Tuesday 27 October 2015

லவ்லி லாகோஸ் - 2

#லவ்லி_லாகோஸ்

PART -2

எங்கள் பயணத்தின் இரண்டாவது நாளில் ஒரு லெபனான் உணவகத்திற்கு சென்றோம். பொதுவாக வித விதமான உணவு வகைகளை ருசிப்பதில் எனக்கு அலாதிப் ப்ரியம் உண்டு (அதான் தெரியுமேங்குற உங்க மைண்ட் வாய்சை கேட்ச் பண்ணிட்டேன்) இதற்கு முன் சில வீர தீர விபரீத வரலாறுகள் நினைவுக்கு வந்தன.

செஷல்ஸ் தீவுகளில் ஆக்டோபஸ் கறி, மலேசிய நல்லி எலும்பு, தாய்லாந்தில் பூச்சிக் கறி, சீன பாம்பு நூடுல்ஸ், அரபு ஒட்டகம் என ருசித்தது உண்டு.. ஆனால் இங்கு அது போல இம்சைகள் இல்லை.. உலகின் பாரம்பரிய உணவு வகைகளில் லெபனான் உணவும் ஒன்று. ஆயிரக்கணக்கான வருடங்கள் பாரம்பரிய மிக்கது லெபனான் உணவு.

லெபனான் உணவுகளில் பெரும்பான்மையானவை ரோமானியர்கள் உணவு முறையிலிருந்து உருவானவை..எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் சிரியா உணவுக் கலாச்சாரமும் இதில் பின்னிப் பிணைந்திருக்கும்.. யார் கண்டது எகிப்திய பிரமிடுகளுக்குள் டம்மியாக கிடக்கும் பல மம்மிகள் கூட இதை சாப்பிட்டு இருக்கலாம்.!

பிரான்ஸ் ஆதிக்கத்திற்கு பிறகு அவர்கள் சில உணவு முறைகளை புகுத்தி இருந்தாலும் அது லெபனீஸ் உணவுக் கலாச்சாரத்தை ஏதும் பாதிக்கவில்லை. வாங்க இனி லெபனான் உணவுகளை ருசிக்கலாம்.. முதலில் ஃபலாஃபல் (Falafal) நம்ம ஊரு பணியாரம் கொஞ்சம் பெருசா பிரவுன் கலரில் இருந்தா எப்படியிருக்குமோ அப்படி இருந்தது.

இதனோடு அவித்த ஆலிவ்.. தக்காளி, புதினா மற்றும் க்ரீன் இலைகள் வந்தது.. இது 100% வெஜிடேரியன் உணவு சாப்பிடுங்க என்றனர்.. தயக்கமாக எடுத்து கடித்தேன்.... அட சூப்பர் இது நம்ம ஊரு மசால் வடையாச்சே! ஆமாங்க அப்படியே மசால் வடை தான் நம்ம வடைக்கு  அரைப்பது போலில்லாமல் மிக மிக நைசாக அரைத்திருந்தார்கள்.

சூடாக சாஃப்டாக இருந்ததால் அந்தத் தட்டு உடனே காலி அடுத்து "ஹம்மஸ்" இதுதான் புகழ் பெற்ற லெபனான் உணவு.. கொத்துக்கடலையில் எள் சேர்த்து மென்மையாக ஃபேர்னஸ் க்ரீம் போல அரைத்து பரிமாறப்படும் உணவு..லெபனான் உணவுகளில் பெரும்பாலும் ஆலிவ் ஆயில் தான்,மேலும் பூண்டு,எலுமிச்சை அதிகம் உபயோகிக்கிறார்கள்.

அதே போல் சிக்கன், மட்டன்,மீன்கள் எல்லாம் பெரும்பாலும் கிரில்டு முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும்.. மட்டன் லாம்ப் என்னும் வகை ஆட்டு இறைச்சி.. நம்ம ஊரில் பிரியாணியில் கறித்துண்டுகளை நீக்கி விட்டு குஸ்கா என்பது போல 100% சைவமான ஹம்மஸில் சிக்கன் துண்டுகளை போட்டு சிக்கன் ஹம்மஸ் என்கிறார்கள்.

இதற்கு மெயின் கோர்ஸ் கார்லிக் ரொட்டி... யெஸ் நம்ம ஊரு நான் போல ஆனால் குட்டி குட்டியாக முக்கோணமாய் மென்மையான சப்பாத்திகள்... ஒரு ஸ்பூன் ஹம்மசை ஆலிவ் எண்ணை விட்டு கலக்கி ஜாம் தடவுவது போல ரொட்டியில் தடவி சிக்கன் துண்டுகளை வைத்து அதேபோல இன்னொரு ரொட்டியிலும் தடவி ஒன்றாக்கி..

சாப்பிடவேண்டும்.. ஆகா எனக்கு அப்படியே நார்த் இண்டியா ஃபீல் வந்ததே தவிர வேறெதுவும் தெரியவில்லை.. அடுத்து வந்தது ஃபிஷ் ஃபில்லட் (Fish fillet) மீனிலிருந்து எலும்பெல்லாம் எடுத்துவிட்டு இளநீரில் இருக்கும் வழவழ தேங்காய் போல தோசையாக வந்தது.. ஆலிவ் காய்கள் தக்காளி க்ரீன் சாலட் என காம்பினேஷன் பக்கா.

கடைசியாக வந்தது பக்லவா (Baklava) இந்த உணவு இப்ப உலகப் பிரபலம் நம்ம வீட்டு கல்யாண விருந்தில் கூட இதை இப்ப மெனுவில் சொல்றோம்.. அது தாங்க டெசர்ட்ஸ்..! லெபனான் தான் இதை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.. முக்கோணம் அல்லது டைமன்ட் வடிவ ஆரஞ்சு க்ரீம் கேக்குகள் உலர் பருப்புகள் தேன் கலந்து தந்தனர்.

ஏவ்வ்வ்... மொத்தத்தில் நம்ம இந்திய உணவு மாதிரி தான் இருந்தது அருமையான உணவு... வெளிநாட்டில் மாட்டிக்கொண்ட நம்ம ஆட்கள் கண்ணில் லெபனான் ரெஸ்ட்டாரண்ட் தெரிந்தால் தைரியமாகப் போய் சாப்பிடலாம்.. இதில் ஹம்மஸ் செய்வது எப்படின்னு சுமதி சிவக்குமார் மேடம் ரெசிபி அனுப்பறேன்னு சொன்னாங்க..!

மேடம் ஞாபகப் படுத்திட்டேன்... எனக்கு இன்பாக்சிலோ வாட்ஸ் அப்பிலோ அனுப்புங்க அதை பதிவிடுறேன்... முடிவா நம்ம சாப்பாடு சூப்பர் டென் ரேட்டிங் படி லெபனான் உணவுக்கு 100க்கு 85 மார்க் தருகிறேன்.

அடுத்த பதிவு லாகோஸ் நவக்கிரகம் மற்றும் முருகன் கோவில்கள்..

வரும்....

ஹம்மஸ் செய் முறை...

கொண்டை கடலை - 100 கிராம் (அரை டம்ளர்)
பூண்டு - இரண்டு பல்
லெமன் - ஒன்று
(தஹினா) வெள்ளை எள் - முன்று தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
வெள்ளை மிளகு தூள் - கால் தேக்கரண்டி
பப்பரிக்கா பவுடர் -சிறிது
ஆலிவ் ஆயில் - முன்று மேசை கரண்டி

செய்முறை:

1.கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும்.

2.வெந்த கொண்டைகடலையை ஆறியதும் பூண்டு, வெள்ளை எள் எலுமிச்சை சாறு உப்பு தேவையான அளவு தண்ணீர் ( கடலை வெந்த தண்ணீரே கூட பயன் படுத்தலாம்) சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

3.ரொம்ப கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

4. கடைசியாக ஆலிவ் ஆயில் கலந்து பப்பரிக்கா பவுடர் கொண்டு அலங்கரிக்கவும்

5. சுவையான ஹமூஸ் ரெடி

குறிப்பு

1.இது நம் சுவைக்கேற்ப தயாரிக்கலாம், ஆனால் கலர் தான் சிறிது வித்தியாசப்படும்.

2. வெள்ளை மிளகு இல்லை என்றால் சிறிது மிளகாய் தூள், (அ) கருப்பு மிளகும் சேர்த்து கொள்ளலாம்.

3. இதையே சிறிது தயிர் வெங்காயம் சேர்த்து கொஞ்சம் நீர்க்க அரைத்தால் பிலாபில் சாண்ட்விச், சவர்மா சாண்ட்விச்சுக்கு பயன் படுத்தும் சாஸ் ஆகவும் பயன் படுத்தலாம்.

4. கைபடாமல் பிரிட்ஜில் வைத்து என்றால் நான்கு நாட்கள் பயன் படுத்தலாம்.

5. அடிக்கடி ஹமூஸ் சாப்பிடுபவர்கள் எள் பேஸ்ட் தனியாகவே விற்கிறது கடைகளில் அதை வாஙகி வைத்து சுலபமாக பூண்டு பொடி சேர்த்தும் தயாரிக்கலாம்.

6. வெளிநாடுகளில் கொண்டைகடலை கூட டின்னில் ரெடி மேட் கிடைக்கிறது.

7. புளிப்பு சுவை அதிகம் விரும்பதவர்கள் அரை பழம் பிழிந்து கொண்டால் போதுமானது.

8. இது குபூஸுக்கு என்றில்லை சப்பாத்தி ரொட்டி பூரிக்கும் தொட்டு சாப்பிட நல்ல இருக்கும்.

No comments:

Post a Comment