Sunday 10 November 2013

விடையில்லா கேள்வி.....

யாருக்கு தீபாவளி....

பெருநகரத்தின் ஆரவாரமாக பரந்து விரிந்து இருந்தது அந்த துணிக்கடை.. பளீரிடும் விளக்குகளும் உருவாக்கப்பட்ட குளிரும் கசிந்து கொண்டு இருந்தன.. ஆடை வேட்டையாடும் ஆவேசத்தில் பலர் உள்ளே வந்து கொண்டும் வேட்டையாடிய களைப்பில் பலர் வெளியேறிக்கொண்டும் இருந்தனர்..

 சமூகத்தின் எல்லா தட்டுகளும் சங்கமித்து சமரசத்தை உலா வரச் செய்து கொண்டிருந்தனர்... வாசலில் வந்தவர்களை வணங்கி வணங்கியே சுணங்கி போனார்கள் வரவேற்பாளர்கள்... வணக்கத்தை அலட்சியப் படுத்தி சிலர், புன்முறுவலித்து சிலர், பதில் வணக்கமிட்டு சிலர் என கலவையாய் மனிதர்கள் வந்து கொண்டே இருந்தனர்...

சிறு குழந்தைகளின் ஆரவாரம்,இளைஞர்களின் துள்ளல்,பெண்களின் ஆசை,கணவர்களின் பெருமூச்சு எல்லாம் அந்த காற்றில் கலந்து இருந்தன... ஆடை வாங்க வந்த இளம் பெண்கள் சிலர் அணிந்திருந்த ஆடைகள் ஆண்களின் ஆசையை மாற்றிக் கொண்டிருந்தன...எதிர்பாராது சந்தித்துக் கொண்ட நட்புகளும் உறவுகளும் கை குலுக்கி கொண்டனர். வாங்கிய, வாங்கப்போகும் ஆடைகள் பற்றி சிறு விவாதங்களும் நடந்தன... 

அவர்கள் விட்டுப் பெண்களிடம் இருப்பதே தான் மற்ற பெண்களுக்கும் என்பதை மறந்த சில கயமை கண்கள் குனிந்து ஆடைகளை தேடிக் கொண்டிருந்த பெண்களின் அங்கங்களை ரசித்துக் கொண்டிருந்தன... மின் தூக்கிகளில் நெரிசலாய் ஏறி கசகசப்பாய் மேல் தளங்களில் மனிதர்கள் கொட்டப்பட்டனர்... 

மின் தூக்கியின் நெரிசலில் பெண் ஸ்பரிசம் கண்டவர்கள் இன்ஸ்டண்ட் கனவில் ஸ்விஸ் சென்று டூயட் பாடிக்கொண்டு இருந்தனர்... 25 நடுத்தர குடும்பங்களின் தீபாவளி பட்ஜெட் தொகையில் தனக்கு ஒரே ஒரு பட்டுப்புடவை எடுப்பவருக்கு மத்தியில் குன்றுகளாக குவிக்கப்பட்டிருந்த புடவை மலைகளில் ஏறிக்கொண்டு இருந்தனர் மத்திய வகுப்பினர்.... 

பெரும்பாலும் அழகான ஆடைகள் அலமாரிக்குள்ளேயே இருக்க அடுத்தவர் கைகளில் இருப்பதையே பார்த்துக் கொண்டிருந்தன பெண்களின் கண்கள்....தொலைக்காட்சி விளம்பரத்தில் காட்டப்பட்ட சேலையையும் சேலையே கட்டாத நடிகையின் பெயரில் வந்த சேலையையும் கேட்டு கேட்டு வாங்கினர் பெண்கள்...

அத்தனை சேலையையும் வாங்கிடும் பேராவலும் அதிக சேலைகள் வாங்கியவர் மீது பொறாமையும் வெளிப்பட்டு கொண்டிருந்தன..சேலைகள் தேர்வும் அடுத்து மேட்சிங் தேர்வும் டெஸ்ட் மேட்சாய் நீண்டு கொண்டிருந்தன... குழந்தைகள் பிரிவில் அப்பாவின் வருமானம் தெரியாது குழந்தைகள் கேட்டுக் கொண்டிருக்க முடிந்த வரை வாங்கித்தந்தும் முடியாத போது அதட்டியும் சமாளித்து கொண்டிருந்தனர்... 

புரிந்து கொண்ட குழந்தைகளும் புரண்டு அழுத குழந்தைகளும் கலவையாய் இருந்தனர்...ஆனால் ஒருவர் கூட ஐந்தரை மீட்டர் பட்டுப்புடவயின் விலையில் எப்படி ஒன்றரை மீட்டர் குழந்தையின் ஆடை விலை எனறு கேட்கவில்லை... ஆண்களோ கட்டம், கோடு, பிரிண்ட் இம்மூன்றில் ஏதாவது ஒரு சட்டையும் வழக்கமான கால் சட்டை நிறங்களில் ஒன்றோடும் திருப்தி பட்டுக்கொண்டனர்... 

சிலர் எல்லோருக்கும் எடுத்தது போக மீதி இருந்த தொகைக்குள்ளும் மீதி இல்லாவிட்டால் பிறகு எடுக்கலாம் என தியாக மனப்பான்மையுடனும் புத்தன் ஆனார்கள்.. தலை தீபாவளி மாப்பிள்ளைகள் மாமனாரின் சொத்தை கிழித்துக் கொண்டு ஒரு புறமும்,, இவ்வளவு கிழிந்தால் தான் பேஷன் என இளைஞர்கள் ஒரு புறமும் தேர்வு செய்தனர்... 

பெற்ற அப்பா அம்மாக்களுக்கு ஐந்து நிமிடத்தில் வேட்டி சட்டையும் புடவைகளும்தெரிவு செய்யப்பட்டது.....எல்லாம் முடிந்து பணம் செலுத்துகையில் நினைத்த தொகையில் வாங்கியவர்கள் நிம்மதியாகவும் வாங்காதவர்கள் வருத்தத்தோடும் நின்றுகொண்டிருந்தனர்... கடன் அட்டைகள் தேய்க்கப்பட்ட இயந்திரம் நீ பட்டது இவ்வளவு கடன் என காகிதத்தில் துப்பியது... கல்லா பெட்டிக்குள் மூச்சு திணறிக்கொண்டிருந்தார் காந்திஜி.. 

அடுத்து வாங்கிய ஆடைகளை வாங்க க்யூவில் நிற்க வேண்டும்... வெளியேறி நல்ல ஓட்டலில் சாப்பிட வேண்டும்... வாங்கிய துணிகளுக்கு கூடுதலாக ஒரு பேக் கேட்க வேண்டும்..ஒரு வழியாக எல்லாம் பெற்றுக் கொண்டு கூட்டத்தில் நீந்தி வெளியேறி வாசலுக்கு வந்த போது மாங்காய் வண்டிகள் , பலூன் கடைகள், சுண்டல் வியாபாரிகள், பொம்மை விற்பவர்கள் இவர்களுக்கு நடுவே அழுக்கு ஆடையுடன் கைக்குழந்தை ஒன்றுடன் நின்று யாசகம் கேட்ட பெண்ணுக்கு ஐந்து ரூபாய் தரும் போது என் மகள் கேட்டாள் அப்பா இவங்களுக்கு புதுத்துணி யார் வாங்கித் தருவா?

என்னிடம் பதிலில்லை... உங்களிடம்...!!!!

No comments:

Post a Comment