Saturday 9 November 2013

பாட்டி சொல்லாத கதை...

பாட்டி.... ஒரு ஞாபகம் ...

என் அம்மாவின் அம்மா ருக்மணி என்கிற ருக்கு பாட்டி..

பிராமணர் சமூகத்தின் பிரஜை... கலப்பு மணம் புரிந்த என் தாய்க்கு முதல் மகன் அவளுக்கு நான் முதல் பேரன் என்ற வகையில் நான் அவளுக்கு ரொம்ப ஸ்பெஷல் ...13 வயதில் திருமணம் ..13 பிள்ளைகள்..

மூத்தவர் என் அம்மா...3 பிள்ளைகள் இறந்து விட்ட போதிலும் 10 பிள்ளைகளை வளர்த்தவர் ..அதிலும் 2 பிள்ளைகள் நோய் வாய்ப்பட்டு இறந்த போதிலும் கலங்காத மனம் கொண்டவள்..

நாராயணஐயர் என்கிற என் தாத்தாவின் சக தர்மிணி..எனக்கு 5வயது ஆகும் போதே இறந்து விட்டார் தாத்தா..அதற்கு பின் என் 25வது வயதில் தான் பாட்டியை இழந்தேன். இரண்டு சிறுநீரகமும் பழுதாகி இறந்தவள் பாட்டி...

அழகாக கதை சொல்லுவாள், இனிமையாக பாடுவாள், ஸ்லோகங்கள் சொல்லித் தருவாள் என் மிமிக்ரி திறமை பாட்டியின் ஜீனில் இருந்தே வந்தது என்பதை அவள் பி.எஸ். வீரப்பா குரலில் பேசிய போது தெரிந்து கொண்டேன்..

என்னேரமும் ஆசாரம் மடி என தொட்டு பார்த்ததில்லை என் பாட்டியை..ஆனால் கடங்காரா கால் அமுக்குடா என்று அவள் அனுமதித்த வேளை என் வாழ்வில் வசந்தம்..10 வயதில் தாயை இழந்தவன் நான் என் பாட்டியின் கால் தொடும் போதெல்லாம் என் அம்மாவை ஸ்பரிசித்தது போல் ஒருணர்வு...

ஆம் எனக்கு தாயாகவும் இருந்தவள் பாட்டி.... கல் சட்டியில் பழைய சாதமும் தயிரும் இட்டு 4வகை ஊறுகாயுடன் அவள் உருட்டி தந்த உணவு இந்த உலக உருண்டையில் எங்கும் கிடைக்காது...

கண்டிப்பு ஆசாரம் இவையே அவள் வகுத்து கொண்ட எல்லைகள்.. பாட்டி ரசம் வைத்தாள் என்றால் அதில் விசம் வைத்தாலும் சாப்பிட்டுவிடுவேன் அந்தளவிற்கு அதன் ரசிகன் நான்..ஒரு வத்தகுழம்பு சுட்ட அப்பளம் வைத்தாலும் அது ராஜ உணவாக இருக்கும் கை மணம் அவளின் தனி சிறப்பு..

வெறும் ஊறுகாய் தயாரித்தே 18 வருடங்கள் குடும்ப பொருளாதாரத்தை கட்டி காத்தவள்.. இசைப்பிரியை.. எந்நேரமும் ஏதாவது பாடலை முணுமுணுத்து கொண்டிருப்பாள்..எந்த ராகம் என்ன தாளம் என்று மிகச்சரியாக சொல்லிவிடுவாள்..

நீ பெரிய நடிகனாக வருவே என்று என்னை அடிக்கடி சொல்லுவாள்.. எப்படி பாட்டி என்பேன் இவ்வளவு பொய் சொல்றியேடா உனக்கு கற்பனை அதிகம் அதுனால தான் என்பாள்.. இன்றளவிற்கும் இது பெரிய சைக்காலஜி ..மிகச்சரியாக தன் பிள்ளைகளையும் பேரன் பேத்திகளையும் கணித்தவள்...

பாத்திரம் உருளும் சத்தத்திலேயே வெங்கடேசா என்ன பண்றே.. பாலு..கடங்காரா.. உமா வாடி இங்கே.. சுந்தர்ராஜு ஏண்டா கண்ணு..என யார் செய்திருப்பார்கள் என உள் அறையில் இருந்தே கண்டு பிடித்து சொல்வாள்..

ஸ்காட்லாண்ட்யார்டில் வேலை பார்க்கும் திறமைக்கு கொஞ்சமும் குறையாதது அவள் கணிப்பு.ருக்கு பாட்டி மக்கு பாட்டி...என்று நாங்கள் கத்திவிட்டு ஒடுவதையும் கடங்காரன் எப்படி கத்துறான் பாரு என்று ரசிப்பாள்..

வெகு நாட்கள் சந்தேகம் ஏன் இவள் கடன் காரா என்றே திட்டுகிறாள் வேறு வார்த்தையே சொன்னதில்லை என்று போன வருடம் என் மாமா சொன்னார் தாத்தா வாங்கிய கடனை பிள்ளைகள் மேல் போடாமல் ஒற்றை ஆளாய் நின்று அதை தீர்த்தார் என்று..

அதனால் தான் துன்பம் தரும் போதெல்லாம் எங்களை கடங்காரா என்று அழைத்தார் என அறிந்தபோது அழுது விட்டேன்..

ஆசாரமான குடும்பம் 48 வயதில் விதவை ... ஏராளமான கடன் .. 10 பிள்ளைகள் ... முதல் மகளின் கலப்பு திருமணம்..வறுமை ... தன்மானம்...சிறுனீரக பழுது... இவை அனைத்தையும் சர்வ சாதாரணமாக கடந்தவள் என் பாட்டி...

என் பேரை உங்க பிள்ளைகளுக்கு வைக்காதிங்கடா...என்று சத்தியம் வாங்காத குறையோடு சொல்லி இறந்து போனாள்..

அவள் பட்ட கஷ்டம் பிள்ளைகள் படக்கூடாதாம்...இரு கிட்னிகளும் பாதிக்கப்ப ட்டு டயாலிசிஸ் அவஸ்தியில் படுத்து இருக்கும் போது ஒரு நாள் அவளை பார்க்க போனேன் வெங்கடேசா.. சட்னி ஊசி போச்சுனா சாப்பிட முடியாது கிட்னி ஊசி போச்சுனா வாழ்ந்திட முடியாதுன்னு விழுந்து விழுந்து சிரிச்சுகிட்டே சொன்னார்... அதற்கு அடுத்த வாரம் இறந்து போனாள் இரும்பு மனுஷி என்ற பட்டத்துக்கு சொந்தமான என் பாட்டி..

எனக்கு நிறைவேறாத ஒரு ஆசை உயிருடன் நீ இருக்கும் போது சொல்ல மறந்ததை இப்போது சொல்கிறேன்.... ஐ... லவ்.. யூ... பாட்டி....

கண்ணீருடன்... வெங்கடேஷ்,பாலு, உமா&குமரன்......பேரன் பேத்திகள்..........

No comments:

Post a Comment