Tuesday 24 May 2016

வாஷிங்டன் வாக்கிங் - 3

அமெரிக்க ஹிஸ்டரி மியூசியத்தில் இருந்து வாஷிங்டன் சதுக்கத்திற்கு நடந்தோம்.. எதிரே பிரும்மாண்டமான கம்பம் போல தெரிந்த சதுக்கம் நாங்கள் நடக்க நடக்க பின்னால் போய்க் கொண்டிருந்தது போல தூரம் அதிகரித்தது.. ஏற்கனவே போதும் போதும்னு நடந்த எங்களுக்கு கால்வலி பின்னி பெடலெடுத்தது.. போர்வீரர்கள் நினைவாக எழுப்பப்பட்ட அந்தச் சதுக்கத்தில் வேறு சிறப்புகள் இருக்கிறதா என விசாரித்தோம்.

அமெரிக்க சுதந்திரப் போர், உயிர் நீத்த தியாகிகள், வீரர்கள், ஜார்ஜ் வாஷிங்டன் என பல மியூசியங்களில் நாங்கள் பார்த்த அதே ஆணிகள் தான் அங்கும் அடிக்கப் பட்டிருக்கின்றன என அறிந்து ஆணியே... எனச் சொல்லி தூரத்தில் நின்றே சதுக்கப் பின்னணியில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.. கால்வலி அதிகரிக்க ராஜா பாபுவிற்கு கால் செய்தோம். அவர் அங்கு வர 15 நிமிடம் ஆகுமென்றார். சாலையோர பெஞ்ச் இருந்தது.



அதில் செட்டிலானோம்.. இந்த வாஷிங்டனில் எல்லாமே இவ்வளவு நடையாய் நடக்க வேண்டியிருக்கிறதே இங்கு வாடகை சைக்கிள் கடை வைத்தால் நன்கு போணியாகுமே என நாங்கள் நினைத்த மறுநிமிடம் கும்பலாக நின்று கொண்டே பயணிக்கும் எலக்ட்ரானிக் பைக்கில் (கிரிக்கெட் மாட்சில் கேமிரா மேன் வருவாரே) ஒரு குழு எங்களை கடந்து போனார்கள். அதன் வாடகை மணிக்கு 70 டாலராம் (5ஆயிரம்ருபாய்).

அதைக்கேட்டதும் கால்வலி மறந்து நெஞ்சுவலித்தது.. இதோ ராஜாபாபு கார் வந்திருச்சு கிளம்பலாமா.. ஏறிக் காரில் அமர்ந்ததும் கொஞ்சம் உயிர் வந்தது.. அப்போது தான் ராஜா சொன்னார்.. சாரிங்க ஒயிட் ஹவுசுக்கு இன்னொரு வாசல் இருக்கு அங்க தான் போயிருக்கணும்.. நான் உங்களை தப்பா கூட்டிட்டு வந்துட்டேன்.. இப்போ காரில் வரும் போது தான் முதன் முதலா அந்த இடத்தைப் பார்க்கிறேன் என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

அமெரிக்காவில் இது சகஜம் அவர் தங்கியிருப்பது வாஷிங்டனில் இருந்து 40 கி.மீ தள்ளி அவர் வேலை பார்க்கும் கம்பெனியும் வாஷிங்டன் பக்கத்தில் அவர் வாஷிங்டன் வருவதே அரிது.. எனவே அவருக்கு நாங்கள் ஆறுதல் கூறினோம். இப்ப ஒயிட் ஹவுசைப் பார்க்க முடியுமா என கிறிஸ்டோபர் கேட்க இப்ப மாலை 6 மணி அமெரிக்காவின் ஹெவி டிராபிக் ஜாம் நேரம் அங்க போயிட்டு வீடு போவதாக இருந்தால் இரவு 10 மணி ஆகும் என்றார். 

அட வளவள வேணாம்.. ஷாட்டை இங்க கட் பண்ணி ரெண்டு நாள் கழித்து ஓபன் பண்ணா நாங்க முன்னாடி வந்த அதே வீதியின் பின்பக்கம் வந்து விட்டோம் நண்பர் சிவா இன்று எங்களுடன் வந்திருந்தார்.. காரில் இருந்தே சொன்னார் அதோ அந்த சிக்னலில் உங்களை இறக்கிவிடுறேன்..அதான் ஒயிட் ஹவுஸ் இருக்கும் சாலை நீங்க நடந்துபோய் பார்த்துட்டு திரும்ப அதே சிக்னலுக்கு வந்துட்டு கூப்பிடுங்க எனக் கூறி இறக்கிவிட்டார்.





பாங்க் ஆஃப் அமெரிக்காவின் அஜீத் அலுவலகம் (தலைமை) அந்தச் சாலையின் ஆரம்பத்தில் இருந்தது.. எதிர்புறம் ஜார்ஜ் வாஷிங்டன் சிலை பின்னணியில் ஒரு புரதான கட்டிடம் அந்தத் தெரு முழுவதும் இரு பக்கமும் சிலைகள் பூங்காக்கள் 2 நிமிட நடை தூரத்தில் கும்பல் கும்பலாக மக்கள் வெள்ளம் எல்லோரும் வெள்ளை மாளிகையின் அழகை தங்கள் காமிராவில் கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர் நாங்களும் அதில் ஐக்கியமானோம்.



அன்று தூரத்தில் மனைவியைப் பார்த்தது போல விலகி நின்ற வெள்ளை மாளிகை இன்று அருகில் காதலியைப் பார்த்தது போல நெருங்கி நின்றது.. புகைப்படங்கள் எடுப்பவர்கள் கண்ணியமாக ஒருவருக்கொருவர் வாய்ப்பு கொடுத்து படம் எடுத்தார்கள் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன அம்மா போல நாங்களும் மாண்புடன் பிறருக்கு இடையூறின்றி புகைப்படம் எடுத்துக் கொண்டோம் வெள்ளை மாளிகை தெருவை நோட்டமிடுவோமா.

உலகின் அதிநவீன காமிராக்கள் பொருத்தப்பட்ட பகுதி அது உருவம் இருந்தால் காற்றையும் படம் பிடித்துவிடும் இந்தத் தெருவில் நடப்பது எல்லாம் அப்படியே மாளிகை உள்ளே உள்ள கண்ட்ரோல் ரூம் டிவியில் தெரிய அதை கண்காணிக்க ஒரு பெரிய டீமே உள்ளது.. உங்கள் நடவடிக்கையில் சிறிது சந்தேகம் வந்தாலும் உங்கள் பொடனிக்கு பின்னால் ஒரு கமாண்டோ தோன்றுவார்.. அந்தளவு துல்லியமான பாதுகாப்பு.

5 நிமிடத்திற்கு ஒருமுறை வானில் ஹெலிகாப்டர்கள் குறுக்கும் நெடுக்குமாய் வட்டமடித்தது.. டைட்டானியம் மெட்டலில் செய்த சைக்கிளில் ஆங்காங்கே துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் ரோந்து வந்தனர்.. அவ்வப்போது கூடைப் பந்தாட்ட வீரர்கள் உயரத்தில் கையில் நவீன இயந்திர துப்பாக்கியுடன் புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட் அணிந்த கமாண்டோக்கள் தெரிவில் ஃபேஷன் ஷோ போல நடந்து சென்றார்கள். 

ஆனால் இவையெல்லாம் பொதுமக்களுக்கு சிறிதளவும் இடையூறு அளிக்காத வகையில் இருந்தது. வெள்ளை மாளிகை வாசலில் நாங்கள் போட்டோ எடுத்த  இடத்தில் உள்ள செக்போஸ்டில் இருந்த கமாண்டோ அவ்வளவு உற்சாகமாக பணிபுரிந்தார் பொதுமக்களிடம் அன்பாக பேசினார். இதுவே நம்மூரில் ஒரு லோக்கல் வி.ஐ.பி.வீட்டு வாட்ச்மேனாக இருந்திருந்தால் கூட அதிகாரம் கொடிகட்டி பறந்திருக்கும். மில்லியன் கணக்கான மக்கள்...



ஆண்டுதோறும் வெள்ளை மாளிகையை பார்க்க வருகிறார்கள் பொதுமக்கள் யாரையும் வெள்ளை மாளிகைக்குள் அனுமதிப்பது இல்லை.. கெடுபிடிகள் அதிகம் இருப்பினும் இதை வெளியில் இருந்தாவது பார்த்தால் போதும் என ஆவலுடன் வருகிறார்கள்.. அனைவரின் முகத்திலும் வெள்ளை மாளிகையை பார்த்த திருப்தி, எங்கும் கரைபுரண்டோடும் உற்சாகம், புராதனச் சிலைகளோடு செல்ஃபி என அந்த வீதியே கலகலப்பாக இருந்தது.

உலகின் உச்சபட்ச பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் தெருவுக்குள் கால் பதித்துவிட்டு திரும்பியது கொஞ்சம் பெருமையாக இருந்தது.. திரும்பி வரும் போது பாங்க் ஆஃப் அமெரிக்கா வாசலில் இருந்த ஒரு நடைபாதை பூங்காவில் மெரூன் நிறத்தில் நீளமான கவுன் அணிந்திருந்த ஒரு புஷ்டியான இளம்பெண் தன் ஹை டெசிபல் குரலில் மேற்கத்திய சங்கீத ஆலாபனை பாடிக் கொண்டிருந்தார் அவரது பாடலை பலர் ரசித்துக் கொண்டிருந்தனர். 



அந்தப் பெண்ணுக்கு எதிரில் விரிக்கப்பட்ட துணியில் இசை ரசிகர்கள் எறிந்த டாலர் நோட்டுகள் கிடந்தன.. ஒரே நிமிடம் யோசித்தேன் உலகின் பணக்கார நாடு.. அந்நாட்டின் அதிபர் குடியிருக்கும் அதே தெருவிலும் அன்றாடப் பிழைப்பிற்கு கையேந்தும் மக்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று.. இந்தியனாக இப்போது கொஞ்சம் பெருமிதம் பிறக்க காரில் ஏறினொம். ஓஓஓஓஓஓஒ.. என அப்பெண்ணின் ஆலாபனை என் காதுகளில் புகுந்து போய்வா என் இந்திய நண்பனே என்றது.

நிறைந்தது..

No comments:

Post a Comment