Sunday 14 May 2017

இவர்கள் சந்தித்தால்

நாஞ்சில் சம்பத் vs H.ராஜா இவர்கள் சந்தித்தால்...

(நாஞ்சில் இலை போட்டு பிரியாணி தின்று கொண்டு இருக்க உதவியாளர் வருகிறார்) அண்ணே உங்களை பாக்க H. ராஜா வந்திருக்கார்..

சம்பத் : (பதறியபடி) யோவ் முதல்ல பிரியாணியை தூக்கு.. (உதவியாளர் இலையை எடுக்க வர) யோவ் முதல்ல அந்த பிரியாணி சட்டியைத் தூக்கி உள்ள வை இலையை நான் பார்த்துக்கிறேன்.. ( உதவியாளர் பிரியாணி சட்டியை அறைக்குள் எடுத்துச் செல்ல அதை பார்த்தபடியே ராஜா உள்ளே வருகிறார்)

ராஜா : என்ன சம்பத் அண்ணே பிரியாணி சட்டியை எதுக்கு ஒளிச்சு வைக்கிறிங்க.  கோவை சம்பவத்தை வச்சி எங்களை தப்பா எடை போட்டுட்டிங்க போல.?

சம்பத் : அட இல்லிங்க ராஜா உங்களுக்கு தான் கறி சோறே பிடிக்காதில்ல அதான் மறைவா எடுத்து வைக்க சொன்னேன்..

ராஜா: ஓ அப்ப சரி என்னண்ணே இது இலை போட்டு சாப்பிடுறிங்க இன்னிக்கு சூழல்ல நீங்க மண் தரையில போட்டு தானே சாப்பிடணும்.. இன்னோவாவே போதும்ன்னு நினைச்சிட்டிங்களா பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கிங்களே.?

சம்பத் : அட ஆமால்ல.. சரி சரி விடுங்க எங்கம்மாவுக்கு தெரியும் யாருக்கு எப்ப எதை செய்யணும்ன்னு..

ராஜா: அம்மான்னா உங்களை பெத்த அம்மாங்களா..

சம்பத் : என்ன நீங்க புரியாத மாதிரி பேசறிங்க எங்க இயக்கத்துல அம்மான்னு சொன்னாலே அவங்களைத் தவிர வேற யாரு.. உங்க மோடி மாதிரி அம்மா அயன் லேடி..

ராஜா: காவிரி பிரச்சனையில் உங்க பக்கம் பெரிய போராட்டம் எதுவும் இல்லையே அது ஏன்..?

சம்பத் : காவிரி பிரச்சனையை விடுங்க இப்ப நாட்டுல காவிப் பிரச்சனை தான் அதிகம் உச்சநீதிமன்றமே எங்க பக்கம் இப்போ போய் நாங்க எதுக்கு போராடணும்.. நாங்க நீதியை மதிக்கிறவங்க..

ராஜா: அய்யோ கொஞ்சம் இருங்க சிரிச்சிக்கிறேன் (விழுந்து விழுந்து சிரிக்கிறார்) கண்ணில் நீர் வர எப்படி ஸார் உங்களுக்கெல்லாம் இயல்பாவே இவ்வளவு நகைச்சுவை உணர்ச்சி.?

சம்பத் : ஏன் ராஜா எங்க உணர்வுகள் உங்களுக்கு நகைச்சுவையா தெரியுதா எங்கள் தொண்டர்கள் எப்படி உணர்வுப் பூர்வமானவங்க தெரியுமா.?

ராஜா : ஆமாமா காய்ச்சலுக்கெல்லாம் கண்டன போஸ்டர் அடிக்குற அளவுக்கு உணர்வுப்பூர்வமானவங்க தான்..

சம்பத் : நக்கலடிக்காதிங்க ராஜா நீங்க கூடத்தான் மோடியை வீடு வீடா கொண்டு போய் சேர்ப்பேன்னு சொன்னிங்க அப்ப கூட நாங்க இவர் H.ராஜாவா இல்ல DTH ராஜாவான்னு நினைச்சு சிரிச்சுகிட்டோம் முதல்ல அவரை வீடு வீடா வேணாம் நாடு நாடா சுத்தறதை நிறுத்த சொல்லுங்க.. எங்களை கிண்டல் பண்ணிகிட்டு..

ராஜா: எங்க மோடிஜி வெளிநாடு போறது இந்தியாவை முன்னேற்ற உங்க அம்மா மாதிரி கொடநாடு போய் ஓய்வெடுக்க இல்ல.. அகண்ட பாரதமே எங்கள் லட்சியம்..

சம்பத் : அகண்ட பாரதமா அதானி பாரதமா..? மோடி காமிராவை பார்த்த நேரத்துல பத்து பைல் பார்த்திருந்தா நாட்டு பிரச்சனைகளாவது தீரும்..

ராஜா : எங்க மோடிஜி ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கிறார் அது தெரியுமா..?

சம்பத் : 20 மணிநேரம் பறக்கிறார்ன்னு வேணா சொல்லுங்க நம்பறோம்..

ராஜா: கடந்த 15 நாளில் சீனா போய் அங்கிருந்து ஆப்பிரிக்கா போய் திரும்ப செஷல்ஸ் போயி இன்னிக்கு இந்தியா வந்துட்டு நாளைக்கே ஆஸ்திரேலியா போறார் எங்க மோடி ஏன் தெரியுமா..?

சம்பத்: ம்ம்ம் வந்தது மாத்து துணி எடுக்கன்னு மீம்ஸ் போட்டு கலாய்ச்சாங்களே படிக்கலையா.? 

ராஜா: கலாய்க்கிறவனுக்கு என்ன தெரியும் இத்தனை பயணங்களில் அவர் இந்தியாவுக்கு ஈட்டிய முதலீடு 2 இலட்சம் கோடி..

சம்பத் : அட போங்க காமெடி பண்ணிகிட்டு எந்த நாட்டுக்கும் போகாம உட்கார்ந்த இடத்துல இருந்துகிட்டு நத்தம் விஸ்வநாதன் ஒருத்தர் கிட்டயே 25 ஆயிரம் கோடி அதிரடி ஆக்ஷனில் எடுத்தது எங்கம்மா.. 

ராஜா: அப்போ மோடியை விட உங்கம்மா தான் பவர்ன்னு சொல்றிங்க..!

சம்பத் : நிச்சயமா இல்லாட்டி பவருக்கு வந்திருக்க முடியுமா மோடி அலையிலேயே 37 எம்பிகள் ஜெயிச்சது எங்கம்மா தானே..

ராஜா: 37 எம்பிகளா அவங்க இப்போ என்ன பண்றாங்க..?

சம்பத் : அவங்கல்லாம் அப்பல்லோ ஆஸ்பிடல் வெளிய நிக்குறாங்க..

ராஜா: அது தான் உலகத்துகே தெரியுமே.. பார்லிமெண்ட்டில் என்ன பண்றாங்க?

சம்பத் : நல்லா பாட்டு பாடுறாங்க, ஜோக் சொல்றாங்க அடுத்து மிமிக்ரி கூட பண்ணுவாங்க..

ராஜா: அப்ப மக்களுக்கு எதுவுமே பண்ண மாட்டாங்க..

சம்பத் : 37 எம்பி இருக்குற எங்களை இந்தக் கேள்வி கேக்குறிங்களே 264 எம்பி வச்சிருக்கிற நீங்க என்ன பண்ணிங்க..

ராஜா : சரி சரி விடுங்க சம்பத் இதே கேள்வியை மக்கள் நம்பகிட்ட கேட்க நினைச்சா நம்ம பாடு அவ்வளவு தான் நான் கிளம்பறேன்..

சம்பத் : சந்தோஷம் வந்தது வந்துட்டிங்க அவங்க குணமடைய வாழ்த்திட்டு அம்மா நாமம் வாழ்கன்னு ஒரு கோஷம் போட்டுட்டு  போங்க..

ராஜா: அவங்க குணமடைய வாழ்த்துறேன்.. ஆனா நாங்க ஒரு அம்மா கோஷம் வச்சிருக்கோம் அதைத்தான் சொல்லுவோம்..

சம்பத் : அதென்னங்க கோஷம்.?

ராஜா : இப்ப கத்துறேன் பாருங்க... பாரத் மாதா கீ ஜே.. பாரத் மாதா கீ ஜே.. 

(இதைக் கேட்டதும் சம்பத் சமையலறையைப் பார்க்க உள்ளிருந்த உதவியாளர் சமையல் கட்டை பூட்டுகிறார்) நிறைந்தது.




No comments:

Post a Comment