Tuesday 24 May 2016

பந்தி (மாடசாமி நாடார் உணவகம்)

#மாடசாமி_நாடார்_உணவகம்

தென்காசி அல்லது இராஜபாளையம் கிளம்புவதென்றால் கொலைப் பட்டினியுடன் கிளம்புவது என் வழக்கம்.. காரணம் மாடசாமி நாடார் உணவகம்.. இத்தனைக்கும் இது நகருக்குள் இருக்கும் ஓட்டல் அல்ல இராஜபாளையத்திலிருந்து தென்காசி செல்லும் சாலையில் 7 வது கிலோ மீட்டரில் இருக்கிறது.. மெயின் சாலையில் இருந்து இடது புறத்தில் கோபித்துக் கொண்டு திரும்பிய காதலி போல பிரியும் ஒரு சாலை வரும்.

அதில் 3 கி.மீ பயணம் செய்தால் மாடசாமி நாடார் உணவகத்தை அடையலாம். மெயின் ரோடிலேயே கடை ..காற்றில் வீசும் மசாலா வாசனையே கடையின் விலாசத்தை சொல்லும் அதன் முகப்பு வாசல் சின்ன குறுகலான வழியில் சந்துக்குள் இருக்கும் உள்ளே அதிகபட்சம் 30 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும் அளவு தான் இடவசதி.. எந்நேரமும் கூட்டம் சித்திரை திருவிழா போல அலைமோதும்.



ஐ.ஐடியில் இடம் கிடைப்பது கூட எளிது.. நிச்சயம் ஒரு 15 நிமிடமாவது காத்திருக்க வேண்டும்.. எதுக்குடா இந்த காத்திருப்பு வேற கடைக்கு போகலாம்னு நினைக்க முடியாது ஏன்னா இங்கு தரமும் சுவையும் அப்படி நிச்சயம் காத்திருந்து சாப்பிட்டவர்கள் சொல்வார்கள் ஒர்த் வெயிட்டிங்னு. கொஞ்சம் திரும்பி பாருங்க இராஜபாளையம் மில் முதலாளிகள் தங்கள் லெக்ஸஸ், பென்ஸ், BMW கார்களில்  அங்கே காத்திருப்பது தெரிகிறதா!

அப்போ சாதாரணமான நாம் காத்திருக்க மாட்டோமா என்ன.! அப்படியே  பிளாஷ்பேகில் ஒரு 18 ஆண்டுகளுக்கு முன் எனக்கு அறிமுகமான கடை. அன்றிலிருந்து இன்று வரை எப்போது போனாலும் அந்தத் தரமும் சுவையும் மாறாது இருப்பது இவர்களின் ப்ளஸ்.. குற்றாலம் போகும் நண்பர்களிடம் சொல்வேன் தளவாய்புரத்தில் மதியச்சாப்பாடு சாப்பிடும் படி உங்கள் பயண திட்டத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று.. அப்படிப் போனவர்கள்..

இன்று அவர்களது நண்பர்களுக்கு அதையே பரிந்துரைக்கிறார்கள். சரி இங்கு என்ன ஸ்பெஷல்.. தரமும் சுவையும் தான்.. இவர்களின் மசாலா கலவையும் கோக் பெப்சி ஃபார்முலா போல தனித்துவம் மிகுந்த குடும்ப கைமணம். 43 ஆண்டுகளுக்கு முன் மாடாசாமி நாடார் என்பவர் ஆரம்பித்து வைத்த கைப்பக்குவம் 3தலைமுறைகளாக தொடர்கிறது.. இரண்டாவது இங்கு உணவுகளின் விலை அநியாயத்திற்கு நியாயமாக இருப்பது தான்.!



இன்றளவும் அன்லிமிடெட் மீல்ஸ் 60 ரூபாய் தான்.. இன்னொரு ஆச்சரியம் இங்கு மட்டனை விட சிக்கன் விலை அதிகம்..! அட ஆமாங்க அதற்கேற்ற தரத்திற்கு வெங்காயம் வத்தல் என உயர் ரகமாக வாங்குகிறோம்.. குறிப்பிட்ட தரமான எள்ளை எடுத்து செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் தான்.. அதனால் தான் இங்கு மட்டனை காட்டிலும் சிக்கன் விலை அதிகம் என்கிறார் இப்போதைய தலைமுறை முதலாளியான கணேஷ்.



அதே போல மீன் குழம்பு சின்ன வெங்காயம் போட்டு வைக்கிறார்கள்.. பிரியாணியும் இங்கு ஃபேமஸ்.. ஆனால் சாப்பாடு வாங்கி கோழி சாப்ஸ் மட்டன் குழம்பு அயிரை மீன் குழம்பு எனச்சாப்பிடுவது தான் பெஸ்ட்.!அதிலும் கரண்டி சுக்கா என ஒருமெனு.. கரண்டி ஆம்லேட்டில் மட்டன் துண்டுகள் இட்டுத்தருவார்கள் அடடா சொத்தை எழுதி வைக்கலாம்.! கரண்டி ஆம்லேட்டும் பக்கா.. மாலை புரோட்டா தோசை கிடைக்கும்.



சைவ சாப்பாடும் 60 ரூபாய் தான் மணக்க மணக்க சாம்பார், ஒரு கூட்டு ஒரு பொரியல், ரசம், மோர் என அன்லிமிடெட் சாப்பாடு. அதிலும் இவர்கள் கடை ரசம் அவ்வளவு ருசி சூப் போல குடிக்கலாம் நன்றாக நான்வெஜ் சாப்பிடும் இருவர் சாப்பிட்டால் கூட பில் 500ஐ தாண்டாது..இவர்களது கிச்சனை பார்க்க வேண்டும். அடடா என்ன சுத்தம்! சுகாதாரம்.! கண்ணாடி போல பள பளவெனயிருக்கும் சாப்பிட்டுக்கொண்டே நாம் அதை பார்க்கலாம்.

அந்த அமைப்பில் தான் கடை கட்டப்பட்டு இருக்கிறது..பெரிய நகரங்களில் இல்லாமல் தைரியமாக ஒருசிறு கிராமத்தில் கடை ஆரம்பித்து அதை 43 ஆண்டுகளாக நிர்வாகம் செய்வதும்... தரத்தில் காம்பிரமைஸ் செய்து கொள்ளாமல் நியாயமான விலையில் பிறருக்கு உணவிடும் சேவைத் தொழிலை புரிந்து வருவதும் இவர்களை கை கூப்பி வணங்க வைக்கிறது.. இராஜபாளையமோ குற்றாலமோ போனால் கண்டிப்பாக போக மறக்காதிங்க நம்ம மாடசாமி நாடார் அண்ணாச்சி கடைக்கு.! ஓ.கே..

No comments:

Post a Comment