Monday 23 May 2016

தொங்கும் விமானத்தோட்டம் - 1

தொங்கும் தோட்டம் தெரியும் அதென்ன தொங்கும் விமானத்தோட்டம்? இந்தக் கேள்விக்கு பதில் காண என்னுடன் வாருங்கள் பயணிப்போம்.. ஸ்மித்சானியன் இன்ஸ்டிடியூட் Air & Space museum வந்துவிட்டோமா இதோ இன்னும் சிறிதுநேரத்தில் விடை தெரியும்.. வாஷிங்டன்DCயின் டாலஸ் விமான நிலையத்திற்கு அருகில் இருக்கிறது இம்மியூசியம். ஏற்கனவே பெங்களூருவில் விமான மியூசியம் பார்த்த அனுபவம் இருந்ததால் அவ்வளவு எதிர்பார்ப்பு என்னிடமில்லை.

ஆனால் நேரில் போய் பார்த்தபோது தான் தெரிந்தது பெங்களூருவில் நான் பார்த்தது பாலும் பழமும் படம் என்று.. ஆம் என் கண்ணெதிரில் பாகுபலி தெரிந்தது... மிக மிக பிரம்மாண்டமான ஒரு இண்டோர் ஸ்டேடியம் அமைப்பில் இருந்தது.. அமெரிக்காவில் வாஷிங்டன்DCயில் மட்டும் ஒரு சிறப்பு என்னவென்றால் அமெரிக்காவில் இங்கு மட்டுமே எந்த மியூசியங்களுக்கும் நுழைவு கட்டணம் இல்லை.. அனுமதி இலவசம்.

சில இடங்களில் கார்பார்க்கிங் கட்டணம் மட்டும் உண்டு. அமெரிக்காவில் பிற மாகாணங்களில் குறைந்தது ஒருவருக்கு 30 டாலர் (நம்ம ஊருக்கு ரெண்டாயிரம் ரூபாய்) கட்டணம் கண்டிப்பாக இருக்கும்.. அமெரிக்காவில் வாஷிங்டன் போகும் வாய்ப்பு கிடைத்தால் எல்லா மியூசியங்களையும் பார்த்துவிடுவது உங்கள் பர்சுக்கு பெரும் பாதுகாப்பு. வாஷிங்டன் காற்றோடு கைகோர்த்த குளிர் எங்களை வேகமாக அறைந்து கொண்டிருந்தது.

காரில் இருந்து இறங்கி ஓட்டமும் நடையுமாக மியூசியத்தில் நுழைந்தோம்.. அப்பாடா குளிர் தெரியவில்லை..வாசலில் ரிசப்ஷன் கவுண்டர் அங்கு புன்னகையணிந்த முகங்களுடன் ஊழியர்கள் அந்த இடத்தை பற்றிய விவரங்கள் அடங்கிய இலவச கையேடுகள் மற்றும் மேப் இந்த நடை முறையை அமெரிக்கா முழுவதும் காணலாம். நாங்கள் போன போது பள்ளிக் குழந்தைகள் கல்விச்சுற்றுலாவிற்கு வந்திருந்தனர்.. நீண்ட க்யூ.

அமெரிக்காவில் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் எப்போதும் ராஜ உபச்சாரம் தான் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் முன்னுரிமை அவர்களுக்கு தான்..ஆகவே க்யூவில் நிற்கும் பொறுமை இல்லாததால் இலவச கையேடை வாங்காமலேயே மியூசியம் செல்ல முடிவெடுத்தோம். மேலும் எங்களை அழைத்து வந்த நண்பர் ராஜாபாபு அன்று வீட்டிலிருந்த படியே வேலை என அலுவலகத்தில் கூறி எங்களுடன் வந்திருந்தார்.

அமெரிக்காவில் வீட்டிலிருந்தபடியே வேலை என்றால் எந்நேரமும் லேப்டாபை கர்ணன் கவசகுண்டலம் போல வைத்திருக்க வேண்டும். அலுவலகத்தில் இருந்து வரும் அழைப்புக்கு பதில் தராவிட்டால் அவ்வளவு தான் மெமோ.. லாஸ் ஆஃப் பே இப்படி தண்டனை ஆகவே அவர் காரிலேயே லேப்டாபுடன் ஐக்கியமாகிவிட்டார். இந்த மியூசியத்தை பற்றிய எந்தத் தகவலும் தெரியாமலேயே உள்ளே நுழைந்தோம். 1நிமிட நடை..

தரை முதல் தளம் இரண்டாம் தளம் மூன்றாம் தளம் என மூன்று லெவலில் இருந்தது மியூசியம்.. தரை தளத்தில் மட்டுமே விமானங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் முதல் இரண்டு தளங்கள் மேலிருந்து ரசிக்கவே.. மூன்றாவது தளம் மியூசியத்தின் அலுவலகம்.. நாங்கள் இருந்தது முதல் தளத்தில் அங்கிருந்த பால்கனிக்கு சென்றதும் எங்கள் விழிகள் வியப்பில் விரிந்தது! ஆம் கூரையில் விதவிதமான விமானங்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.

வரும்..

No comments:

Post a Comment