Monday 30 May 2016

கூகுள் ஆப்பிள் தலைமையகத்தில் 1

#கூகுள்_ஆப்பிள்_ஃபேஸ்புக்_தலைமையகத்தில்

சென்ற முறை பேஸ்புக் தலைமையகத்திற்கு லீவுநாளில் சென்றதால் உள்ளே செல்ல முடியவில்லை ஆகவே இப்போது வேலை நாளில் செல்வோம் எனப் போயிருந்தோம்.. நீ எப்படி வந்தாலும் கொண்டையை மறைக்க முடியாது நோ அட்மிஷன் என நாகரீகமாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார் மார்க்கின் செக்யூரிட்டி.. வாசலில் இருந்த போர்டு டிசைன் மாறி இருந்தது அங்கு போட்டோ எடுத்துக்கொண்டு ஆறுதலடைந்தது தான் மிச்சம்.

சாலையின் எதிரே இருந்த மெகா பில்டிங்கும் ஃபேஸ்புக்கின் பில்டிங் தான் ஆனால் அங்கும் அனுமதி இல்லையாம். இனி அங்கு நிற்பதால் பயனேதும் இல்லை என்பதால் ச்சீ ச்சீ இந்த ஃபேஸ்புக் புளிக்கும் என்றபடி எலே பசுபதி எட்றா வண்டியை என்றோம்.. நண்பர் ராஜா வந்திருந்தார்.. வண்டி நேரே ஆப்பிள் தலைமையகத்திற்கு சென்றது. ஆப்பிள் அலுவலகம் மிக மிக பிரம்மாண்டமாக இருந்தது கார் பார்க்கிங் கடலுக்குள் வண்டி நுழைந்தது.

வாசலில் கருப்பு நிற கோட் சூட் டை சகிதம் நின்ற ஆபீசர்களை பார்த்தோம் கம்பெனியின் ஜி.எம் போல இருந்த அவர்கள் தான் வாலட் பார்க்கிங் டிரைவர்களாம்.! காரை அவர்கள் வசம் செலுத்தி விட்டு டோக்கன் பெற்றுக் கொண்டு நடந்தோம்.. பார்க்கிங்கில் மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கு சார்ஜ் ஸ்டேஷன் அமைத்திருந்தார்கள். பலகார்கள் அங்கே தங்கள் ஸ்நாக்சான மின்சாரத்தை குடித்துக் கொண்டு ரிலாக்சாக நின்றிருந்தன.

அமெரிக்காவில் தற்போது பரபரப்பாக விற்பது இந்த வகைக் கார்கள் தான் 8மணிநேர சார்ஜ் போட்டால் 300 மைல் போகலாம்.. புகை விடாது என்பதால் சுற்றுப்புற சூழல் மாசு படாது.. 8 மணிநேர கரண்ட் கட் இருக்கும் நம்ம ஊருக்கெல்லாம் இது வந்தால் எப்படி இருக்கும் என விளையாட்டாக யோசித்துக் கொண்டே ஆப்பிள் அலுவலக முகப்பிற்கு வந்தோம். ஆப்பிள் அலுவலகங்கள் Infinite Loop என்று அழைக்கப்படுகிறது இதற்கு அர்த்தம்..

எல்லைகளற்ற பாதை என்பதே.! இந்த லூப்களை அவ்வையார் முருகனைப் பற்றி பாடியது போல ஒன்று இரண்டு மூன்று என வரிசைப்படுத்தி இருந்தனர் லூப் 1 தான் விசிட்டர்களுக்கான பாதை பந்தாவாக உள்ளே போனோம் ஹாலிவுட் நடிகைகள் போல இருந்த ரிசப்ஷனிஸ்ட்டுகள் தங்கள் தீவிரவாத கண்களில் எங்களை கொன்று கொண்டே ஆங்கிலக் குயில் குரலில் பேசியதன் சுருக்கம் என்ன தெரியுமா நண்பர்களே... ப்ளீஸ் கெட் அவுட்

முறையான அனுமதியின்றி உள்ளே போக முடியாதாம்.. இதைத்தானே அந்த ஃபேஸ்புக் டைலரும் சொன்னான் என்பது நினைவுக்கு வந்தாலும்.. இங்கே அழகிய பெண்கள் சொன்னது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது (அவ்வ்வ்வ்) வழக்கம் போல வாசலில் நின்று போட்டோ.. பிறகு பார்த்தால் ஆப்பிள் ஸ்டோர் இருந்தது.. இங்காவது நம்மை அனுமதிப்பார்களா என தயங்கி வாசலில் நின்றால் இங்கே மட்டும் உள்ளே இருந்து வந்து நம்..

கையைப் பிடித்து இழுத்தார்கள்.. ஆப்பிள் அலுவலகத்துக்குள் தான் விசிட்டர் தடை ஆப்பிள் ஸ்டோருக்கு தடை போட ஸ்டீவ் ஜாப்ஸ் என்ன முட்டாளா.! பிஸினஸ் அல்லவா.. அதுவும் அடர் பச்சை பனியன் அணிந்த க்ரீன் ஆப்பிள் போல இருந்த அழகிகள் வந்து வாட் யூ வாண்ட் எனக் கேட்கும் போது வழிந்தோடும் (அந்த வழியல் அல்ல) ஆவலுடன் நீ தான் என மனதிற்குள் சொல்லி அல்ப சந்தோஷம் அடைந்துவிட்டு வாட்ச் என்றேன்.

ஹாய் அயாம் கெல்லி என்றாள் அந்த அமெரிக்கச் செல்வி மெல்ல தோளுரச உடன் அவள் நடந்து வர வேண்டுமென்றே வாட்ச் செக்ஷனை கடந்து மொத்த ஸ்டோரையும் ஒரு க்ளான்ஸ் சுற்றிவிட்டு மீண்டும் வாட்ச் செக்ஷன் வந்தோம். ஒவ்வொரு வாட்சாக எடுத்து டெமோ காட்டினாள்..அவ்வப்பொது குறும்புக் கண்களில் என் ஆசையையும் மீட்டினாள் (அட கவிதை) 299 டாலரில் ஆரம்பித்து 700 டாலர்கள் வரை விலை உள்ள வாட்சுகள் அவை.

ஐ போன்கள், ஐ பாட் மற்றும் ஐ பேடுகள் அவற்றிற்கான அக்சசரீசுகள், வாட்சுகள், டி-சர்ட்டுகள் முதலியவை தனித்தனி செக்ஷன்களாக இருந்தன அழகான அலங்காரம் அருமையான டிஸ்ப்ளே உடலை வருத்தாத ஏ.சி என ஷாப்பிங் அனுபவம்.. ஆப்பிள் வாட்சுகளில் இருக்கும் அதே வசதிகள் கொண்ட வேறு பிராண்ட் வாட்சுகள் இதைவிட மலிவு என்றார் ராஜா. வாட்ச் வாங்கும் முடிவை தள்ளிவைத்து பேச்சை மாற்ற யோசித்தேன்.

அவள் கையிலும் ஒரு ஆப்பிள் வாட்ச் இருந்தது இது நன்றாக இருக்கிறதே என்றவுடன் தன் வுட்பி பரிசளித்தான் என்று சொல்லி சில விநாடிகளில் என் அன்புத் தங்கையாக மாறினாள்.. நேரம் சரியில்லாததால் வாட்ச் வாங்கும் முடிவை தள்ளி வைத்துவிட்டு டி-சர்ட் செக்ஷனுக்கு போனோம்.. இந்த முறை கெல்லியிடம் இருந்து தள்ளியே நடந்தேன்.. கொண்ட துக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் கறுப்பு நிற டி - சர்ட் ஒன்றை எடுத்தேன்.

விவரம் இல்லாமல் ஹேய் நைஸ் செலக்ஷன் என்றாள் கெல்லி.. அவசர அவசரமாக பில் போட்டுவிட்டு கிளம்பும் போது நாம சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கலாமா என அவளிடம் கேட்டு (துப்புவது தடை செய்யப்பட்டுள்ளது) புண்பட்ட மனதை போட்டோ எடுத்து ஆற்றினேன்.. வண்டி அடுத்து நேராக கூகுள் அலுவலகம் சென்றது.. அங்கு போய் நின்றதும் அதிர்ந்தோம்.. ஆம் கூகுளின் வாசலைக் காணோம்... அது பற்றி அடுத்து.... (வரும்..)

No comments:

Post a Comment