Tuesday 27 October 2015

லவ்லி லாகோஸ் - 7

#லவ்லி_லாகோஸ்

PART - 7

லாகோஸ் நிலப்பகுதியில் இருந்து விக்டோரியா தீவுக்கு புறப்பட்டோம்.. புகழ் பெற்ற லேக்கா மார்க்கெட் இங்கு தான் இருக்கிறது.. கொஞ்சம் வானளாவிய கட்டிடங்களை இங்கு பார்க்க முடிந்தது. உங்களுக்கு இறைவனின் அருளும் டிராபிக்கும் இல்லாது இருந்தால் லாகோசில் இருந்து 30 நிமிடத்தில் இங்கு வரலாம்.

ஆனால் பெரும்பாலும் இரண்டும் ஒத்துப் போவது இல்லை... நாங்கள் போக ஒன்றரை மணிநேரம் ஆயிற்று. இந்தப் பயணத்தில் தென் அட்லாண்டிக் பெருங்கடல் மேல் 14 கீ.மீ நீளமான ஃபோர் வே டிராக் போடப்பட்டு இருந்தது... நம் இராமேஸ்வரம் பாலம் எல்லாம் ஜுஜுபி.

பாலம் துவங்கும் இடத்தில் பேக் வாட்டர் ஏரி போல தோன்றும் கடல் போகப் போக உலகநாயகன் (விஸ்வரூபம்) ஆகிறது. மறு கரையே தெரியாத அதன் பிரம்மாண்டம் வியக்க வைக்கும்... இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பழமொழி ஏன் ஆப்பிரிக்கர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற உண்மை தெரிந்தது.

நல்ல வேகத்தில் பாலம் ஏறிய எங்களது கார் நாங்கள் கடலை காண்பதற்கு ஏதுவாக டிரைவர் ஜும்போவால் மித வேகத்திற்கு மாற்றப்பட்டது.. தரையில் இருந்து 60 அடி உயரம் கீழே கடல் கடற்பகுதிக்கே உரிய உப்பு கலந்த காற்று அதில் கார் பயணம் வித்தியாசமான அனுபவம்.. ஏற்கனவே பஹ்ரைனிலிருந்து சவுதி எல்லைக்கு கடல் பாலத்தில் பயணித்த அனுபவமுண்டு.

ஆனால் அரபிக் கடல் சூர்யாவின் சிக்ஸ்பேக் அட்லாண்டிக் அர்னால்டின் சிக்ஸ் பேக்... அந்த பிரம்மாண்டம் தான் பெரும் வித்தியாசம்.. ஃபலோமா என்பது அந்த பாலத்தின் பெயர்.. நைஜீரியாவின் பொருளாதார ஊர் தான் விக்டோரியா தீவு.. இங்கு வாழ்வது இந்தியாவில் மும்பையில் வாழ்வது போல கொஞ்சம் காஸ்ட்லி.. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தத் தீவில் தான் அமைந்துள்ளன.

மீன் பிடித்தல் முக்கியத் தொழில் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை... கடலின் மறுகரை தென் அமெரிக்கா... இந்தப் பக்கம் கறுப்பர்களின் கால்களையும் அந்தப்பக்கம் வெள்ளையர்களின் கால்களையும் பிரித்து பார்க்காது நனைத்துச் செல்லும் அட்லாண்டிக் கடலம்மாவின் அன்பு மனிதர்களுக்கு ஏன் புரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

நாளை லேக்கா மார்க்கெட்..

வரும்...

No comments:

Post a Comment