Wednesday 25 May 2016

போயஸ்கார்டனில் கலைஞர்...

#போயஸ்கார்டனில்_கலைஞர்

ஒரு கலகல கற்பனை..

அன்புத்தங்கை ஜெயலலிதாவின் அழைப்பில் தன் பிறந்தநாளன்று போயஸ் கார்டன் செல்லத் தயாராகிறார் கலைஞர்.. கலைஞரின் போயஸ் செல்லும் பயண திட்டத்தை வடிவமைத்து இருக்கிறேன் ஃபாரின் Ad ஏஜென்சி இந்த பயணத்தை சிறப்பாக வழி நடத்தும் என்றபடி சபரீசன் உள்ளே வர அடுத்த தெருவிற்கு போக அட்வர்டைஸ்மெண்ட் அட்ராசிட்டியா முதலில் இது முடியட்டும் பிறகு அதுவாகவே விடியும் என்றார் கடுப்புடன் கலைஞர்.

நிலமை சரியில்லாதை புரிந்து கொண்ட சபரி ஒதுங்கிவிட கலைஞர் தயாளு அம்மாள் ராசாத்தி அம்மாள் சகிதம் புறப்படுகிறார்.. இருவருடனும் கலைஞர் செல்வது ரொம்ப அபூர்வமாயிற்றே என பிற்பாடு ஒரு நிருபர் கேட்டபோது அன்றொரு நாள் மெரினாவில் நடந்த உண்ணாவிரதத்தில் இவர்கள் என்னுடன் வந்தார்கள் இப்போது உண்ணும் விரதத்திற்கும் இவர்கள் என்னுடன் வந்தார்கள் என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

போயஸ்கார்டன் வீடு நன்கு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.. ஐவர் குழு அமைச்சர்கள் வேலையாட்களை நம்பாமல் அவர்களே பணியில் இறங்கியிருந்தார்கள்.. செங்கோட்டையன் சீரியல் பல்பு கட்ட, ஓ.பிஎஸ் வாழைமரத்தை கட்ட, பண்ருட்டி, ராஜேந்திரபாலாஜி , விஜயபாஸ்கர் மூவரும் ஏணிபோட்டு தோரணம் கட்ட இப்படி ஐந்து அமைச்சர்களும் பரபரப்பாக இருந்தனர் சசிகலாவே ஆரத்தி கரைத்த அதிசயமும் நடந்தது.

பிற அமைச்சர்கள் அனைவரும் தங்கள் கையில் கலைஞர் புகைப்படத்தை வைத்துக் கொண்டு சாலையின் இரு பக்கமும் நின்று கொண்டிருந்தார்கள் திமுக அதிமுக தொண்டர்களுக்கு தனியாக ஒரு மைதானத்தில் இடவசதி செய்யப்பட்டு அங்கு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. புகழ் பெற்ற ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் வருகிறார் என அவ்வப்போது அறிவிப்பு செய்யப்பட்டது மதுரை முத்து அல்லது ரோபோ சங்கராக..

இருக்கும் எனத் தொண்டர்கள் யூகித்துக் கொண்டிருந்தார்கள் கலைஞரின் கார் போயஸ்கார்டனில் நுழைய 5 இலட்சம் வாலா வெடி கொளுத்தப்பட்டு அதிர்ந்தது.. இருபுறமும் அமைச்சர்கள் வரவேற்க மகளிரணியனர் மலர் தூவ இதுவரை அழகிரிக்கு மட்டும் பனித்த கலைஞரின் கண்கள் இன்றும் பனித்தது..சசிகலா ஜெயலலிதா இருவரும் சேர்ந்து ஆரத்தி எடுத்து வரவேற்க விழா மேடைக்கு கலைஞர் அழைத்துச் செல்லப்பட்டார்.

முதலில் கவியரங்கம் நடந்தது.. முதல் கவி பாட வந்தவரை கண்டதும் கலைஞருக்கு வியப்பு ஆம் வந்தது வை.கோ.! கலைஞர் அம்மாவை பார்க்க அதை ஆமோதிப்பது போல ஜெ.. சிரித்தார். அண்ணன் கலைஞர் பிறந்த தினம் தமிழகத்தின் சிறந்த தினம் என முழங்கினார் வை.கோ அவர் தலையில் இருந்த தலைப்பாகை அன்று மட்டும் மஞ்சளில் இருந்தது அனைவரையும் நெகிழச் செய்தது.. கிரேக்கத்தின் சாக்ரடீஸ் மற்றும்..

அரிஸ்டாட்டிலுக்கு இணையானவர் கலைஞர் என ஆரம்பித்த வை.கோ க்யூபா ஸ்பெயின் போலந்து ஜெர்மனி என வழக்கம் போல வாய்வழியாக ஒரு வேர்ல்டு டூர் போய் அங்கிருக்கும் தலைவர்கள் எல்லாம் கலைஞரின் கால் தூசு என்ற போது கூச்சத்தில் கலைஞரே நெளிந்தார்.. அடுத்து திருமா, முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், வாசன், தா.பா நாஞ்சில் சம்பத் என அனைவரும் கவிபாட அம்மாவிடம் கேப்டன் எங்கே என்றார் கலைஞர்.

கொஞ்சம் பொறுங்க அவர் எண்ட்ரி உங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கும் என்றார் அம்மா. அடுத்ததாக மேடையில் கலைநிகழ்ச்சிகள் ஆரம்பித்தது சரத்குமார் சிலம்பம் சுற்றினார்.. கருணாஸ் லொடுக்கு பாண்டி கெட்டப்பில் வந்து சிரிக்க வைத்தார் தமிழிசை வந்து சொன்ன ஜோக் படு மொக்கையாக இருக்க தொண்டர்கள் கொந்தளிக்க.. இதை கவனித்த கலைஞர் தமிழிசையை அழைத்து வேறு நல்ல ஜோக் இருக்காம்மா எனக்கேட்டார்.

இல்லிங்க அதான் என்ன செய்யறதுன்னு யோசிக்கிறேன் என்றார்.. இப்படி கடைசியில் வந்து யோசிப்பது தானே உங்க வழக்கம் என்றது கலைஞர் மை.வா ஒண்ணு பண்ணுங்க நீங்க பண்ண தேர்தல் பிரச்சாரத்தை அப்படியே பண்ணுங்க என ஐடியா தந்தார் கலைஞர்.. இப்போது தமிழிசை தாமரை மலரும் காவிக் கொடி பறக்கும் என்ற போது விசில் பறந்தது தொண்டர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.. கலைஞரை நன்றியுடன் பார்த்தார் தமிழிசை.

அடுத்ததாக இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஸ்டாண்ட அப் காமெடி இதை நடத்த வருகிறார்... என்றதும் விளக்குகள் அணைக்கப்பட்டு மீண்டும் ஒளிர திரை விலக மிடுக்குடன் வந்தார் கேப்டன்.. இவரா என அனைவரும் புருவங்கள் உயர்த்த கேப்டனே பேச ஆரம்பித்தார்.. மக்களே இந்த கேப்டன் இன்னிங்ஸ் அவ்வளவுதான் நினைச்சுகிட்டு இருந்தப்ப அரசியல் விருப்பு வெறுப்பெல்லாம் தாண்டி அம்மா என்கிட்ட போனில் பேசுனாங்க.

தம்பி நீங்க திறமையானவர் உங்ககிட்ட ஒளிஞ்சு கிடக்குற திறமை காமெடி சமீபத்துல வாட்ஸ் அப் யூ டியூபை வாழ வச்சதே நீங்க தான் அதனால் நீங்க காமெடி பண்னுங்க வடிவேலுவை பழி வாங்க இதை விட ஒரு நல்ல வாய்ப்பு இருக்காதுன்னாங்க அவங்க இப்படி தாயுள்ளத்தோட சொன்னதும் நான் நெகிழ்ந்துட்டேன் அய்யா கலைஞருக்கு அவங்க அன்புத்தங்கை ஆனா எனக்கு அவங்க அன்பு அக்கா.. இனிமே அவங்களை அக்கான்னு தான்..

கூப்பிடுவேன் அக்கா நிகழ்ச்சியை ஆரம்பிக்கவா என்றார்.! ஜெ. தலை அசைக்க முதலில் "கேப்டன் யோகா"என்னும் வெரைட்டி செய்ய ஆரம்பித்தார் கேப்டன் அனைவரும் குலுங்கி குலுங்கி சிரிக்க கண்ணில் நீர் வர கலைஞரும் சிரித்தார்.. அடுத்து கேப்டனின் ஸ்டேஜ் ஆக்ஷன் என்னும் வெரைட்டியில் அரங்கமே அதிர்ந்தது.. கலைஞரே கேப்டனை அழைத்து இன்று முதல் நீங்கள் கேப்டன் அல்ல சாப்ளின் எனப் பட்டமளித்தார்.

மதிய விருந்துக்கு பிறகு கலைநிகழ்ச்சிகள் தொடரும் என அறிவித்தவுடன் தொண்டர்கள் உணவுப்பந்தலுக்கு போக தலைவர்கள் போயஸ் இல்லத்திற்குள் சென்றார்கள். எந்த ஆட்சி வந்தாலும் டாஸ்மாக்கிற்கு சப்ளை செய்யும் மதுபான ஆலை மாறாதது போல இங்கும் அறுசுவை அரசு நடராஜன் தான் சமையல்.. கலைஞருக்கு பிடித்த உணவுகளை அம்மாவே பரிமாற அந்த அன்புமழையில் நனைந்த கலைஞர் என் அன்பு சகோதரிக்கு..

பரிசளிக்கப்போகிறேன் என்றார்.. கலைஞரிடமே பரிசா.! அம்மா கொடுத்து வைத்தவர் என்பது போல அனைவரும் பார்க்க கலைஞர் தன் பி.ஏ. சண்முகசுந்தரத்தை பார்க்க அவர் கையில் தயாராக வைத்திருந்த பார்சலை நீட்டினார்.. அதை கலைஞர் பிரிக்க அங்கு எல்லா முகங்களிலும் ஆவல் பொங்கியது இதோ பார்சல் பிரிக்கப்பட்டது உள்ளே இருந்தது இரண்டு கைத்தறித் துண்டு..! ஜெ.கொஞ்சம் நொந்து தான் போனார்.

ஆனால் கலைஞர் பேசுகையில்.. உடன்பிறப்பே அன்புச்சகோதரி எனக்கு அளவிலாது செலவு செய்து விழா நடத்தி ஏராளமான விலையுயர்ந்த பரிசுகளும் தந்து என்னை திக்குமுக்காடச் செய்து விட்டார் அந்த அன்புக்கு இந்த கைத்தறி ஆடை எப்படி இணையாகும் என நீ கேட்கும் கேள்வி எனக்கு கேட்காமல் இல்லை.. இந்த கைத்தறி ஆடையை நான் வாங்குவதால் என் தொண்டர்களும் வாங்குவார்கள்..அதிமுக நண்பர்களும்..

வாங்குவார்கள் இப்படி ஏராளமாக வாங்கும் போது அதனால் ஏழை நெசவாளர் குடும்பம் ஏற்றம் பெறும்.. அவர்கள் வாழ்வில் மாற்றம் வரும் என்பதற்காவும்.. நெசவாளிகளின் இல்லத்தில் முதல்வராக இருக்கும் என் அன்புத்தங்கை ஒளியேற்றிட வேண்டும் என்னும் கோரிக்கையை முன் வைக்கும் முகமாகத்தான் இந்த கைத்தறி ஆடை என்றார். 40 பந்துகளில் இரட்டை சதம் அடித்த டிவில்லியர்ஸ் போல இருந்தது அவர் உரை.

ஜெ.பிரமித்து போனார் இன்னும் அரசியலில் நாம் கற்க வேண்டியது எவ்வளவோ உள்ளது என்பதை புரிந்து கொண்டார்.. உடனே அவரும் உங்களால் நான் உங்களுக்காகவே நான் என்று முழங்கினேன் இனி கழக கூட்டங்களில் கைத்தறி ஆடைதான் போடவேண்டும் என கட்சிக்கும் தமிழக மக்களுக்கு இனி மாதாமாதம் விலையில்லா கைத்தறி ஆடை ரேஷனில் வழங்கப்படும் என அறிவித்து தானும் ஒரு கெயில் என ஃபார்ம் ஆனார்.

வெளியே ஒலிபெருக்கியில் இருந்து ஒரு அறிவிப்பு மதிய உணவிற்கு பின் கலைநிகழ்ச்சிகள் ஆரம்பம் மதியம் மூன்று மணியளவில் எஸ்.வி சேகர் குழுவினரின் அல்வா நாடகம் அரங்கேறுகிறது.. இதைக் கேட்டபோது கலைஞர் அம்மா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தபுஷ்டியுடன் சிரித்துக் கொண்டனர்.. (நிறைந்தது)

கப்ஸா டிவி செய்திகளுக்காக சென்னையில் இருந்து காத்தவராயன்..



1 comment:

  1. அல்வா நாடகம் போல் அல்வாப் பதிவும்
    வெகு வெகு அருமை எனச்
    சொல்லத்தான் வேண்டுமா ?

    ReplyDelete