Wednesday 25 May 2016

கிரிக்கெட் அசுரர்கள்..

1980 களில் டெஸ்மண்ட் ஹெய்ன்சும் கார்டன் கிரினிட்ஜும் ஓபனிங் விக்கெட் பார்ட்னர்ஷிப் 100 ரன்களுக்கு மேல் அடிக்கும் போதே மலைப்பாக இருக்கும்.. அன்றைக்கு அது அபூர்வம்.. தப்பித்தவறி அவர்களில் ஒருவர் 10 ரன்களில் அவுட் ஆகிவிட்டால் ஒன் டவுனில் வரும் விவியன் ரிச்சர்ட்ஸ் என்னும் ராட்சஷன் அடிக்கும் அடி அதுக்கும் மேலே.. அது மேட்ச் பார்க்கும் அனைவருக்கும் வலிக்கும். உலகக் கோப்பை என்றால் அது வெஸ்ட் இண்டீசுக்கு அளிக்க உருவாக்கப்பட்டது என நினைத்த காலமும் உண்டு.. 1979 ஆம் ஆண்டிலேயே 291 ரன்கள் அடித்த அணி அது.

1983 இல் இந்தியா 183 ரன்களில் ஆட்டமிழந்த போது.. வெஸ்ட் இண்டீசின் ஓப்பனர்களே அதை அடித்துவிடுவார்கள் என நினைத்து மேட்ச் பார்க்காமல் இருந்தவர்கள் ஏராளம். அதிலும் ரிச்சர்ட்ஸ் பேட்டிங் இருக்கிறதே... இவனெல்லாம் அவுட்டே ஆகமாட்டானா அல்லது இவனுக்கு பந்து போடத்தான் நாம பொறந்து இருக்கோமா என சந்தேகம் வரும் அளவுக்கு வெளுப்பார்கள் 10 மேட்ச் ஆடினால் பத்திலும் வெற்றி தப்பித்தவறி ஒன்றில் தோல்வி.. ஆஸ்திரேலியாவே அன்று அரண்டு மிரண்ட டீம் வெஸ்ட் இண்டீஸ். அதிலும் அவர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் படை மிரட்டி எடுக்கும். யார் அடிப்பார்கள் யார் அடிக்க மாட்டார்கள் என கணிப்பதே கடினம். 

வெற்றி கிரீடம் எப்போதும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தான். அந்தளவிற்கு நாடி நரம்பு ரத்தம் சதை குடல் குந்தாணி எல்லாவற்றிலும் கிரிக்கெட் வெறி ஊறி உப்பு தடவி இருக்கும் மிரட்டலான அணி அது.ஹெய்ன்ஸ், கிரினிட்ஜ், ரிச்சர்ட்ஸ், லாரிகோம்ஸ், லோகி, டுஜான், கிப்ஸ், மார்ஷல், கார்னர், ஹோல்டிங், ராபர்ட்ஸ்.. என 80 களில் முதல் அணியும் 85க்கு பின் ரிச்சி ரிச்சர்ட்சன், ஹுப்பர், பாப்டிஸ்ட், அம்புரோஸ், வால்ஷ், பேட்டர்சன், போன்ற அடுத்த ஹீரோக்களும் வந்து கலக்கிய அணி. இவர்களுக்கு மட்டும் எப்படி இப்படி அதிரடி வீரர்கள் கிடைக்கிறார்கள் என உலகமே பொறாமையால் பொசுங்கியது அன்று.. எல்லாம் விவியன் ரிச்சர்ட்ஸ் ஓய்வு பெறும் வரையில் தான்..! 

அப்புறம் எல்லாமே தலைகீழானது. வெஸ்ட் இண்டீஸ் வேஸ்ட் இண்டீஸ் ஆனது.. காரணம்..??? அந்த தீவுகளின் வீரர்கள் பணம் அதிகம் சம்பாதிக்க கால்பந்திலும் அத்லெட்டிலும் கவனம் பதிக்க.. மெல்ல மெல்ல கிரிக்கெட் மகுடத்தை அவர்கள் பறிகொடுத்தார்கள்.. ரிச்சர்ட்ஸின் ஓய்வுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் ஒரே ஒரு எழுச்சி பிரையன் லாரா சாதனைகள் மட்டுமே அதுவும் விழலுக்கு இறைத்த நீராக இருந்ததே தவிர பழைய அண்ணன் பெருமையைத் திரும்பத் தரவில்லை. 90களின் துவக்கத்தில் இருந்து கிரிக்கெட்டில் தன் பிடியை மெல்ல மெல்ல தளர்த்திய வெஸ்ட் இண்டீஸ் கத்துக்குட்டி கென்யாவுடன் எல்லாம் தோற்றது.

இன்றளவும் சம்பளப் பிரச்சனை போர்டுக்கும் வீரர்களுக்கும் உண்டு. எல்லாம் 20/20 கிரிக்கெட் வரும் வரை..!இன்று உலகில் எந்த நாட்டில் 20/20 நடந்தாலும் அங்குள்ள எல்லா அணிகளிலும் 2 மேற்கிந்திய வீரர்களாவது இருப்பார்கள்.. இப்படி அவர்களுக்கு நல்ல துவக்கத்தை தந்து உயர்த்தியதற்கு நம் இந்திய ஐ.பி.எல் ஒரு பிரதானக் காரணம்.. இங்கு ஆடிய அனுபவத்தில் 2012 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றார்கள்.. அப்போதும் சம்பளப் பிரச்சனை வர அங்குள்ள வீரர்கள் பிற நாடுகளில் 20/20 தொடர்களில் ஆடி கிடைக்கும் வருமானமே போதும் நாட்டின் கிரிக்கெட் அணி தேவையில்லை என்ற முடிவுக்கும் வந்தார்கள்.

கடினமான சூழல் தான்.. ஆனால் இன்று உலகில் தாங்கள் ஒரு அசைக்க முடியாத அணி என ஆண்/பெண் இரு பிரிவிலும் உலகச்சாம்பியன் ஆகியிருக்கிறார்கள். இது ஒரு உலக சாதனை! இப்படி நடப்பது இதுவே முதல்முறை..! இழந்த பெருமையை மீட்ட மேற்கிந்திய தீவுகளில் இனி கிரிக்கெட் உயிர் பெறும்.. நாளை இன்னும் பலப்பல அதிரடி வீரர்கள் அங்கு உருவாவார்கள்.. பல சாதனைகள் நிகழ்த்தப்படும்.அதற்கான பிரகாசமான சூழல் தான் இந்த வெற்றிகள்.. கிளப்சோ என்னும் பாரம்பரிய பாடலும் டெஸ்ட் மேட்சுகளில் பிக் பேர்டு, பிக் டாக், என்னும் அடைமொழிகளும் கொடுத்த பாரம்பரிய டெஸ்ட் ரசிகர்கள் இப்போது இல்லை.

எத்தனை அதிரடி வீரர்கள் வந்தாலும் கேரி சோபர்ஸ் போல், காளிச்சரண் போல், கிளைவ் லாயிட் போல், லாரா போல் நல்ல டெஸ்ட் வீரர்கள் உருவாகும் வாய்ப்பு மிகக் குறைவு.. ஆனால் ஆயிரம் கெயில்கள் உருவாவார்கள் அது சர்வ நிச்சயம்.!

#வாழ்த்துகள்_வெஸ்ட்_இண்டீஸ்..

No comments:

Post a Comment