Sunday 14 May 2017

தேர்தல் IPL2016

தேர்தல் IPL (விளையாட்டாய் ஒரு கற்பனை)

IPL நடக்கும் வேளையில் தேர்தலும் நடப்பதால் அரசியல் கட்சிகளையும் IPL டீம் போல் ஆக்கி அந்த அணிகளைப் பற்றி ஒரு பார்வை...

அதிமுக கிளாடியேட்டர்ஸ் : அணியில் யாருக்கு நிரந்தர இடம் என்று யாராலும் சொல்ல முடியாது..! ஆனால் நிரந்தர கேப்டன் அம்மா தான்..! அவர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கேப்டன் ஆக்குவார், மறு நாளே கேப்டனை12th மேனாக்குவார்.. அல்லது டீமிலிருந்தே தூக்குவார்.. தரையில் விழுந்து பீல்டிங் செய்வதில் மிகத் திறமையான அணி..!இதுவே இவர்களது மிகப் பெரிய பலம் ஆனால் எந்த முடிவும் கேப்டனை கேட்காமல் எடுக்க முடியாதது பலவீனம்..! கிரவுண்ட்டில் பவுண்ட்ரி லைன் அருகே இவர்கள் கேப்டனை பற்றிய விளம்பரங்களே இருக்கும்..! டிரிங்ஸ் டைமில் அம்மா வாட்டர் குடிக்க தரப்படும்..மேலே பறந்து வரும் பந்தை இமைக்காமல் பார்த்துப் பிடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட் பயிற்சி பெற்றவர்கள் என்றாலும் "மின்"னொளியில் நடக்கும் ஆட்டங்களில் வெற்றி பெறத் தடுமாறுவது இவர்களது தற்போதைய பிரச்சனை.. ஆனால் தலைமைக்கு அடங்கும் மிக மிக பணிவான பவ்யமான டீம்.. இலைப் பச்சை சீருடையினர் அதிமுக கிளாடியேட்டர்ஸ்...

திமுக சூப்பர் கிங்ஸ் : அணியின் பெயரில் கிங்ஸ் எனப் பன்மையில் இருப்பதிலேயே பிரச்சனை விளங்கும்..! கோச் & கேப்டன் இருவரும் ஒருவரே... பல ஆண்டுகளாக வைஸ்கேப்டன் மட்டும் மாறாது இருக்கிறார்..அவர் எப்போது கேப்டன் ஆவார் என்பது யாருக்கும் தெரியாது..அவர் கேப்டன் ஆனால் அணிக்குள்ளேயே பிரச்சனை ஆகும் என்பதால் முதிர்ந்த வயதிலும் பதவியை தொடர்கிறார் தற்போதைய கேப்டன்.. ஆடும் லெவனில் உறவினர்களே அதிகம் தேர்வு செய்யப்படுவார்கள்.. பலருக்கு இதயத்தில் இடமளித்து 12th மேன்களாக்கி அழகு பார்ப்பது கேப்டனுக்கு  கை வந்த கலை..வைஸ் கேப்டனின் சகோதரர் கேப்டனாக நினைத்ததால் அவர் அணியிலிருந்தே நீக்கப் பட்டார். எதிர் அணிகளை சந்தித்து சொந்த அணியை தோற்கடிக்கும் பணியை அவர் செய்யக் கூடாது என்பதே தற்போதைய அச்சம்..  புகார் தொடுக்கப்பட்ட வீரர் சிலரை அணியில் வைத்திருப்பதும் இவர்களது பலவீனம்..! தற்போதைக்கு இவர்களின் கேப்டனின் பேச்சு மட்டும் தான் அணியினருக்கு பலம்.. யார் கிங் எனத் தீர்மானிக்க முடியாத டீம்.. சூரிய மஞ்சள் நிறத்து சீருடையினர் திமுக சூப்பர் கிங்ஸ்...

தேமுதிக சார்ஜர்ஸ் : அதிரடி ஆக்ரோஷமான கேப்டன் உள்ள அணி.. மற்ற அணியினருக்கு எல்லாம் கேப்டன் பெயர் வேறு இருக்கும் ஆனால் இவர் பேரே கேப்டன் தான்..சார்ஜர்ஸ் என்று பேர் இருந்தாலும் சார்ஜர் கேப்டனே..! இவரது சார்ஜை தாங்காது அலறி அடித்துக் கொண்டு அணி மாறிய வீரர்களும் உண்டு.. விளையாட்டு மைதானத்தில் எதிர் அணி கேப்டனையே கோபத்துடன் எச்சரித்தவர் கேப்டன்... எப்போது கோபப்படுவார் என்றே தெரியாது...பந்து காலில் பட்டதுக்கு How is that கேக்காமல் சிக்ஸர் அடித்ததற்கு கேட்டு அம்பயரையே குழம்ப வைப்பார்..அடிக்கடி டயர்டாகி திடீர் திடீர் என பெவிலியன் திரும்பி விடுதல் இவரது பலவீனம்..ஆனால் இவரது குடும்பத்தினர் இவரது வெற்றிக்காக பாடுபடுவது பலம்.. அணியில் மாநில அளவில் இவரது அணியினர் அதிகம் பேர் இடம் பெற்றதே பெருஞ் சாதனை..வெற்றி முரசு கேட்காதா என காத்திருக்கும் டீம்... கருப்பு,மஞ்சள்,சிகப்பு மிக்ஸ் ஆன சீருடையினர் தேமுதிக சார்ஜர்ஸ்...

மதிமுக வாக்கர்ஸ் : ஃபிட்னெஸ் நிறைந்த டீம் நிறைய போராட்டங்களுக்கு பிறகு ஆட வந்துள்ளது நீண்ட நாள் உள்ளூர் போட்டிகளில் ஆடாத உணர்ச்சி வசப்பட்டு அழுகின்ற கேப்டனை கொண்ட அணி.. எல்லோரையும் அரவணைத்து செல்பவர் என்றாலும் பலர் இவரை அழ வைத்துவிட்டு பிரிந்து சென்று விடுவார்கள்..இவரே வேறு ஒரு அணியில் இருந்து பிரிந்து வந்தவர் தான் என்பது வேறு கதை.. எந்த ஒரு பிரச்சனை என்றாலும் நடையாய் நடந்து அதை தீர்த்து வைப்பார்.. ஆனால் பேட்டிங், பவுலிங்,பீல்டிங் ஆகிய எல்லாத் துறைகளிலும் பலவீனமான அணி இப்போது நம்பி இருப்பது மெகா கூட்டணி என்னும் பலம்.. அதுவே பலவீனம்.. களத்தில் பம்பரமாக சுழன்றாலும் இந்த லீக்கில் சாட்டை இவர் கையில் இல்லை...கேப்டனாக அதிக தோல்விகளை சந்தித்த சோகமான சாதனை உள்ளவர்.! இப்போது அது மாறுமா என வேறு கேப்டனை முன்னிறுத்தி டீமையே தேமுதிக சார்ஜரில் இணைத்து விட்டு வெற்றியை ஆவலுடன் எதிர்பார்க்கும் டீம்.. கருப்பு சிவப்பு கருப்பு சீருடையினர் மதிமுக வாரியர்ஸ்...

பா.ம.க. மேங்கோஸ் : இதுவும் தோட்டத்து அணியே.. இலைகளுக்கு பின்னாலும் சூரிய ஒளியிலும் இதுவரை விளைந்து வந்த இத்தோட்டத்து அணி முதன் முறையாக தனித்து களம் காண்கிறது.. உடலுக்கு அதிக உஷ்ணத்தை கொடுக்கும் கனி(அணி) ஆகிய படியால் எதையும் மருத்துவர் இடத்திலே கலந்து ஆலோசித்து அதன் பிறகே முடிவெடுக்கப்படும்.. வடக்கு பகுதிகளில் ஒரளவு செல்வாக்கு பெற்ற அணி ஆனால் நாங்கள் தான் இந்த டோர்னெமெண்ட்டையே வெல்லப் போகிறோம் என அளவிலா நம்பிக்கையுடன் கொக்கரிக்கும் அணி.. இந்த அணி கொஞ்சம் இனப்பற்றை குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.. பழம் நன்றாக இருந்தாலும் சிலநேரங்களிலே உள்ளிருக்கும் "குறு" வண்டுகளால் பழத்திற்கு சேதாரம் உண்டாகலாம்.. மாற்றம் கிடைக்கும் என இதன் கேப்டன் முழங்கியதை மக்கள் கொஞ்சம் ஏற்றுக் கொண்டதே இவர்களது முன்னேற்றம் தான் வெற்றிக்கனி பழுக்குமா என்பதை அறிந்து கொள்ள காத்திருக்கிறார்கள் மாம்பழ பச்சைநிற சீருடை அணிந்த பா.ம.க. மேங்கோஸ் அணியினர்.

பா.ஜ.க ராயல் எண்டர்டெயினர்ஸ் : தேசிய அளவில் பெரிய அணி மாநிலத்தில் தடுமாறுவது தான் காமெடி.. கபடி ப்ளேயர்சை ஒரு அணியாக்கி கிரிக்கெட் ஆட அனுப்பி இருப்பது உச்சபட்ச நகைச்சுவை.. டிரிங்ஸ் டைமில் டீ குடித்த சுறுசுறுப்பில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் காவிக் கொடி பறக்கும் என இவர்கள் முழங்கியதைக் கேட்டு தமிழக மக்கள் அனைவரும் சிரித்து தங்கள் கவலைகளை மறந்ததே இவர்கள் செய்த பெருஞ்சாதனை. யாருமே வாரியணைக்காத இந்தக் குழந்தை.. சவலைப் பிள்ளைகளை எல்லாம் சேர்த்துக் கொண்டு ஒரு அணியாகி இருக்கிறது.. இதன் தேசியத் தலைமை உலகம் சுற்றிக் கொண்டிருப்பதும் இவர்கள் உள்ளூரில் சுற்றிக்கொண்டிருப்பதும் இவர்களது பலவீனம்.. தாமரை மலரும் என்பதெல்லாம் சரி அதற்கு குளத்தில் தண்ணீரிருக்க வேண்டும் என யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.. காவிச் சீருடை அணிந்த இவ்வணிக்கு மக்கள் பரிசாகத் தரப்போவது கமாண்டர் பதவி என நினைத்து இருக்கிறார்கள் ஆனால் மக்கள் கமண்டலத்தை கூட தருவார்களா எனத் தெரியவில்லை.. ஆனால் இப்போதைக்கு நல்ல எண்டெர்டெயின் வழங்கும் அணி பா.ஜ.க ராயல் எண்டெர்டெயினர் அணி.

No comments:

Post a Comment