் சேலம் பாரதி வித்யாலயா பள்ளியில் படிச்சேன் என்று.. நான் படித்த அதே பள்ளிக்கூடம்.! எனக்கு 2 ஆண்டுகள் சீனியர்.. அதாவது நான் பத்தாம் வகுப்பு படித்த போது அவர் 12ஆம் வகுப்பு..! சேலத்தில் ஒரே பள்ளியில் ஒன்றாக ஒருவருக்கொருவர் தெரியாமல் அருகருகே  உலா வந்த நாங்கள் பல்லாயிரம் மைல்களுக்கப்பால் இன்னொரு கண்டத்தில் சந்தித்துக் கொண்டது வியப்பான ஒன்று தானே.

பெப்சி ஃபேக்டரியை சுற்றிப்பார்த்தோம்... லெபனான் முதலாளியின் பிளாண்ட் அது அதைப் போல மூன்று பிளாண்ட்டுகளுக்கு பழனிச்சாமி ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி.! நாங்கள் சுற்றிப் பார்த்த ஃபேக்டரி மட்டும் ஆண்டுக்கு 25 கோடி பாட்டில் பெப்சி மற்றும் இதர குளிர்பானங்களை தயாரிக்கிறது.. எல்லாமே ஆட்டோ மெடிக்.. உயர்ந்த தொழில் நுட்பம்.. ராணுவ அணிவரிசை போல கன்வேயர் பெல்ட்டுகளில் பாட்டில்கள் அணிவகுத்து ஓடிக் கொண்டிருந்தன.

புது பாட்டில்கள் ஒரு புறமும் அணிவகுத்து வர பழைய பாட்டில்கள் ஸ்டீமரில் கழுவப்பட்டு இன்னொரு புறம் வர இவை இரண்டும் ஒரே பாதைக்கு திருப்பி விடப்பட்டு பெப்சியை நிரப்பி மூடி போட்டு அதை சீல் செய்து தயாரிப்பு தேதியை பிரிண்ட் செய்து வெளியே அனுப்பி விட அது அங்கு கிரேடுகளில் 24 ஆக நிரம்பி அக் கிரேடுகள் கடைசி நிறுத்தத்திற்கு போக அங்கு தான் மனிதர்கள் உழைப்பு அதை எடுத்து அடுக்க வேண்டும்.. இத்தனையும் 20 வினாடிகளில்..!

இந்த பத்தியை நான் டைப் அடிக்கும் நேரத்தில் குறைந்தது 200 பாட்டில்களாவது வெளியேறி இருக்கும்.. அவ்வளவு துல்லியம்.. அடுத்து பெட் பாட்டில்... உங்கள் கை கட்டை விரல் சைசில் பள்ளியின் டெஸ்ட் டியூப் போல தோற்றத்தில் இருக்கும் பிளாஸ்டிக் குழாய்கள் ஃப்ளோ செய்யப்பட்டு பாட்டிலாகி அதன் பின் நிரப்பப் பட்டு மூடி போட்டு லேபிள் ஒட்டி 24 பெட் பாட்டில் கட்டுகளாக wrap செய்யப் பட்டு வெளியேற அங்கும் கடைசியில் தூக்கி வைக்க மனிதர்கள்.

விட்டலாச்சார்யா மாயாஜால காட்சிகள் போல இருந்தது.. அங்கு பணி புரியும் நைஜீரிய தொழிலாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். நிச்சயம் இந்த ஃபேக்டரி விசிட் புதுமையான அனுபவமாக இருந்தது. பழனிச்சாமி சாரிடம் அன்போடு விடை பெற்றுக் கொண்டு... நேராக சென்றது மதிய உணவருந்த... ஆனால் அங்கு மாலை 5 மணி.. வித்தியாசமான உணவு கிடைக்குமா எனக் கேட்டேன் வழக்கம் போல... லெபனான் நாட்டு உணவு ஓகேவா..?

கேட்டார் கமல் சார்.. ஓகே என்றோம்.. மீண்டும் டிராபிக் ஜாமில் பயணம் 6:30 மணிக்கு தான் ஓட்டலுக்கு போனோம்.. அந்த லெபனான் உணவுகள் பற்றி தனிப்பதிவு எழுத உத்தேசித்து இருப்பதால்.. அதை  கை கழுவி விடுங்கள்.. ஓகேவா.. நாங்களும் கை கழுவிவிட்டோம்.. மீண்டும் சிவா சார் வீடு... ஞாயிறு நடக்கவிருக்கும் கலை நிகழ்ச்சிகள் பற்றிய ஆலோசனைகள் நடந்தது.. அப்போது தான் தெரியும் என் தங்கை கணவர் ரவி தொடங்கியது தான் இந்த அமைப்பு... இதில் உள்ள உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கு தலைப்பு எல்லாம் அவர் தேர்ந்தெடுத்தது அவரும் இக்குழுவில்ஒரு முக்கிய அங்கம்  என்று சிவா சொன்னார்.

மேலும் கமல்நாத், சிவக்குமார், மேடி, ரவி ரங்கராஜன், உத்திரம், ராமசாமி, நன்றியுரை மகேஷ் (மகேஷ் சாருக்கு இந்த அடை மொழி பற்றி பின்னால்) உள்ளிட்ட பலர் இதில் பல்வேறு பணிகளை திறம்பட செய்து வந்திருக்கிறார்கள்... ஓவியப் போட்டி, செஸ், கோலப்போட்டி, லாகோஸ் சூப்பர் சிங்கர் என கடந்த ஒரு மாதமாக திட்டமிட்டு பல போட்டிகளை நடத்தி இறுதிப் போட்டியும் எங்கள் கலை நிகழ்ச்சியும் நடப்பதாக அறிந்தோம்.. அத்தனை துல்லியமாக திட்டமிட்டு ஏற்பாடு செய்து ஈவண்ட் மேனேஜிங் நிறுவனத்தினர்களான எங்களை வியப்பில் ஆழ்த்தினார்கள்.

எங்கள் வியப்புக்கு காரணம்... இது அவர்கள் முதல் நிகழ்ச்சி..! இதிலேயே அவர்களுக்கு இவ்வளவு தேர்ச்சி.. மேலும் நிகழ்ச்சியின் போது அங்கு மூத்த அமைப்பான நைஜீரியா தமிழ்ச் சங்கத்தைப் பற்றி எங்களுக்குச் சொல்லி நிகழ்ச்சிக்கு அவர்களது ஆசியும் ஆதரவும் இருப்பதால் அதன் தலைவர் ரகு, ரவிஷங்கர், அவரது துணைவியார் ஹேமா முதலியவர்களை மேடையில் அடிக்கடி பேர் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்க வேண்டும்.. என அன்போடு கேட்டுக் கொண்டார்கள். இரவு 11 மணிவரை நீண்ட பேச்சு சுமதி மேடம் சொன்ன ஒரு வார்த்தையில் நின்றது... "போதும் சாப்பிட வாங்க" என்றார்.

கிறிஸ்டோபர் லெபனான் உணவை அவ்வளவாக ரசித்து சாப்பிடாமல் கொறித்து இருந்தார்.. அவருக்கு நல்ல பசி எனக்கு வெறும் பசி.. ஆவலுடன் கை கழுவி விட்டு உணவு மேஜைக்கு சென்றோம்.. ஆவி பறக்க வந்தது........ உப்புமா....! என் ஆவியும் பறந்தது...

வரும்...

No comments:

Post a Comment