Monday 23 May 2016

வாஷிங்டன் வாக்கிங் - 2

அமெரிக்க ஹிஸ்டரி மியூசியம் ஒரு முக்கியமான மியூசியம்.! அமெரிக்காவின் உணவு, கலாச்சாரம், போக்குவரத்து, அறிவியல் மேம்பாடு, உள்நாட்டு போர், அமெரிக்க அதிபர்கள், அமெரிக்க விஞ்ஞானிகள், அவர்களது கண்டு பிடிப்புகள் இப்படி எல்லாமே வந்த நாள் முதல் இந்த நாள் வரை காட்சிப் படுத்தி இருந்தார்கள். வழக்கம் போல வாசலில் ரிசப்ஷன் கவுண்டர், இலவச கையேடுகள் ஆனால் மியூசிய மேப்பிற்கு மட்டும் ஒரு டாலர் கட்டணம்.



மொத்தம் மூன்று மாடிகளிலும் மியூசியம் இருந்தது.. மியூசியம் நடுவில் இருக்கும் நிலை,வலது பக்க நிலை,இடது பக்க நிலை என அமைந்திருந்தது எளிதாக சொன்னால் ஹைவே சாலை தான் நடுநிலை அதன் வலது இடது புறம் இருக்கும் வயல்வெளிகள் தலா இன்னொரு நிலை.. உதாரணம் புரிந்து இருக்கும்  என நம்புகிறேன்.. நடுத்தளத்தில் கிஃப்ட் சென்டர்கள், மியூசிய உதவி டெஸ்க், ரெஸ்ட்டாரண்ட்டுகள், ரெஸ்ட் ரூம் போன்றவை இருந்தன.

வலப்பக்கம் இடப்பக்கம் ஒவ்வொரு தளமாக போக வேண்டும் அதாவது 3 வலது 3 இடது என 6 இடங்களில் மியூசியம்.. இதில் 3 நிலைகளை புதுப்பித்துக் கொண்டிருந்ததால் அனுமதி இல்லை.. நாங்கள் பார்த்தது 3 நிலைகளையே.. இதற்கே பெண்டு கழண்டது.. காலையில் நாசா மியூசியம் பிறகு வொயிட் ஹவுஸ் பிறகு அங்கிருந்தே இந்த மியூசியத்திற்கு என நாங்கள் நடந்ததற்கு ஒரு மாரத்தானிலேயே கலந்து கொண்டிருக்கலாம்.



இந்த மியூசியத்திற்குள்ளும் ஒரு 4 கிமீ நடந்தோம்.. அந்தக் கால அமெரிக்க வாகனங்கள், ரெயில்கள், கோச் வண்டிகள், பேருந்துகள், இப்படி அழகாக காட்சிப் படுத்தி இருந்தனர். 1950 முதல் 2000 வரை உணவு பற்றி, உள் நாட்டு போர் பற்றி, பீரங்கி தாங்கிய படகுகள், ஜார்ஜ் வாஷிங்டன் அமர்ந்த நாற்காலி, லிங்கனின் மரணம் இப்படி அவர்கள் வரலாற்றை பற்றி தனித்தனி அரங்குகளாக உணர்வுப் பூர்வமாகவும் அழகாகவும் அமைத்திருந்தனர்.



அறிவியல் மற்றும் விஞ்ஞான வளர்ச்சி பற்றி.. ஆரம்ப காலத்தில் அவர்களது கண்டுபிடிப்புகள்.. எதிர்கால அறிவியல் தொழில் நுட்பம் என அவையும் தனித்தனி அரங்குகளாக இருந்தன. இதில் முக்கியமானது தாமஸ் ஆல்வா எடிசன் மியூசியம்.. இந்த உலகம் வெளிச்சத்துக்கு வர காரணமானவர் ஏராளமான பல்புகள் வாங்கி பல்பு கண்டுபிடித்தவர்.. இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இவரே உலகின் மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பாளர்..



அவரது மியூசியத்திற்குள் நுழையும் போதே எஸ்.ஏ.ராஜ்குமார் பின்னணி போல லா லா லா லால்ல லா லா லா எங்கள் காதுகளில் ஒலித்தது.. உணர்வுப் பூர்வமாக இருந்தோம். தமிழகத்திலே ஒரு மூலையான சேலத்தில் பிறந்து மதுரை மேலமாசி வீதியில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் எனக்கு பிதாமகனில் லங்கர் உருட்டும் சூர்யா பாணியில் சொன்னால்.. நீங்க சிங்கப்பூர் போயிருப்பிங்க மலேசியா போயிருப்பிங்க ஆனா அங்கல்லாம் ..



கிடைக்காத ஒரு அர்ர்ர்ரிய வாய்ப்பு சார்.. நம்ம அமெரிக்காவுல தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகளை பார்க்க போறிங்க..என காதில் ஒலித்தது.. மனுசன் எதைத்தான் கண்டுபிடிக்கலை ஒரு வேளை இந்த மியூசியத்துல நாங்க தொலைஞ்சிருந்தா கூட கண்டுபிடிச்சுடுவாரு போல..  அவர் கண்டுபிடித்த முதல் பல்பு முதல் அது பிறகு எப்படி எல்லாம் உருவம் மாறியது என எண்களோடு பல்புகளை அடுக்கி இருந்தனர்.



பேட்டரியை கண்டுபிடிச்சதும் இவர் தானாம்.. காயல்கள், ஜெனரேட்டர், ஆம்ப்ளிபயர்ன்னு மனுசன் 360 டிகிரில அறிவியல் டிவில்லியர்சா அடிச்சு துவைச்சிருக்காரு.. காது கேக்காத மிசினும் இவர் தான் கண்டுபிடிச்சதாம் இவருக்கே காது கேக்காது அப்படிங்கறது தனி விஷயம்.. கிரஹாம் பெல் மட்டும் போனை கண்டுபிடிக்கலை இவரு கண்டு பிடிச்சிருப்பாரு.! ஏன்னா அதையும் முயற்சி பண்ணியிருக்காரு எடிசன்.. அவரது கண்டுபிடிப்புகள்..



அவர் கைப்பட எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புகள் எல்லாம் நம் பார்வைக்கு வைத்திருந்தனர்.. அவரது  மின்சார சம்பந்தப்பட்ட கண்டுபிடிப்புகள் மட்டும் 278ஆம்.. அத்தனையையும் அழகாக தெளிவான விளக்கத்துடன் ஆவணப் படுத்தி இருந்தார்கள். நிச்சயம் உணர்வு பூர்வமான நிலையில் இருந்தோம்.. பிறகு உணவு உற்பத்தி அரங்கம் அவர்கள் ஆண்டு தோறும் உற்பத்தி செய்யும் பொருட்களின் உற்பத்தி அளவெல்லாம் கேட்டால் தலை சுற்றியது..!



எல்லாம் மெகா அளவுகளில் தன்னிறைவு பெரும் வகையில் இருந்தன.. அடுத்து அறிவியல் விஞ்ஞான அரங்கு இங்கும் பிரமிக்க வைத்தார்கள் 2050 இல் அமெரிக்கா எப்படி இருக்கும் அப்போது என்னென்ன வசதிகள் வரும், நகர கட்டமைப்புகள், போக்குவரத்து, புதிய பாலங்கள்  இப்படி தெளிவாக திட்டமிட்டு அவற்றை மினியேச்சர்களாக வைத்திருந்தனர். இந்தத் தொலை நோக்குப் பார்வை நம்மிடம் இல்லையே என்ற ஆதங்கம் வந்து போனது.



எலே பசுபதி என்றா இன்னும் நாயம் பேசீட்றுக்க.. நாள் முச்சூடும் நடந்து நடந்து காலெல்லாம் வலிக்குதில்ல அவுத்தால போயி கொஞ்சம் உக்காரலமில்ல என உள்ளிருந்து நாட்டாமையின் குரல் ஒலிக்க ஓரமாய் அமர்ந்தோம். கோக் 3 டாலர்.. பட்வைசர்ஸ் 3டாலர் என்ற விலைப் பட்டியலை பார்த்த பின் நாங்கள் எதை வாங்கியிருப்போம் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.. ஆனால் ஒயிட் ஹவுஸ் பற்றி அடுத்தபதிவில் தான்.. ப்ளீஸ்  (வரும்..)






No comments:

Post a Comment