Monday 23 May 2016

தேவதை பரிமாறிய விருந்து - 2

முன்கதை :  ஹுட்டர்ஸ் ரெஸ்ட்டாரெண்ட், அழகிய மாடல்கள், நாங்கள், எங்களுக்கு பரிமாறும் கிம்பர்லி, அவள் ஆர்டர் கேட்க, அங்கிருந்த இரைச்சலால் அது கேட்காமல் போக அதனால் அவள் என் தோளில் கை போட்டு காதோரம் வந்து பேச மெய் மறந்து நான் தமிழில் சொல்லிவிட்டேன் "ஆம்லேட் கிடைக்குமான்னு" இனி...

ஆம்லேட் கிடைக்குமா" என்பதில் ஆம்லேட் மட்டும் அவளுக்கு புரிந்தது பின்னால் வரும் நம் தமிழை அவளை ஏதோ கலாய்ப்பதாக எண்ணி..வ்வாட் என்றபடியே செல்லமாக என் வயிற்றில் (தொப்பையில்) குத்தினாள்.. சுதாரித்து ஆம்லேட் ப்ளீஸ் என்றேன்.. பின்னால் ஹாய் பேபி என்னும் குரல் அது அடுத்த டேபிளில் இருந்த ஒரு வயதான வெள்ளைக்காரன்.. அவனுக்கும் கிம்பர்லி தான் சர்வர்.. அவன் சாப்பிட்டு முடித்து பில் கொடுத்து இருந்தான்.

எங்களிடம் ப்ளீஸ் ஃப்யூ மினிட்ஸ் என ஹஸ்கியாக கெ(கொ)ஞ்சிவிட்டு அந்த  நபரிடம் சென்றாள் கிம்.. அவன் சடாரென அவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டு ஒரு 10 டாலரை எடுத்து நீட்டினான்.. கிம் தேங்யூ எனச் சொல்லி அதை வாங்கிக் கொண்டு அவனை இறுகத் தழுவி அவன் இரு கன்னத்திலும் லிப்ஸ்டிக் படியாத அளவுக்கு மென்மையாக இரு முத்தங்களை ஒத்தி எடுத்தாள். மெல்ல அவன் கைகோர்த்து வாசல் வரை கூட்டி போனாள். வாசலுக்கு வந்து மீண்டும் ஒரு கட்டிப்புடி மற்றும் முத்தம்..

கட்டிய மனைவி வழியனுப்புவது போல ஒரு கையசைப்பும் பறக்கும் முத்தம் ஒன்றையும் அனுப்பினாள்.. நான் அவசரமாக என் பர்சிலிருந்து ஒரு 10 டாலரை மேல் பாக்கெட்டில் பத்திரப்படுத்தினேன்.அதே நொடியில் கிம் சர்வ் செய்த எல்லா டேபிளிலும் 10 டாலர் பத்திரப்படுத்தும் ஒலி அந்த இரைச்சலிலும் கேட்டது. திரும்ப எங்கள் டேபிளுக்கு திரும்பி எடுத்த ஆர்டரை ஒப்பித்தாள்.நாங்கள் சரி என்றதும் வாட்ஸ் யுவர் டிரிங் என்றாள்.. பாலும் தண்ணீரும் ஒரே விலை விற்கும் இந்தியாவைப் போல அமெரிக்காவில் தண்ணீரும் பீரும் ஒரே விலை.. 

இரண்டாவது அதெல்லாம் இங்கு சோடா போல..ஆல்கஹால் அளவும் கம்மி மேலும் மியாமியில் அடித்த வெயிலுக்கு ஐஸ் க்யூபே பீர் சாப்பிடும். ஆகவே பியர் பிக்சல் இரண்டு சொன்னோம்.. டிவியில் அதுவரை ஜோராக ஆடிக் கொண்டிருந்த மியாமி ஹீட் அணி சொதப்ப ஆரம்பித்தது. 29 : 12 என முன்னிலையில் இருந்த அவ்வணி 31 : 68 எனப் பரிதாப நிலைக்கு சென்றது.. வரிசையாக எதிர் அணி அவர்களை துவம்சம் செய்தது இந்த மேட்ச் பார்த்த மும்முரத்தில் சிலர் ஆவேசப்பட்டு மேஜையை குத்திவிட சிலிங்... ப்ளிங்.. ஜிலிங்.. ஒலிகளுடன் கண்ணாடி டம்ளர்கள் விழுந்து உடைந்தன.. 

கிம் சர்வ் செய்த மேஜை அது அங்கிருந்த அடாவடி ரசிகர்களை வெளியேற்றி உடைந்த கண்ணாடித் துண்டுகளை அகற்ற..அவள் போனதால் எங்கள் டேபிளை அவள் தோழி பொறுப்பேற்றாள்.. தமிழ் தொலைக்காட்சி மெகா தொடர்களில் இவருக்கு பதில் இனி இவர் என்பதையெல்லாம் பல முறை பார்த்துப் பழகிப்போன மறத்தமிழர் மரபில் வந்ததால் நாங்கள் இந்த மாற்றத்தை மிகச் சுலபமாக ஏற்றுக் கொண்டோம் அந்தத் தோழி வித்யாசமான முக அமைப்பில் இன்னும் அழகாக இருந்தார் பேரைக் கேட்டேன் மேகன் என்றார்.. அமெரிக்க பெயராக இல்லையே..!

என்றதும்.. சில செண்ட்டுகள் (யூ.எஸ். நாணயம்) சிந்தியது போலவோ அல்லது சாண்டில்யன் கதைகளில் வருவது போலவோகலகலவென நகைத்தாள். ஐயாம் ஃப்ரம் மெக்ஸிகோ என்றாள்.. அரசியல் தலைமையை ஆண்டவன் உருவில் பார்க்கும் அல்லக்கைகளைப் போல நான் வாத்தியாரின் மெக்ஸிகோ சலவைக்காரியை அவள் உருவில் கண்டேன். மேகன் எங்களை மேகம் போல சூழ்ந்தாள்..ஆனால் மழை எங்கள் வாயில்... எதிர் டேபிளில் இருந்த கூட்டம் அவர்களுக்கு பரிமாறிய ஒரு தேவதையை பக்கத்தில் அமர வைத்து அவளையும் சிக்கன் சாப்பிட வைத்ததைப் பார்த்து மேகனையும் சிக்கன் எம்முடன் சாப்பிட வைக்கலாம் என முடிவெடுத்தேன். 

மயிலுக்கு போர்வை தந்தான் பேகன்.. ஆனால் மேகன் என்னும் மயிலுக்கு சிக்கன் தந்தான் வெங்கன் என வரலாறு நம்மை பேச வைக்க வேண்டுமே. சிரித்த முகத்துடன் ஆவி பறக்கும் சிக்கன் தட்டுகளோடு வந்தாள் சிட்டு.எங்கள் ஆசையைச் சொல்ல..ஓ ஷ்யூர்..என்றாள்.. எத்தனை தொகுதி கேட்டாலும் கூட்டணிக்குத் தரும் வை.கோ. போல.. அவள் எங்கள் அனைவருக்கும் நடுவில் அமர கண் மட்டுமல்ல தலை முடியும் மின்ன ஒரு சிக்கன் பீசை அவளிடம் நீட்டினேன் என்பதை விட ஊட்டினேன் என்பது சாலப்பொருந்தும். ஸ்டைலாக ஒரு கடி கடித்தாள்.. சில நொடிகள் தான் ஓவ்.வ்வ்வ்.. ஷிட்.. ஐயாம் சாரி.. என்றவள் பரபரவென சேரில் இருந்து இறங்கி ஓடினாள்..

அவள் ஓடியது ரெஸ்ட் ரூமுக்கு.. 10 நிமிடம் கழித்து மூக்கு நுனியிலும் கன்னங்களிலும் ரூஜ் தடவியது போல சிவப்பு படர்ந்திருக்க முகம் துடைத்து கொண்டே வந்தாள்.. அவள் கண்கள் நம் கேப்டனின் கண்களை விட அதிகம் சிவந்திருந்தது.. ஆர் யூ க்ரேஸி என்றாள் எங்களிடம் அடிக்குரலில். விஷயம் இதுதான்.. கிம்மிடம் நாங்கள் ஆர்டர் தந்திருந்தது ஸ்பைசி சிக்கன் அது அவ்வளவு காரமாக இருக்கும் என்பது அவளுக்கு தெரியவில்லை.ஸ்பைசியை தாங்காத ஸ்பானிஷ் நாக்கு உள்ள பைங்கிளியை வதைத்து விட்டோமே என நாங்கள் வருத்தப்பட.. ஓ..நோ...நோ.. தட் வாஸ் நாட் யுவர் மிஸ்டேக் என்றபடி 10 டாலருக்கு கிம் அந்த வெள்ளைக்கார கிழவனுக்கு தந்த கட்டிப்புடி வைத்தியத்தை அதைத்தராமலேயே தந்தாள்.. 

மேலும் மேலும் நான் வருத்தப்பட அது தொடர்ந்தது.. மெல்ல மேல் பாக்கெட் 10 டாலரை மீண்டும் பர்சுக்கே இடப்பெயர்ச்சி செய்தேன்.
அதன்பிறகு சாப்பிட்டு முடிக்கும் வரை அரட்டை கேலி கிண்டல் என மூன்றரை மணிநேரம் !!!!??? போனதே தெரியவில்லை.. ஒரு வழியாக பில்லை செட்டில் செய்துவிட்டு மேகனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.. அந்த 10 டாலரை இப்போது தரலாமா என யோசித்துக் கொண்டிருந்த போதே நண்பர் 20 டாலரை கொடுத்துவிட கையசைப்புடன் பறக்கும் முத்தம் பெற்றுக் கொண்டு விடைபெற்றோம்.. இதுவரை வாயில் வடிந்த நீர் இப்போது எங்கள் கண்களில் வழிந்தது.. பை..பை..கிம் & மேக்

அந்த போட்டோ எங்கே எனக் கேட்பவர்களுக்கு.. அதை வெளியிட்டால் எங்கள் கண்ணீர் ஆயுள் முழுவதும் வழியும் என்பதால் மனைவி மக்கள் நலன் கருதி வெளியிடாதோர் ஆகிவிட்டோம்..பின்குறிப்பு புகைப்பட மாடல்களை விட நாங்கள் பார்த்த மாடல்கள் பேரழகானவர்கள்..

No comments:

Post a Comment