Monday 23 May 2016

ஒரு அமுதசுரபியின் கதை..


கிட்டத்தட்ட 20லிட்டர் தண்ணீர் பிடிக்கும் கொள்ளளவு உள்ள கல்சட்டி அது.. உங்களுக்கு அதுசட்டி எங்களுக்கு அது அமுதசுரபி.. என் பாட்டி வீட்டில் சமையலறையில் ஒரு ஓரத்தில் வீற்றிருக்கும். பாட்டி வீட்டில் பெரும் பஃபே பார்ட்டி நடக்கும் போது மட்டும் அது சமையலறையின் மத்திக்கு வரும்.

வரும் என்றால் அதன் கனத்திற்கு அதைத் தூக்க முடியாது கேஸ் சிலிண்டரை உருட்டுவது போல ஒரு பக்கம் சாய்த்து உருட்டி வருவோம். நான் தம்பி பாலு தங்கை உமா இன்னொரு தம்பி குமரன் சித்திகளின் பிள்ளைகள் ஹேமா, கார்த்தி, ராஜு, அகிலா,அருண்..

அப்புறம் பாட்டிக்கே பிள்ளைகளான மணி மாமா, கெளரி மாமா, சிவி மாமா, பாச்சு மாமா, ஜெயபாரதி சித்தி, சாந்தி சித்தி, கீதா சித்தி (கொஞ்சம் இருங்க) ஆம் எங்கள் குடும்பம் பெரிது.. இந்த அனைவரும் கூடி வட்டமாக அமர்ந்து விடுவோம். அவ்ளோ பெரிய வீடு.!

நடுநாயகமாக சாலமன் பாப்பையா போல பாட்டி அவர் கை பழைய சாதத்தை அள்ளி பிழிந்து கல்சட்டியில் போட்டுக் கொண்டிருக்கும் ஆனால் பார்வை எங்கள் மீது இருக்கும்.. வெங்கி நீ அந்த மாவடு ஊறுகாயை எடு, உமா நீ கால் கழுவிட்டு வா..

பாலு நல்லா உக்காருடா, ஹேமா கல் உப்பை எடுடி கமெண்டுகள் பறந்து கொண்டிருக்க அதற்குள் பழைய சாதத்தை பிழிந்து போட்டு எருமைத் தயிரை ஊற்றி கல் உப்பு போட்டு அபாரமாக பிசைந்து இருப்பார். வெங்கி வா உப்பு போதுமா பார் என்பார்..

அப்போதே நான் தான் டேஸ்ட் பட் செக்கர் இன்றளவும் அது தொடர்கிறது.. நல்ல நாக்குடா உனக்கு என்பார் பாட்டி.. அவளுக்கு தெரியாத சட்டங்கள் ஒன்றுமில்லை யுவர் ஆனர் என இப்போது சொல்லத் தோன்றுகிறது. வெறும் தயிர்சாதம் தான்..

பாட்டி வீட்டில் ஊறுகாய் தயாரிப்பு இருப்பதால் நிச்சயம் 3 விதமான ஊறுகாய் இருக்கும்.. சில வேளைகளில் பழைய வத்தக் குழம்பு எனும் அமுதமும் கிடைக்கும்.. கடைக் குட்டியான கீதா சித்தி பாட்டிக்கு டெபுடி.. குழம்பு ஊற்றுவது அவர் தான்.

பாட்டியின் கவளம் கவனமாக இருக்கும்  எனக்கு ஒரு சிறிய பந்து அளவிற்கு என்றால் சிறிய கொய்யா அளவிற்கு தம்பிக்கு எலுமிச்சை சைசில் என் தங்கைக்கு கடலை உருண்டை சைசில் பொடியர்களுக்கு அவரவர் முன் ஊறுகாய் இருக்கும்

குழம்பு என்றால் அகப்பையில் கீதா சித்தி ஊற்றுவாள் சாதத்தை குழி பண்ணிக்கொள்ள வேண்டும்.. மாமா சித்திகளுக்கு கவளம் சாத்துக்குடி சைசில் கிடைக்கும் அரட்டை சிரிப்பு கும்மாளம் என அதிரும் ஆஹா என்னவொரு அழகிய கனாக்காலம் அது..!

அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய பஃபே விருந்தென்றார்கள் ஒருவருக்கு 150 டாலர்கள் கிட்டத்தட்ட 12ஆயிரம் ரூபாய் 240 உணவுகள் 67 வது மாடியில் நடந்த ஆடம்பர விருந்து.. கலந்து கொண்டேன்.. நன்றாகத் தான் இருந்தது..!

ஆனால் மனம் பாட்டி வீட்டு விருந்துக்குத் தான் முதல் மதிப்பெண் தருகிறது இன்று மாமாவுடன் பேசினேன் மாமா அந்த கல்சட்டி..? அது உடைஞ்சிடுச்சுடுடா கண்ணு என்றார்.. ஏனோ என் பாட்டி இறந்த அன்று அழுததை விட இன்று அதிகம் அழுதேன்.

No comments:

Post a Comment