Saturday 2 January 2016

18.உந்து மதகளிற்றன்...

18. உந்து மதகளிற்றன்

#ஆண்டாள்_பெருமை

அழகானப் பெண்ணைப் பெண் வர்ணிக்கும் போது எப்படி இருக்கும்? ஆண் கவிஞர்களை விட அழகிய உவமையோடு பெண் கவிஞர்கள் இன்னொரு பெண்ணை பாராட்டுவதெல்லாம் அரிதினும் அரிது.. அதுவும் இன்னொருத்தி அழகு என்றெல்லாம் அவ்வளவு எளிதில் புகழ மாட்டார்கள்.. ஆனால் ஆண்டாள் இந்தப்பாடலில் நந்தகோபரின் மருமகளை எழுப்புகிறார் இப்படி.

மதங் கொண்ட யானையை மோதித் தள்ளும் ஆற்றலும் போரில் பின் வாங்காத வலிமை மிகு தோளும் உடைய  நந்தகோபன் மருமகளே.. நப்பின்னையே.. நறுமணம் மிகுந்த கூந்தல் காரியே வந்து கதவைத் திற.. கோழிகள் கூவி பொழுது புலர்ந்துவிட்டது மல்லிகைப்பூ கொடி பந்தலாக படர்ந்திருக்க அதற்குள் வசிக்கும் குயில்கள் பல முறை கூவிவிட்டன.

பந்தை தாங்கிய கைபோல் கச்சிதமாய் விரலழகு கொண்டவளே.. 
உன் கணவன் பேர் பாட வந்துள்ளோம் உன் செந்தாமரைக் கைகளில் வளையல் குலுங்க மகிழ்வோடு வந்து கதவைத்திற.

முகத்தை அல்லது விழிகளை தாமரை மலருக்கு ஒப்பிடுவார்கள் ஆனால் ஆண்டாள் தாமரை போன்ற கைகள் என்கிறார்..பந்தார் விரலி என்கிறார் மணம் வீசும் கூந்தல் என்கிறார் கூந்தலுக்கு மணம் இருக்கிறதோ இல்லையோ ஆண்டாளுக்கு வஞ்சனையின்றி இன்னொரு பெண்ணை போற்றுகின்ற மனம் இருக்கிறது.

ஆனால் இந்த நப்பின்னை பற்றி பாசுரங்களில் மட்டுமே வருகிறது.. ஒரு வேளை கிருஷ்ணனை காதலித்த முறைப் பெண் கேரக்டரா அல்லது இந்த எபிசோடு ஆழ்வார்கள் காலத்தில் மட்டும் இருந்து பின் நீக்கப்பட்டதா என்பதெல்லாம் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.

இந்த 18ஆம் நாள் பாடலின் இன்னொரு விசேஷம் இது இராமானுஜருக்கு மிகப் பிடித்த பாசுரம். இராமானுஜரே தீவிர திருப்பாவை விசிறி எவரும் அவரை இராமானுஜர் என்றழைப்பதை விட திருப்பாவை ஜீயர் என்று அழைப்பதையே அவர் மிக விரும்பினார். இன்றும்  இந்தப் பாடலை மட்டும் கோவில்களில் இரு முறை பாடுவது வழக்கம்.. ஆண்டாளின் தமிழை இரு முறையல்ல கோடி முறை பாடினாலும் கேட்டாலும் திகட்டவே திகட்டாது.

மார்கழி 18 ஆம் நாள் பாடல்...

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment