Monday 23 May 2016

வாஷிங்டன் வாக்கிங் - 1



வாஷிங்டன் DC வந்துவிட்டு ஒயிட்ஹவுஸ் பார்க்காமல் போனால் அது குற்றாலம் போய் அருவியில் குளிக்காமல் திரும்பியது போல.. ஏற்கனவே சொல்லியிருந்தேன் வாஷிங்டனில் மியூசியங்கள் அதிகம் அதற்கு நுழைவுக் கட்டணம் இல்லை என்று.. ஏராளமான மியூசியங்களுக்கு நடுவே தான் இந்த வெள்ளை மாளிகையும் இருக்கிறது. என்ன வாஷிங்டன் போனால் நீங்கள் வை.கோ ஆகவேண்டும்.. அவ்வளவு நடை நடந்தே கால்முட்டி கழண்டுவிடும்.

வெள்ளை மாளிகை இருக்கும் ஒரு தெருவிற்கு முன் காரை நிறுத்திவிட்டு நடக்கத் துவங்கினோம்.. எங்களுடன் வந்த நண்பர் ராஜாபாபு சில மாதங்களுக்கு முன் வெள்ளைமாளிகை முன் வாசலில் ஒரு நபர் கத்தியுடன் நுழைந்துவிட்டதால் இப்போது பார்வையாளர்களை அனுமதிக்கும் பகுதியை தடை செய்துவிட்டார்கள் நீங்கள் பின்புறமாக மட்டுமே பார்க்க முடியும் என்றார்.. எப்படி பார்த்தாலும் ஒயிட் ஹவுஸ் தானே சரி என்றோம்.

சாலையைக் கடக்கும் போது எங்கள் இடதுபுறம் நீல நிறத்தில் ஒரு பழங்கால பில்டிங் தரையில் சிவப்பு நிற கம்பளம் விரித்தார் போல் ஆர்ச்சிட் மலர்கள் பச்சைப் புல்வெளி மிகவும் அழகாக இருந்தது.. அமெரிக்க போலீசார் செக்போஸ்ட்டுகள் ஆங்காங்கே தென்பட்டன.. அமெரிக்க கமாண்டோ படையினர் இடுப்பில் நவீன துப்பாக்கி வாக்கி டாக்கி இன்னும் பல அறிவியல் சாதனங்களோடு பிரத்யேக சைக்கிளில் ரோந்து வந்தனர்.

இதே போல மப்டியிலும் ஆயுதமேந்திய வீரர்களும் உண்டு என்றார் ராஜா. நடை பாதை முழுவதும் சுற்றுலா பயணிகள் அவர்கள் முகத்தில் ஒயிட் ஹவுசைப் பார்க்கும் ஆர்வம்.. 5 நிமிட நடையில் அதோ தூரத்தில் என்பது போல ஒயிட் ஹவுஸ் கம்பி கேட்டுக்குள் எங்களுக்கு முதுகு காட்டிக் கொண்டிருந்தது. சற்று ஏமாற்றமாகத் தான் இருந்தது. காட்டில் கம்பீரமாக உலவிய சிங்கத்தை ஜுவில் கூண்டுக்குள் பார்த்தது போல இருந்தது.

இங்கு வருவதற்கு முன் நாங்கள் அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தை தான் ஒயிட் ஹவுஸ் என நம்பிக் கொண்டிருந்தது தனிக் கதை ஒருவழியாக அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டு நடந்தோம் சாலையோர பூங்கா ஒன்றில் ரெஸ்ட் ரூம் பரிகாரங்களை முடித்துவிட்டு மீண்டும் ஒரு ஐந்து நிமிட நடையில் வாஷிங்டன் சதுக்கம் இருக்கும் சாலைக்கு வந்தோம் கிறிஸ்டோபர் அமெரிக்க கொடி டி சர்ட் ஒன்றை வாங்கினார்.

நான் நடை பாதையில் உள்ள பெஞ்சில் அமர்ந்திருந்தேன். நைக் ஷூ, டாமி வாட்ச் வாஷிங்டன் என எழுதிய வெண்ணிற ரக்பி பனியன் ப்ளூ ஜீன்ஸ் அணிந்த..கறுப்பர் ஒருவர் என்னிடம் வந்து பசிக்கிறது ஏதாவது பணம் தா எனக் கேட்டார்.. ஆள் வாட்ட சாட்டமாக மல்யுத்த வீரரை போல தான் இருந்தார் 48 வயதிருக்கலாம்.. ஏற்கனவே எங்களிடம் இது போல வந்தால் 1டாலரோ2டாலரோ கொடுத்துவிடுங்கள் என்று சொல்லியிருந்தனர்.

பணத்தை மொத்தமாக மட்டும் அவர்கள் முன் எடுக்கவேண்டாம் அது ஆபத்து என்றார்கள்.பாக்கெட்டில் கைவிட்டு துழாவி ஒரு நோட்டை உருவ..
அது 5 டாலர் நோட்டு..! கறுப்பர் முகத்தில் சூரியன் உதித்தது.. கையை குத்துவது போல முஷ்டியை மடக்கி ஓங்கினார்.. எனக்கு பயத்தில் நடுக்கமானது.. சில விநாடிகள் யோசித்தேன் ஓ..நானும் அது போல முஷ்டியை மடக்க வேண்டும் என்பதை இப்போது புரிந்து கொண்டேன்.

என் கையில் ஒரு குத்து குத்திவிட்டு தேங்யூ மேன் என்றபடி 5 டாலரை பறித்துச் சென்றார்.கூட 10 டாலர் போட்டு இருந்தா ஒரு டிசர்ட் வாங்கி இருக்கலாம்.மெல்ல பாக்கெட்டில் கைவிட்டு இருக்கும் டாலர்களை எண்ணினேன் கிட்டத்தட்ட 80 டாலர்கள் அத்தனையும் ஒரு டாலர் நோட்டு இருந்த ஒரே 5 டாலரைத் தான் இழந்துவிட்டேன் சரி முன்னைப்பிறவிக் கடனாக இருக்கும் என மனதை தேற்றிக் கொண்டு நடந்தேன்.

வாஷிங்டன் சதுக்கம் தூரத்தில் பிரும்மாண்டமாகத் தெரிய அதற்கு முன் இடப்பக்கம் திரும்பும் சாலையில் அமெரிக்க மியூசியம் போகவேண்டும் என்றார் ராஜா.இப்போது அவர் காருக்கு திரும்பி ஆபிஸ் வேலையை காரில் இருந்து துவங்க வேண்டும் மியூசியத்தின் வாசலில் எங்களை விட்டுவிட்டு போன் செய்தால் காரை எடுத்துக் கொண்டு இங்கேயே வருகிறேன் எனக் கூறிவிட்டு சென்றார்.. மியூசிய வாசலிலேயே ஒரு சீன கையேந்தி பவன்.

பிரமாதமான எக் ரோலும் கோக்கும் சாப்பிட்டு பசியடக்கினோம் மொத்தமே 3டாலர்கள் தான் ஒருவருக்கு அமெரிக்காவில் இது பயங்கர சீப். பசி தீர படி ஏறினோம்..யோவ் நீ மியூசிய படி ஏறு..ஆனா  ஒயிட் ஹவுசை சுத்திக்காட்டப் போறேன்ன்னுட்டு இப்ப தூரத்தில் தெரிந்தது சொல்லிட்டியே என கேட்பவர்களுக்கு.. நாங்க போனது ஒயிட் ஹவுஸின் அதிகார பூர்வ வாசலுக்கு அல்ல அது சாலையின் மறுபக்கம் இருக்கிறது.. என்பது அன்று மாலை தான் தெரியும்.. அடுத்த நாள் தான் அங்கு போனோம் அது பற்றி இனி

வரும்...

No comments:

Post a Comment