Tuesday 27 October 2015

லவ்லி லாகோஸ் - 8

#லவ்லி_லாகோஸ்

PART - 8

லேக்கா மார்க்கெட் என்பது கைவினைப் பொருட்களுக்கும் முத்து பவழம் போன்ற நகைகளுக்கும் புகழ் பெற்ற மார்க்கெட்.. இருப்பினும் எல்லா விதமான பொருட்களும் இங்கே கிடைக்கிறது. மார்க்கெட் என்றால் நாங்கள் கற்பனை செய்து வைத்திருந்த பிம்பத்தை உடைத்தது அதன் தோற்றம்.

தமிழ் சினிமாவில் வரும் அதே மார்க்கெட் போல தான் இருந்தது... சில இடங்களில் மதுரை ஞாயிற்றுக் கிழமை சந்தை போலவும் சில இடங்களில் பழைய கொத்தவால் சாவடி போன்ற அமைப்பு... தகரம் அல்லது ஆஸ்பெட்டாஸ் கூரைகள் வேயப்பட்ட சிறு சிறு கடைகள்.

அங்கு செல்லும் பாதை படு மோசமாக குண்டும் குழியுமாய் சகதியாக கிடந்து தமிழ்நாட்டுக்கு சவால் விட்டது.. அந்தச் சகதியில் எங்கள் கார் கலர் மாறி ஊர்ந்து மார்க்கெட்டில் இறக்கிவிட்டது... மார்க்கெட் உள்ளே சென்றோம்... ஆஸ்பெட்டாஸ் கூரை என்பதால் எந்தக் கடையிலும் வெகு நேரம் செலவிட முடியவில்லை.

அங்கு வீசிய வெப்பத்தில் எங்கள் உடலிலேயே ஒரு மினி அட்லாண்டிக் கடல் உருவாகி அலையடித்துக் கொண்டிருந்தது. நன்கு பேரம் பேசி பொருட்களை வாங்குவது நம் சாமர்த்தியம்.. நைஜீரியர்கள் கைவினைப் பொருட்களை செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள்... அவை மிகுந்த கலை நயமிக்க பொருட்களாக இருக்கும்.

தத்ரூபமான மரச் சிற்பங்கள், ஓவியங்கள்,  கலைப் பொருட்கள் இவையெல்லாம் நாம் ஏ.சி ஹாலில் கண்காட்சியாக பார்த்திருப்போம்... ஆனால் அவை இங்கு சர்வசாதாரண கடைகளில் இருந்தன. எங்கள் பர்ச்சேசை முடித்துக் கொண்டும் வியர்வையை துடைத்துக் கொண்டும் வெகு விரைவில் வெளியேறி கார் ஏறி சகதி பயணத்தை மீண்டும் கடந்து ஹைவே சாலையை தொட்ட பிறகு காரில் உள்ள ஏ.சி எங்கள் வியர்வைக் கடலை ஆவியாக்கிக் கொண்டது.

எனது வெளிநாடு பயணங்களில் எந்த நாட்டைப் பற்றியும் இப்படி எழுதியதில்லை... அக்1 ஆம் தேதி இரவு தான் அங்கு போனோம் அக் 5 காலையில் விமானம் இடைப்பட்ட மூன்று நாட்களில் ஒரு நாள் நிகழ்ச்சி மீதி இரண்டு நாட்களை நேர மாற்றத்தில் சிக்கித் தடுமாறி ஒரு வழியாக 5 ஆம் தேதி தான் செட் ஆனோம்.. ஆனால் அதற்குள் திரும்பி விட்டோம். இருப்பினும் அங்கிருந்த குறைவான மணி நேரங்களில் நிறைவான பயணமாகத் தோன்றியதற்கு லாகோஸ் வாழ் தமிழர்களின் அன்பும் உபசரிப்பும் என்றால் அது மிகையில்லை..  உங்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சம் நெகிழ நன்றியினை சமர்ப்பிக்கிறோம்.

நிறைந்தது.

No comments:

Post a Comment