Friday 16 October 2015

நைஜீரியப் பயணக்குறிப்புகள் 5

#நைஸ்_நைஜீரியா

PART - 5

சிக்னலில் வியாபாரம் செய்யும் இவர்களுக்கு பெயர் Go - Slow Boys பொதுவா நம்ம ஊரு சிக்னலில் புத்தகங்கள், கார் கண்ணாடியில் ஒட்டும் சன்லைட் புரொடக்டர், கார் துடைக்க பயன்படும் உபகரணங்கள் வெளியூர் என்றால் பழங்கள் தின்பண்டங்கள் வாங்கலாம்.. ஆனால் இங்கு பெற்ற தாய் தந்தையைத் தவிர எல்லாம் வாங்கலாம்.

நான் பார்த்தபோது ஒருவர் ஃபர்னீச்சர்களே விற்றுக் கொண்டிருந்தார்.! ஆப்பிரிக்காவின் டிராபிக் ஜாம்.. அவ்வளவு இனிப்பாக இருக்காதாம் சில நேரங்களில் 3 மணிநேரம் எல்லாம் சர்வ சாதாரணம்.. அப்படி மாட்டிக் கொண்டவர்களுக்கு இந்த வியாபாரிகள் தான் கடவுள். இத்தனைக்கும் யாரும் போக்குவரத்து விதிகளை மீறுவதில்லை.

கூல்டிரிங்ஸ், ஸ்நாக்ஸ், கை கெடிகாரங்கள், கூலிங்கிளாஸ், போட்டோ ப்ரேம்கள், கார் சார்ஜர்கள், மொபைல் சார்ஜர்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், செருப்புகள், சட்டைகள்... அப்பப்பா..  அப்போது கூலான பீர் பாட்டில்கள் மதுபானங்கள் விற்க வந்தார் ஒருவர்.. டாஸ்மாக்கினர் பார்த்தால் இங்கும் இச்சேவை வரலாம்.!

Go Slow பெயர்க்காரணம்.. டிராபிக் ஜாம் நகர நகர அதன் வேகத்திற்கு ஈடாக மெதுவாகவும் வேகமாகவும் நடந்து நடந்து விற்கவேண்டும்.. பல நேரங்கள் ஓட வேண்டும் எம்.ஜி.ஆர்.பாட்டான ஓடி ஓடி உழைக்கணும் இவர்களுக்கு அப்படியே பொருந்தும். பலரின் பசி போக்குவது மட்டுமின்றி நிற்காமல் ஓடி உழைக்கிறார்கள்.

நைஜீரியர்கள் மீது பெரு மதிப்பு வந்தது.. அந்த ஊரின் கலாச்சாரம் புரிந்து கொண்டால் அங்கு வாழ்வது மிக இனிது எளிது. எங்கள் கார் அருகே வந்த வியாபாரியிடம் ஒரு கார் சார்ஜரும் இரண்டு பெப்சி பாட்டில்களும் வாங்கினார் கமல் சார்... சார் இப்ப பெப்சி கம்பெனிக்கு தானே போறோம் இவர்களிடம் ஏன் வாங்க வேண்டும் என்றோம்.

அந்த கேள்விக்கு அவர் சொன்ன பதில் தான் மேலே நான் சொன்னது கிட்டத்தட்ட 1 மணிநேரம் ஆயிருந்தது... எங்கள் கார் ஜானவாசத்தை விட மெதுவாக ஊர்ந்து  கொண்டிருந்தது. சரியாக 10 நிமிடத்திற்கு பின் டிராபிக் சீராக வேகமெடுத்தது.. எங்கள் பயணம் பெப்சி தயாரிப்பு நிறுவனத்தில் போய் நின்றது. அங்கு உயர் பொறுப்பில் ஒரு தமிழர்..!

அவர் பெயர் பழனிச்சாமி..! அவருக்காக காத்திருந்தோம் உள்ளே அழைத்துச் சென்றார்கள்.. 15 நிமிட காத்திருப்பிற்கு பின் சாரி சாரி என்ற கட்டியத்துடன் ஓடி வந்தார் பழனிச்சாமி.. வெகுநேரம் வாசலில் எங்களுக்கு காத்திருந்தாராம் டிராபிக் விஷயம் கேள்விப்பட்டு மீண்டும் ஃபேக்டரிக்கு திரும்பிப் போய் பிறகு இப்போது வருகிறேன் அதனால் தான் காக்க வச்சிட்டேன் என்றார்.

அவர் இருக்கும் பதவிக்கு இவ்வளவு பணிவாக மரியாதையாக எல்லாம் எங்களுக்கு பதில் சொல்ல அவசியம் இல்லை.. ஆனால் இயல்பாகவே அவரது குணம் அது தான் என கொஞ்ச நேரத்தில் தெரிந்தது.. எங்களைப் பற்றி விசாரித்தார்.. அப்போது அவர் சொன்ன ஒன்றை கேட்டு சார் உண்மையாவா சொல்றிங்க என கூவிவிட்டேன்...

வரும்...

No comments:

Post a Comment