Monday 23 May 2016

தொங்கும் விமானத் தோட்டம் - 2

சரவிளக்குகள் கூரையில் தொங்குவது போல சிறு ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர், இராணுவம் மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு உள்ளது சார்ட்டட் எனப்படும் தனியார் விமானம் என பல்வேறு விதமான விமானங்களை அங்கு தொங்கவிட்டு இருந்தனர்..  சற்றே பெரிய விமானங்கள் தரை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. கருஞ்சிறுத்தை கால் நீட்டி பாயத்தயாராவது போல ஒரு பிரம்மாண்ட கரிய போர் விமானம்.

அமெரிக்காவின் அதிவேக அதி நவீன போர்விமானம் என்றார்கள்.. விதவிதமான ஹெலிகாப்டர்கள், விமானப்படை விமானங்கள் என பார்த்து பார்த்து ரசித்தோம் புகைப்படங்கள் எடுத்து கைவலியும் நடந்து நடந்து கால் வலியும் உண்டானது. ஆரம்ப காலத்து ரைட் சகோதரர்கள் விமானம் முதல் படிப்படியாக வடிவம் மாறிய விமானங்கள் அனைத்தும் அங்கு இருந்தன. விமானங்கள் மீது ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு புனிதப் பயணம்.

தரை தளத்தில் தனியாக ஒரு பிரிவில் ஒரு பெரிய விமானம் நிற்பதை தூரத்தில் பார்த்தோம்.. என்ன இது ஒரு பெரிய பயணிகள் விமானமாக இருக்கும் என அலட்சியமாக பிறகு போய் பார்த்துக் கொள்ளலாம் என வெளியே சுற்றிக் கொண்டிருந்தோம்.. ஆங்காங்கே நாசா ராக்கெட்டுகள் பற்றிய அறிவிப்பு இருந்தது.. அதையெல்லாம் பார்க்கவில்லையே என யோசித்துக் கொண்டிருந்த போது நான் நீண்டநேரமாக பின் தொடர்ந்து..

கொண்டிருந்த சிக்ஸ் பேக் போல படிகள் வைத்த சிவப்பு ஜெர்கின் கருப்பு ஜீன்ஸில் அலையும் பொன்னிறக் கூந்தலை ஆட்காட்டி விரலை உள்புறம் மடக்கி ஒரு விரலால் அதை ஸ்டைலாக தள்ளிவிட்டுக் கொண்டிருந்த அந்த அமெரிக்க அழகுச்சிலையிடம் எக்ஸ்க்யூஸ்மீ என்றேன். பளீர் புன்னகையுடன் திரும்பி "யா"  என்றாள்.. அவள் கையில் இருந்த மேப்பை காட்டி (என் பல்லையும்) ஐ வாண்ட் ஸம் இன்பெர்மேஷன்.. கேன் யூ எல்ப் மீ..

என்றேன் என் ஓட்டை ஆங்கிலத்தில்.. தயங்காது யா ஷுர் என்றவள் மேப்பை என்னிடம் தந்து விட்டு அருகில் வந்து நெருங்கி நின்று கொண்டாள்.. அவள் மீதிருந்த லாவண்டர் வாசம் என் நாசியை துளைக்க நாசாவைப் பற்றி மேப்பில் தேடாது என்னை நாசப்படுத்தியது அவள் அருகாமை.. ஓஹ் யூ வாண்ட்டு கோ டூ நாசா..? ஸீ தட் பிக் ஷட்டில் தட் இஸ் நாசா கேலரி என்று அறிஞர் அண்ணா போல அவள் விரல் நீட்டிய திசையில் நின்றது...

பயணிகள் விமானம் என நாங்கள் நினைத்து போகாது விட்ட இடம்.! இருப்பினும் அவளை பிரிய மனம் இன்றி பேச்சை வளர்த்தேன்.. பால்டி மோரில் இருந்து வருகிறாள் பெயர் ஜேனட்.. அப்புறம்.. ஹாய் என ஒலித்த குரலால் நான் திரும்ப உண்மையிலேயே சிக்ஸ் பேக் வைத்த அறிவுச்சுடர் ஒளிரும் பார்வையில் ஒருவன் வந்தான் ஜேனட்டின் பாய் பிரண்டாம்.. இருவரும் கட்டிப்பிடித்துக் கொள்ள இனி அங்கு நான் நிற்க பைத்தியமா..!

தேங்யூ சிஸ்டர் என ஓடியபடியே கத்திவிட்டு நாசா வாயிலில் வந்து நின்று மூச்சு வாங்கினேன்.. எதிரில் நின்ற விமானம் புலியா சிறுத்தையா என சந்தேகிக்க வைக்கும் கழுதைப்புலி போல இது விமானமா அல்லது போர் விமானமா என குழம்பிக் கொண்டே அருகில் போன போது தான் தெரிந்தது அது டிஸ்கவரி என்னும் விண்வெளி ஓடம் என்று மெய் சிலிர்த்து போனேன்.. கிட்டத்தட்ட 40 முறை விண்ணுக்கும் மண்ணுக்கும் பறந்த ஓடம்.

அமெரிக்க விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக என அவர்கள் கூறிக் கொள்ளும் பல விண்வெளி சாதனைகளை படைத்த ஓடம் டிஸ்கவரி.. அதை சுற்றிப்பார்கவே 10 நிமிடம் ஆயிற்று அவ்வளவு பிரம்மாண்டம்.. விண்வெளி வீரர்கள் வான் வெளியில் தங்கும் சேம்பர், அவர்கள் தூங்கும் அறை இப்படி நிறைய சமாச்சாரங்கள் இருந்தன.. செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்த ஃபாத்பைண்டரின் மாதிரி.. சாட்டிலைட்டுகள் பலவற்றின் மாதிரிகளும்..   

ராக்கெட்டில் இருந்து பூமிக்கு கடலில் வந்து இறங்கியதும் மிதக்கும் சாம்பர் பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் தங்கும் சாம்பர்.. விண்வெளி பயிற்சிக்கு முன் பயிற்சி தரும் சாம்பர் என எங்களை ஆ வென வாய்பிளக்க வைத்தது அந்த அரங்கம்.. அதன் இன்னொரு பகுதியில் ஏவுகணைகள், போர் ராக்கெட்டுகள், ஸ்கட், பேட் ரியாட் போன்ற உலகறிந்த கணைகள் பார்வைக்கு இருந்தன.. அத்தனையும் அறிவியலின் சான்றுகள்.

வெளியே வந்ததும் வழக்கம் போல கிஃப்ட் ஸ்டோர் அங்கு டிஸ்கவரி ஓடம் கி செயினாக வாட்சாக, டிசர்ட்டாக, பொம்மையாக விற்றுக் கொண்டு இருந்தனர். என்னைக் கவர்ந்தது மூன் ஸ்டோன் எனும் கல் வைத்த கழுத்துச் சங்கிலி.. நமது பிறந்த தினத்தை சொல்லிவிட்டால் அதில் செட்டிங்சில் செட் செய்கிறார்கள் அந்த நாளில் நிலா வானில் தோன்றும் அதே நேரம் உங்கள் கழுத்து சங்கிலியில் உள்ள கல் ஒளிர ஆரம்பிக்குமாம்.

ஆஹா தோழியருக்கு வாங்கலாமே என ஆசையுடன் விலை கேட்டேன் 300 டாலர்கள் என்றனர். (21ஆயிரம்ரூபாய்) எனக்கு இருக்கும் தோழியர் எண்ணிக்கையை யோசித்தேன் சில பல இலட்சங்கள் தேவைப்பட்டது கல்லான நெஞ்சுடன் நிலாக் கல் வாங்கும் முடிவை விட்டுவிட்டு இரண்டு டாலரில் ஒரு பொம்மை டிஸ்கவரி மட்டும் வாங்கிக் கொண்டு திரும்பினேன். இருப்பினும் அந்த டிஸ்கவரி அனுபவம்..இப்போதும் மனம் பறக்கிறது..!

நிறைந்தது.

No comments:

Post a Comment