Wednesday 25 May 2016

கோபாலபுரத்தில் ஜெயலலிதா..

#கோபாலபுரத்தில்_அம்மா

ஒரு கலகல கற்பனை...

சென்னை ஜுன் 4 2016... தமிழகத்தில் சமீப காலமாக எந்த யூரியாவும் போடாமல் திடீரென செழித்து வளர்ந்து நிற்கும் அரசியல் நாகரீகம் நேற்று அதன் இன்னொரு பரிணாமத்தை அடைந்தது. இன்று 98 எம்.எல்.ஏக்கள் பலத்துடன் இருக்கும் எதிர் கட்சிக்கு அக்கட்சியின் தலைவரும்.. 60 ஆண்டு காலம் அரசியல் அனுபவமும்..திரைப்பட அனுபவமும் கொண்டவர்.. அரசியல் அறிவு மிக்கவர்.. 

அம்மாவை விட ஒருமுறை குறைவாக முதல்வர் பதவி வகித்தவர்.. 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தோல்வியே காணாது சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வருமான கலைஞர் கருணாநிதிக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் பிரம்மாண்ட விழா எடுப்பதாக கடந்த மாதம் சட்ட மன்றத்தில் அறிவிப்பு செய்து தமிழகத்தை மூர்ச்சையாக்கினார் முதல்வர். 

அதன்படி.. ஓ.பி.எஸ் தலைமையில் செங்கோட்டையன், பண்ருட்டி, டாக்டர் விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, ஆகியோர் அடங்கிய ஐவர் குழு விழாக் குழுவாக நியமிக்கப்பட்டது.. அவர்களும் இந்த விழாவை எப்போது கொண்டாடலாம் என அலசி ஆராய்ந்து கலைஞரின் பிறந்தநாளையே விழாவாக கொண்டாடலாம் என அறிக்கை தந்தனர்.. 

மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த அம்மா கலைத்தாயின் மகள் நான் ஆனால் தலைமகன் அண்ணன் கலைஞர் தான் எனவே பாசத்தலைவனுக்கு பிறந்தநாள் விழா என அவ் விழாவிற்குப் பெயர் சூட்டினார்.. அதன்படி நேற்று விழா துவங்கியது.அதிமுகவின் அண்ணன் தினம் என ர.ரக்கள் அழைத்த இந்த நாள் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.. 

இந்த ஒரு நாள் மட்டும் அம்மா உணவகம் அண்ணா உணவகம் எனப் பெயர் மாறி இருந்தது.. அங்கு தமிழகத்தின் ஏழை எளிய மக்களுக்கு காலை உணவாக கேசரி, இட்லி, பொங்கல், பூரி, தோசை உட்பட 8வகை உணவுகளும் மதிய உணவாக 16 வகை காய்கறிகள் வடை பாயாசத்துடன் வாழை இலை விருந்தும் இலவசமாக வழங்கப்பட்டது. 

காலை உணவை கோபால புரத்திற்கே வந்து கலைஞருடன் அம்மா சாப்பிடுவதாகவும் மதிய விருந்துக்கு கலைஞர் போயஸ் கார்டன் செல்வதாகவும் தமிழக அரசு குறிப்பு வெளியிட்டு இருந்தது.. அதன் படி கோபாலபுரம் இல்ல நிகழ்வுகளை சன் டிவியும்.. போயஸ் இல்ல நிகழ்வுகளை ஜெயா டிவியும் நேரடி ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தனர்.. கலைஞர் வீட்டுக்கு ஜெ.வருவது அம்மாவின் பயமா.. கலைஞரின் ஜெயமா.. என சாலமன் பாப்பையா தலைமையில் சன் டிவி பட்டிமன்றமும் 

கலைஞர் பிறந்தநாள் விழா நடத்துவது அம்மாவின் அன்பு குணமா... அம்மாவின் சாணக்கியத்தனமா என ஞானசம்பந்தன் தலைமையில் ஜெயா டிவி பட்டிமன்றமும் களை கட்டியது..அலகு குத்துவது, தீச்சட்டி எடுப்பது, மண்சோறு சாப்பிடுவது போன்ற வேண்டுதல்களை எல்லாம் கலைஞருக்கும் செய்யலாமா என தலைமை கழகத்தில் ஆர்வக்கோளாறில் ர.ரக்கள் கேட்க.. அண்ணன் கலைஞருக்கு அதெல்லாம் பிடிக்காது என திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம் அம்மா.

அடுத்த தெருவான போயஸ் தோட்டத்திலிருந்து கோபாலபுரம் வரை வரவேற்புத் தோரணங்கள், பிளக்ஸ்,கொடி, கட் அவுட்டுகள், பேனர்கள் ஏதும் வைக்க வேண்டாம் என இரு கட்சித் தலைவர்களுமே கூட்டாக அறிவித்தது தமிழக மக்களை டாஸ்மாக் போதையை விட அதிகம் கிறுகிறுக்கச் செய்தது.ஜெயலலிதாவை வரவேற்க கலைஞர் வீட்டில் கனிமொழி தலைமையில் செல்வி, ராசாத்தி அம்மாள், கவிஞர் சல்மா தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் நியமிக்கப் பட்டிருந்தனர். 

காலை ராகுகாலம் முடிந்து போயஸ் கார்டனில் இருந்து சசிகலாவுடன் கிளம்பி 2 நிமிடத்தில் கோபாலபுரம் வந்தார் அம்மா.. வாசலிலேயே பூரண கும்ப மரியாதையுடன் புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க அம்மாவை வரவேற்றனர்.ஒரு நிமிடம் தான் இருப்பது கலைஞர் வீடா அல்லது சங்கரமடமா என ஆனந்த அதிர்ச்சியில் திளைத்தார் அம்மா.. அவருக்கு பிடிக்கும் என்பதற்காக தயாளு அம்மாளும் துர்கா ஸ்டாலினும் இதைச் செய்தார்கள் எனக் கேள்விப்பட்டதும் நெகிழ்ந்தார் ஜெ.

அடுத்த இன்ப அதிர்ச்சி கலைஞர் வாசலிலேயே தன் சக்கர நாற்காலியுடன் வந்து காத்திருந்ததைப் பார்த்து.!ஸ்டாலின், துரைமுருகன், பிச்சாண்டி, சக்கரபாணி, பொன்முடி ஆகியோர் அம்மாவைப் பார்த்து கை கூப்பினார்கள்.!வாஞ்சையுடன் வந்து கலைஞரின் நாற்காலியை தள்ள ஆரம்பித்தார் அம்மா (ங்கொய்யால யாருகிட்ட) இப்போது கலைஞர் உட்பட அனைவரும் நெகிழ்ந்தனர்..அடுத்ததாக மேள தாளம் முழங்க பழங்கள், காய்கறிகள், அரிசி, பருப்புகள், பாத்திரங்கள், நகைகள் என ஒவ்வொன்றிலும் 98 தட்டுகள் சுமந்து அதிமுக மகளிர் அணி 

சீர் கொண்டு வர அமைதியாக அவர்களை வழிநடத்திக் கொண்டிருந்தார் வளர்மதி..தங்கைக்கு தான் சீர் தருவார்கள் ஆனால் அண்ணனுக்கே சீர் கொடுத்தவர் எங்கள் அம்மா என சைடில் நின்றிருந்த நாஞ்சில் சம்பத் கூவ.. கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதிங்க சம்பத் என கண்களாலேயே அவரை எச்சரித்தார் அம்மா.. சசிகலா பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு தலையைக் குனிந்தார் கூட்டத்தில் இருவர் முக்காடு போட்டு அலைவதைப் பார்த்தார் ஜெ.. அது யாரென சசியிடம் கேட்டார். 

உடனே உளவுத்துறை அதிகாரிக்கு போன் செய்து பேசிய சசிகலா அது வேறுயாருமில்லம்மா நம்ம சரத்குமாரும் ராதிகாவும் தான் என்றார். குபீரென சிரித்துவிட்டார் ஜெ.. சூரியவம்சம் படத்தில இருந்து இவங்களுக்கு இதுவே வேலையா போச்சு என்றார் கிசுகிசுப்பாக.. கலைஞரும் அம்மாவும் கலகலப்பாக பேசத் தொடங்கினர் அரசியல் தாண்டி இருவரும் சினிமா பற்றி எம்.ஜி.ஆர் பற்றி.. எங்கள் தங்கம் படபிடிப்பில் நடந்த சம்பவங்களை கலைஞர் சொல்ல அட இவ்வளவு ஞாபகமா என வியந்தார்.. எங்கே மாறன் பிரதர்ஸ் என அம்மா உரிமையுடன் கேட்க நீங்க சொன்னால் அவங்களை வரச் சொல்றோம் என்றபடி

கலைஞர் தன் பி.ஏ.சண்முக சுந்தரத்தை பார்க்க அவர் போன் செய்ததும் வெளியே சன் டிவி ஒளிபரப்பு வேனில் இருந்த மாறன் பிரதர்ஸ் உள்ளே வந்தனர். அடுத்ததாக 98 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான கருப்பு சிவப்பு கேக் வந்தது.அதை கலைஞர் வெட்டி தன் குடும்பத்தாருக்கு முன் அம்மாவுக்கு ஊட்ட.. ஜெ நெகிழ அங்கு அனைவரும் கண்ணீர் மல்க நின்றனர் சமயோஜிதமாக சன் டிவி நிருபர் தன் மொபைலில்இருந்து எஸ்.ஏ.ராஜ்குமாரின் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடலை ஆன் செய்ய அனைவரும் அழுதே விட்டனர்.. 

கலைஞருக்கு சூரிய ஒளியில் இயங்கும் கருப்பு சிவப்பு நிற வெளிநாட்டுக் கைக்கடிகாரமும் அவரது இல்லப் பெண்கள் அனைவருக்கும் தலா 2 போத்தீஸ் பட்டுப்புடவையும் வெள்ளி குங்குமச்சிமிழும் பரிசளித்தார்.. பிறகு அறுசுவை அரசு நடராஜனின். கைவண்ணத்தில் காலை உணவு அங்கு பரிமாறப்பட்டது ஸ்பெஷல் உணவாக சூரியகலா பரிமாறி இதிலும் தன் முத்திரையை சிலேடையாக பதித்திருந்தார் கலைஞர்.. 

எனக்கு ப்ளேட்வேண்டாம் "இலையை" கொண்டு வாருங்கள் என அம்மாவும் முத்திரை பதித்தார் அனைவரும் குரூப் போட்டோ செல்ஃபி எடுத்துக் கொண்டதும் மதியம் போயஸ் கார்டனில் விருந்து என்று அம்மா கிளம்ப... நிருபர்கள் மறித்தனர்.. மேடம் கலைஞருக்கு 94 வயது தானே..? ஆனா நீங்க ஏன் எல்லாம் 98 ஆ கொடுக்கறிங்க? சட்டசபையில் அவங்க கட்சி பலம் என்பதாலா? என்றதும்

சட்டென்று அதில்லை இந்தப் பிறந்த நாள் முதல் 98 வது பிறந்தநாள் வரை அதிமுக தான் இனி கொண்டாடும் என அறிவித்து நிருபரின் கேள்விப் பந்தில் சிக்ஸர் அடித்தார் ஜெயலலிதா.கலைஞரே ஒரு கணம் பிரமித்தார்.! அவர் கிளம்பிப் போனதும் கலைஞரை சூழ்ந்தனர் நிருபர்கள் இவ்வளவு பரிசுகள் உங்களுக்கு தந்தாங்களே அம்மா பதிலுக்கு நீங்க அவங்களுக்கு என்ன தருவிங்க என்றனர்.. அரை செகண்ட் துணுக்குற்ற கலைஞர்..

சிரித்தபடி என் இதயத்தில் இடம் தருவேன் என அவர் பாணி ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்சர் அடித்தார்.. அதே நேரத்தில் மதுரை விமான நிலையத்தில் அண்ணன் அழகிரி காரசாரமாக பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.. விழாவுக்கு என்னை அழைத்த ஜெ கடைசி வரிசையில் கடைசி சீட் கொடுத்துவிட்டு அதிலும் ஸ்டாலின் பேரனை அமர வைத்து என்னை அவமானப்படுத்திவிட்டார் இதை நான் சும்மா விட மாட்டேன் என்று..

கப்ஸா டிவிக்காக சென்னையிலிருந்து காத்தவராயன்..


No comments:

Post a Comment