Monday 30 May 2016

சாப்ளின் வாழ்ந்த மண்ணில்..

கலிபோர்னியாவில் ஃப்ரீமாண்ட் என்ற ஊரில் தங்கியிருந்தோம்.. இம்முறை இங்கு 7 நாட்கள் தங்கியிருந்தோம்.. வாஷிங்டனில் நடந்து களைத்த கால்களுக்கு முதல் இரண்டு நாள் ஓய்வளித்தோம். தங்கியிருந்த ஓட்டல் வாசலுக்கு கூட வரவில்லை.. மூன்றாவது நாள் எங்கள் நிகழ்ச்சி ஆக முதல் 3 நாட்கள் எங்கும் போகவில்லை.. நாங்கள் கிளம்புவதற்கு முதல்நாள் தான் தெரிந்தது இதே ஃப்ரீமாண்டில் தான் சிலகாலங்கள் சாப்ளின் வசித்தது.

உலகம் முழுவதும் மொழிகளை கடந்து மக்கள் மனதில் நின்ற ஒப்பற்ற கலைஞன் அல்லவா அவர்.. மெளனப்படங்களின் முடிசூடா சக்ரவர்த்தி... ஒரு லெஜண்ட் .. வாழ்ந்த மண் இது என்று தெரிந்த பின்பு யார் தான் அங்கு போக விருப்பமில்லாமல் இருப்பார்கள். அதிலும் எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் அவர் மானசீக குரு ஆகவே எப்படியும் அங்கு போய் எங்கள் காலடியை அவர் வாழ்ந்த அம் மண்ணில் பதித்து அவரது ஆசிகளைப் பெற வேண்டும் என முடிவெடுத்தோம்... விசாரித்தோம்.

அந்த ஊரில் இருக்கும் நம் மக்களுக்கே அது தெரியவில்லை.. அப்படியா என்று எங்களிடமே கேட்டார்கள்.. கடைசியாக நண்பர் முத்தழகு ஆமா எனக்குத் தெரியுமே என்றார்.. எங்க இருக்குன்னு உற்சாகமாக கேட்டோம் ஒரு 5 மைல் தூரம் தான் நானே கூட்டிகிட்டு போறேன்னு சொல்லி வயிற்றில் கோக் வார்த்தார். காலை 10 மணிக்கு கிளம்பினோம். 10 நிமிட கார்ப் பயணம் சுற்றிலும் அழகிய பச்சைப்பசேல் மலைக்குன்றுகள் தெரிந்தன.




இயற்கை அழகு தாலாட்டும் அமைதியான ஊர்.. நைல்ஸ் என்பது அவ்வூரின் பெயர்... காரை நிறுத்தி இறங்கியவுடனே அழகிய மரங்கள் புல்வெளிகள் என காமிராவுக்கு வேலை வைத்தது.. சார்லி சாப்ளின் மியூசியம் என நாங்கள் நினைத்து போனது இரயில்வே மியூசியம் எனத் தெரிந்து எடிசன் கண்டு பிடிப்பை வாங்கினோம். நண்பர் முத்தழகு விசாரிக்கப் போய்விட்டு வந்து சாப்ளின் மியூசியம் இதுவல்ல அது அங்க இருக்கு ஆனா... என்ன ஆனா.?

இங்குள்ள எல்லா மியூசியங்களும் சனி ஞாயிறு தான் திறந்திருக்குமாம் இன்னிக்கு லீவாம் என்றார் மிகுந்த ஏமாற்றத்துடன். எங்களுக்கும் ஏமாற்றம் தான் சரி பரவாயில்லை வெளியே நின்னாவது போட்டோ எடுத்துக்குவோம் என மனதை தேற்றிக்கொண்டு கிளம்பினோம் ரெயில்வே மியூசியம், மெளன படங்கள் கால மியூசியம், புரதான பொருட்கள் உள்ள மியூசியம், சினிமா புரொஜக்டர் மியூசியம் என குட்டி குட்டி மியூசியங்கள் அங்கிருந்தன.



எல்லாம் தனியார் வைத்திருக்கும் மியூசியங்கள் ஒரு சிறிய ஜவளிக்கடையின் ஒரு தளம் அளவில் தான் இருந்தன 10 நிமிடங்களில் சுற்றிப்பார்த்து விடலாம்.! சாப்ளின் மியூசியமும் பூட்டி இருந்தது ஆனால் உள்ளே ஆங்கிலப் படங்களில் வருவது போல காந்தி கண்ணாடியும் சிவப்பு ரோஜாக்கள் கமல் தொப்பியும் அணிந்த 70 வயது மதிக்கத்தக்க கிழவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்..எங்களைப் பார்த்ததும் இருங்கள் என சைகை செய்தார்.

அட நமக்கு அதிர்ஷ்டம் காத்திருக்குன்னு நினைத்து காத்திருந்தோம்.. 15 நிமிடம் ஆகியும் பேச்சு நின்றபாடில்லை ஃபேக் ஐடியிடம் கடலை போடும் ஃபேஸ்புக் போராளி போல அது நீண்டு கொண்டிருந்தது.. ஒரு வழியாக 23வது நிமிடத்தில் நிறுத்தினாரோ அல்லது செல் பேட்டரி தீர்ந்துவிட்டதோ வெளியே கதவை திறந்தார்.. அவர் வெளியே வருவதற்குள் கழுத்தில் சங்கிலி கட்டிய இரண்டு பெருச்சாளிகள் ஓடிவந்தன சங்கிலியின் மறுமுனை..



கிழவர் கையில் இருந்தது.. அலட்சியமாக எங்களைப் பார்த்து சாரி ஜெண்டில்மேன்ஸ் த மியூசியம் ஓபன் ஆன் வீக்கெண்ட்ஸ் ஒன்லி என்றார்.. அதுக்கேண்டா 25 நிமிஷம் உக்காரவச்ச என்று மைண்ட் வாய்சில் திட்டும் போது கீழே பெருச்சாளி "வவ் வவ்" என குரைத்தது.. ஆச்சரியமாக இப்போது அதைப் பார்த்தேன்.. அட நாய் தானா..! அந்த வகை குட்டியான நாயை அப்போது தான் பார்க்கிறேன். அங்கும் வாசலில் தான் போட்டோ.!

சரி சாப்ளின் தங்கியிருந்த வீடு எங்கேன்னு கேட்டோம் அதோ ஒரு ஓட்டல் இருக்கே அதாங்க அவர் இருந்த வீடு என்றார்கள்.. சாப்ளின் வாழ்ந்த ஊர் என்ற பெருமையை கட்டிக்காக்கும் படி எந்த அடையாளங்களுமே அங்கு இல்லை என்பது மிக வருத்தமாக இருந்தது.. அமைதியான அந்த ஊரின் சுற்றுப்புறத்தில் ஒரு மெல்லிய சோகம் காற்றில் கலந்திருப்பது போல ஒரு உணர்வு.. ஒருவேளை அது சாப்ளினின் ஆத்ம சோகமாகவும் இருக்கலாம்.


No comments:

Post a Comment