Tuesday 27 October 2015

லவ்லி லாகோஸ் - 3

#லவ்லி_லாகோஸ்

PART - 3

லாகோசில் உள்ள இலுப்புஜு (Ilupeju) இந்திய ஒருமைப்பாட்டை விளக்கும் ஓர் அற்புத இடம்... அதற்கான முழுத் தகுதி பெற்ற இடம் என்பதில் மிகையில்லை.. ஏன் என்பதை இப்பதிவின் இறுதியில் சொல்கிறேன்.. ஓ.கே...!  இந்த இலுப்புஜு பகுதியில் தான் நைஜீரியத் தமிழ்ச் சங்கம் கட்டிய இரண்டு கோவில்கள் உள்ளன.

ஒன்று முருகன் கோவில் மற்றொன்று நவக்கிரகக் கோவில்... இதில் முதலில் கட்டப் பட்டது முருகன் கோவில் தான்... 1997 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் முருகன் சன்னதி புனரமைக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது.. அதே போல 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நவக்கிரகக் கோவில் கட்டப்பட்டு  கும்பாபிஷேகமும் நடந்தது.

உலகிலேயே முதன் முதலாக  மேற்கு ஆப்பிரிக்காவில் நவக்கிரக கடவுளர்களுக்கு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் என்பதில் இங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல எல்லாத் தமிழர்களுக்குமே பெருமை தானே... இங்குள்ள பக்தர்களும் இந்தியாவிலிருந்து சில கம்பெனிகளும் நைஜீரிய தமிழ்ச்சங்கமும் தந்த பொருளுதவியில்...

இக்கோவில்கள் கட்டப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.. தமிழர்களும் தங்கள் சொந்த ஊர் ஞாபகங்களை அவ்வப்போது இந்த சன்னதியில் வந்து மீட்டுக்கொள்கின்றனர்.. கிருத்திகை, சஷ்டி, தைப் பூசம், விசாகம் என முருகனுக்கு உகந்த விழாக்கள் மட்டுமின்றி தமிழர்கள் விழாக்கள் அனைத்தையும் இங்கு கொண்டாடுகின்றனர்.

நல்லதொரு பண்டிகை நாளில் நம் மக்கள் கோவிலில் கூடி மகிழ்வது.. அதுவும் இன்னொரு கண்டத்தில் எவ்வளவு நிம்மதியானது... அந்த நிம்மதி இங்கு கூடும் போது கிடைக்கிறது என்றனர் ஒருவர் பாக்கியில்லாது.. திரை கடலோடி திரவியம் தேடுவதும் கோவில்கள் கட்டுவதும் பண்டைய தமிழர்களின் கலாச்சாரம்...அந்தக் கலாச்சாரம்

இன்றும் லாகோஸ் வாழ் தமிழர்கள் மத்தியில் மறவாது இருப்பது இந்த கலாச்சாரம் என்றுமே அழியாது என்ற நம்பிக்கையை உலகிற்கு அளிக்கிறது. மேலும் இலுப்புஜு பகுதியில் தெலுங்கு அசோசியேஷன் மக்களால் ஸ்ரீ பாலாஜி திருக்கோவிலும் கேரளா சமாஜத்தினரால் அருள்மிகு ஐயப்பன் திருக்கோவிலும் கட்டப்பட்டுள்ளது.

இந்திய ஒருமைப்பாட்டை விளக்கும் இடம் என்று இப்பதிவின் ஆரம்பத்தில் நான் கூறி இருந்ததற்கு பதில் சொல்லும் வேளை இது... ஆம் இந்தப் பதிவில் நான் சொன்ன அனைத்துக் கோவில்களும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது தான் லாகோசில் சிறப்பு.. இப்போது சொல்லுங்க இலுப்புஜு இந்திய ஒருமைப்பாட்டுத் தலம் என்பது சரிதானே..!

பாவ மன்னிப்பு : இக் கட்டுரையில் குறிப்பிட்ட கோவில்களை நாங்கள் நேரில் போய்ப் பார்க்கவில்லை அதே இலுப்புஜுவில் தான் தங்கியிருந்தோம்.. நேர மாற்றம், களைப்பு, குறைந்த நாட்கள் (இருந்தது 4 நாட்கள் அதில் 1 நாள் நிகழ்ச்சி 1 நாள் தூக்கம்) ஆகிய காரணங்களால் எங்களால் கோவிலுக்கு போக முடியவில்லை..

அருள்மிகு முருகன், பாலாஜி, ஐயப்பன், நவக்கிரக நாயகர்கள் அனைவரிடமும் எங்களுக்கு பாவ மன்னிப்பு வழங்கும் படி மன்றாடி கேட்டுக் கொள்கிறோம்..

நாளை நைஜீரிய இரவு அனுபவங்கள்...

(ஆல் காட்ஸ் பாவ மன்னிப்பு ஆல்சோ ஃபார் திஸ் எக்ஸ்பீரியன்ஸ் டூ)

வரும்...

No comments:

Post a Comment