Sunday 3 January 2016

19. குத்து விளக்கெரிய...

#ஆண்டாள்_பெருமை

திருப்பாவை முழுவதும் ஆண்டாள் ஒவ்வொருவரையும் தூக்கத்திலிருந்து எழ்ந்துரு அஞ்சலி எழ்ந்துருன்னு அஞ்சலி பாப்பாவை எழுப்புவது போல் கத்தாமல் அழகுத் தமிழில் பாடி எழுப்புகிறார். ஆண்டாளின் தேன் தமிழுக்கு மயங்கி தினமும் எழுகிறார்கள். ஆனால் இன்று ஏகாந்தமாக இருக்கும் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்ப வேண்டும் அவர்கள் ஒரு சுகமான சுகந்தமான உறக்கத்தில் இருப்பதாக வர்ணிக்கிறார்.

அவர்கள் தூங்கும் அறையை பாருங்கள்.. கொஞ்சம் பிரைவசியாக இருக்கிறார்கள் வெளிச்சம் வேறு.. எட்டிப் பார்ப்பது அநாகரீகம் தான் ஆனால் எழுப்ப வேண்டுமே.. அதோ குத்து விளக்குகள் நின்றெரியும் உறுத்தாத வெளிச்சம்,யானை தந்தத்தில் செய்த டபுள் காட் கட்டில்,மேலே அன்னப்பறவையின் சிறகு, இலவம் பஞ்சு, செம்பஞ்சு எல்லாம் நிரம்பிய மென் மெத்தை, அழகிய வெண்ணிற திரைச்சீலைகள், ஊடுருவும் மார்கழிக் குளிர்.

இத்தனைக்கும் நடுவே கொத்து கொத்தாய் நறுமண மலர்களை சூடிக் கொண்டுள்ள நப்பின்னை படுத்திருக்க இருக்கிற மென்மெத்தை போதாது என அவள் மார்பகங்களில் தலை சாய்த்து உறங்கும் கண்ணா! நீவாய் திறந்து பேச மாட்டாயா.. அழகிய பெரிய மையிட்ட விழிகளுடைய நப்பின்னையே நீயாவது உன் கணவனின் பிரிவை சிறிது நேரம் பொறுக்கலாமே.. அவனை எழுப்பிவிடு.

நீ இப்படி இருப்பது நியாயமும் இல்லை நல்ல குணமும் இல்லை.. குளிர், மெல்லிய ஒளி, தந்தக்கட்டில், கொத்து மலரின் நறுமணம், இலவம் பஞ்சு, இளம்பெண் நெஞ்சு ஆஹா.. கண்ணன் தூங்குவது போல இப்படி ஒரு சுகமான தூக்கத்திலிருந்து நாமெல்லாம் எழுந்திருப்பதே கஷ்டம். அதையும் மீறி எழும்பியது ஆண்டாளின் பாசுர இனிமையில் என்பதே உண்மை.

மார்கழி 19 ஆம் நாள் பாடல்...

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.

1 comment:

  1. இந்த விளக்கவுரை களை மின்னூலாக வெளியிட முடியுமா ஐயா

    ReplyDelete