Sunday 14 May 2017

சென்னை பெருமழை அனுபவங்கள்..

நவம்பர் மாதம் பெய்து நாசமாக்கிய மழையில் கம்பீரமாக நிமிர்ந்து நின்று பாட்ஷா படத்தில் ரஜினியையே அடித்த ஆனந்தராஜை போல பெருமிதம் கொண்டிருந்தது மாம்பலம்.. ஆனால் டிசம்பரில் ரஜினியிடம் அடி வாங்கிய ஆனந்தராஜாக துவைத்து காயப்போடப் பட்டது.. பொதுவாக படித்தவர்கள், அதிக வம்பு தும்புகளுக்கு போகாதவர்கள், ஐவில் ரைட் இன் ஹிண்டு என அதிகபட்ச கோபத்தை நாகரிகமாக சொல்லுபவர்கள் மாம்பலம் வாசிகள். இந்த வரலாறு மழைக்கு முன்பு.. இப்போது வந்து பாருங்கள் அவர்கள் கோபத்தை.. கனல் தெறிக்க அனல் பறக்க முழங்குகிறார்கள், தெருவில் இறங்கி போராடுகிறார்கள், அரசியல்வாதிகளை கேள்விகள் கேட்டு ஓட வைக்கிறார்கள், இந்த பசுக்களைப் புலியாக்கிய பெருமை இம்மழைக்கே.

டிசம்பர்1 ஆம்தேதி பெய்த மழையில் கூட ஒன்றும் ஆகாத மாம்பலம் டிசம்பர் 2 ஆம் தேதி நீரால் சூழப்பட்டது.. காரணம் ஏரிகள் திறந்துவிடப்பட்டதால்.. டிசம்பர் 1 இரவு 10 மணிக்கு துண்டிக்கப்பட்ட இணைப்பு இந்த ஸ்டேட்டஸ் டைப் செய்யப்படும் டிசம்பர் 6 வரை வரவில்லை.. வெனீஸ், காஷ்மீர், கேரளா செல்ல வழியில்லாத மக்களுக்கு எந்தச் செலவுமின்றி அந்த அனுபவத்தை தர நகரின் கட்டமைப்பு வசதிகளை நிர்மாணித்த அரசாங்கத்தின் அத்தனை துறைகளுக்கும் இந்நேரத்தில் நன்றி... வீட்டு வாசலில் இறங்கினாலே இடுப்பளவு நீர்.. முதல் மரியாதை ராதா போல இடுப்பு வரை நனைந்து கொண்டே தான் எங்கும் போக வேண்டும்.. பாதங்கள் கால்கள் எல்லாம் ஊறிப்போய் உஜாலாவுக்கு மாறியிருந்தது.. சென்னையில் சேற்றுப்புண்.. என்பது விழுப்புண் போல எங்கள் வெண்பாதங்கள் அதற்கு கட்டியம் கூறும்.

தெருவெங்கும் வெள்ளநீர் வழிந்தோட பாத் ரூமில் ஒரு பக்கெட் தண்ணீர் கூட இல்லாத அவல நிலை.. கழிவுகளோடு இருக்கும் அந்த நீரில் கழுவினால் தொற்று வியாதிகள் பரவும் என்னும் அவலநிலை இருப்பினும் கழுவிக்கொண்டோம்..வேறு வழி.. மிக்ஸி, மோட்டார், செல்போன் சார்ஜ், லைட், இப்படி அத்யாவசிய தேவைக்கு மின்சாரம் இல்லை என்பதில் வருத்தம் இருந்தாலும் அது இருந்திருந்தால் ஏராளமான உயிர்சேதங்கள் நிகழ்ந்திருக்கும்.. என்பதும் ஓர் உண்மையே. இருப்பினும் டிசம்பர் 3 ஆம் தேதி முதியவர் ஒருவரது உடல் அடித்து வரப்பட்ட போது தான் அவலம் தெரிந்தது.. அவரது உடலை கிட்டத்தட்ட 10 மணிநேரம் கழித்தே அப்புறப் படுத்தினார்கள்.. ஏனெனில் எந்த வண்டியும் தெருவில் வராது.. அவ்வளவு நீர் இதேபோல துரைச்சாமி சப்வேயிலும் இரு உடல்கள்.. அது 18 அடி உயரம் நிரம்பி பெரும் நீச்சல் குளமாக மாறியிருந்தது.. தி.நகர் துண்டிக்கப்பட்டது.

எங்கள் தெருவில் உள்ள எல்லா மளிகை & காய்கறிக் கடைகளும் திறந்தே இருந்தன டிசம்பர் 3 வரை இருக்கிறதெல்லாம் விற்றுப் போனால் கொடுக்குற அவசியம் இருக்காது என்னும் நவீன பொதுவுடைமை கொள்கைப்படி விற்றுவிட்டு ந(க)டையை சாத்தினார்கள்.பால்,இட்லிமாவு, மருந்துகள், பிரட், குடிநீர், இப்படி அத்யாவசிய பொருட்கள் தட்டுப்பாடாக ஆரம்பித்தது... இதில் தலையாய பொருள் எது தெரியுமா..! மெழுகுவர்த்தி தான்.. பத்து ரூபாய் மெழுகுவர்த்தி 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.. பால் அரை லிட்டர்த் 75 ரூபாய் ஆனது.. கடைகளில் ஒரு தோசை 100 ரூபாய், 2 சப்பாத்தி 80 ரூபாய் ஆனது.. அடுத்த தெருவுக்கு போக மினிமம் ஆட்டோக் கட்டணம் 200 ரூபாய்.. இதில் நண்பர் ஒருவர் 1200 ரூபாய் கொடுத்து மாம்பலத்தில் இருந்து கோயம்பேடு போனது தனிக்கதை.

நேரம் பார்த்து விலையை ஏற்றுவது எவ்வளவு பெரிய துரோகம்.. என் வீட்டில் எங்கள் ஓட்டல் கடைக்கு தேவையான ஒரு மாத பொருட்கள் இருந்தது.. வீட்டிலேயே நாங்கள் சமைக்க துவங்கி அது அப்பகுதியில் பெருத்த வரவேற்பு பெற்றது.. இதை தனிப்பதிவாக போட உள்ளேன்.. டிசம்பர் 3 ஆம் தேதி தான் இரவு வெள்ளம் அதிகமானது தெருவில் இருந்த இடுப்பளவு நீர் திடீரென நெஞ்சளவுக்கு உயர்ந்தது.. இரவு 11 மணி இந்த சுபயோக சுப நேரத்தில் திருநிறைச்செல்வன் சிரஞ்சீவி மழைநீர் அவர்கள் தன் எல்லா காலையும் எடுத்து வைத்து எங்கள் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார்.. அவரை வரவேற்று ஒரு காபி கொடுப்பதற்குள் பாத் ரூம் வழியாக கழிவு நீர் பெருந்தகையனாரும் பொங்கிப் பிராவகித்து எங்கள் இல்லத்தை சிறப்பு செய்து மணம் பரப்பினார்கள்.. தூக்கம் போயிற்று மின்சாரம் இல்லை..

வீட்டின் கீழ்ப்புறத்தில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி மேலே வைத்துவிட்டோம்.. காலை நனைத்த நீர் காலடி தாண்டி அரையடி உயர கவலையோடு கட்டிலில் அமர்ந்து ஜன்னல் வழியாக தெருவில் தேங்கிய கடலை பார்த்தோம்..மெல்லிய சந்திர ஒளியில் அது மெல்ல அலையடித்துக் கொண்டிருந்தது.. மிகுந்த அச்சமாக இருந்தது.. அடச்சே சாக்கடைத் தண்ணிக்கு சாண்டில்யன் வர்ணனை எதுக்கு.. இப்படி விடிய விடிய விழித்து எங்களுக்கு சாவு பயத்தை காட்டிட்டியே வருணா.. என புலம்ப வைத்தது.. ஒரு வழியாக காலையில் நீர் வடிந்தது.. ஆனால் இரவு அதே போல் ஏறியது இம்முறை நீ கீழேயே படுத்துக்கப்பா நாங்க கட்டிலில் படுத்துக்குறோமுன்னு மழைநீர்கிட்ட சொல்லிட்டு படுத்துட்டோம்.. அப்புறம் பழகிடுச்சுல்ல.. இது வரை இது தான் நிலை.. காய்கறிகள், பால் எல்லாம் இறக்கை முளைத்து பறந்து தற்போது இறக்கைகள் ஒடிக்கப்பட்டுவிட்டன.

இந்த மழை உணர்த்தியிருக்கும் உண்மைகள்..

உலக எதாவது ஒரு வரலாற்றில் சென்னையில் அக்கம் பக்கம் இருப்போர் அறிமுகமாகி பேசிக்கொண்டது..

இருப்பவர்கள் தாமாக முன்வந்து உதவியது..

நேரடியாக களத்தில் இறங்கிய ஐ.டி. இளைஞர்கள்.. இவங்களுக்கு பெரிய சல்யூட்..

மாம்பலம் வாசிகள் வீரர்களானது.. மக்களிடம் சகிப்புத்தன்மை அதிகரித்தது..

இனி எந்தக்கட்சியும் ஓட்டு கேட்டு வர தைரியம் வருமா என்னும் நிலை..

அரசாங்கம் செய்யாத பெரும் சாதனை அடைமழை செய்தது.. ஆம் பல இடங்களில் டாஸ்மாக் மூடப்பட்டது..

நம்முள் புதைந்திருந்த மனிதநேயமும், ஒற்றுமையும், உதவும் குணமும், அறச்சீற்றமும் இம்மழைச்சீற்றத்தால் வெளிப்பட்டு இருக்கிறது என்பதே உண்மை..

இது அன்னாசிப்பழ அனுபவமே பின்னால் தாம்பரம், வேளச்சேரி, கோட்டூர்புரம் கடலூர் போன்ற பலாப்பழங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.. மொத்தத்தில் இம்மழை வாழ்க்கையை சொல்லித்தந்து சென்றிருக்கிறது.

No comments:

Post a Comment