Sunday 14 May 2017

அமெரிக்காவில் ஜெயலலிதா

 இது கடந்த செப்டம்பர் 2016 அரசியல் சூழலில் எழுதிய பதிவு என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.. வாங்க அம்மா கூட அமெரிக்கா போலாமா.!

அம்மா உங்கள் பொற்பாதங்கள் அமெரிக்காவில் பட்டதால் இனி இந்நாடு "அம்மா"ரிக்காஎன்றழைக்கப்படும்.. என்று ஜெயலலிதாவுக்கு வைத்த ப்ளக்ஸ் போர்டில் இருந்த வாசகத்தை உதவியாளர் மொழி பெயர்த்து சொல்ல ஹிலாரியஸ் காமெடி என கண்ணில் நீர் வர..

விழுந்து விழுந்து சிரிக்கிறார் ஹிலாரி.! எதிரே டிவியில் அமெரிக்க செய்திச்சானல் ஒன்றில் தான் இக்காட்சி.. வாஷிங்டன் முழுவதும் ஜெயலலிதா வருகையை ஒட்டி பிளக்ஸ் பேனர்கள், கொடிகள், கட் அவுட் தோரணங்கள் என தூள் பறந்து கொண்டிருந்தது தெரிந்தது.

ஹிலாரி : என்ன மிஸ்டர் பி.ஏ.. போற போக்கைப் பார்த்தா அமெரிக்காவில் என்னை எதிர்த்து போட்டியிடுவது டிரம்ப் இல்ல இந்த லேடின்னு சொல்லிடுவாங்க போலயே.. என்னை மீட் பண்றதுக்கே இவ்வளவு தடபுடலா!

பி.ஏ: இதையே இப்படி சொல்றிங்களே மேடம் அதைக் கொஞ்சம் பாருங்க (டிவியை காட்டுகிறார்)

வாஷிங்டன் வீதியில் தலையை மொட்டை அடித்துக் கொண்டு பலர் ஊர்வலமாக வர அவர்களுடன் தீச்சட்டி வேப்பிலையுடன் பெண்களும் சேர்ந்து வர ஓயிட் ஹவுஸ் எதிரில் சாலையில் அமர்ந்தவர்களுக்கு நடு ரோட்டில் பர்கர் பரிமாற அதை அனைவரும் சாப்பிடுகிறார்கள்..!!

ஹிலாரி : மைகாட்.! வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்.! ப்ளேட் இல்லாம ஃபோர்க் ஸ்பூன் இல்லாம நடுரோட்டில் வச்சு பர்கர் சாப்பிடுறாங்க இது எவ்வளோ டேஞ்சர்..? இதெல்லாம் ஹைஜீனிக் இல்லைன்னு இவங்களுக்கு தெரியாதா?!?!

பி.ஏ: நல்லா தெரியும் மேடம்.. அவங்க ஊரில் மண்சோறு மாதிரி இது மண் பர்கராம் அம்மா அமெரிக்கா வந்ததும் இந்த ஸ்டைலுக்கு மாறிட்டாங்க இவங்க ஹை ஜீனியஸ்.. இப்படி எல்லாம் சீன் போட்டா தான் கட்சியில் அவங்க கவனிக்கப்பட்டு உயர்வாங்க.. 

(கார் சத்தம் கேட்கிறது) மேடம் அவங்க வந்துட்டாங்க நாம மீட்டிங் ஹாலுக்கு போலாமா.. (இருவரும் மீட்டிங் ஹாலுக்கு போக ஜெ..உள்ளே நுழைகிறார் பரஸ்பரம் இருவரும் ஒருவருக்கொருவர்  பூச்செண்டு தந்துவிட்டு சோபாவில் அமர்கிறார்கள்)

ஜெ: குட்மார்னிங் ஹிலாரி மேடம் என்ன அமெரிக்கா இது இவ்வளவு டிராஃபிக்கா.? நான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து இங்கே வர்ற வரை ஒரு அரைமணி நேரம் டிராஃபிக் நிறுத்தி இருக்கலாமே.. ஒரு சி.எம்முக்கு இதான் மரியாதையா.?

ஹிலாரி : மைகாட் மேடம் இது அமெரிக்கா.. இங்க அமெரிக்க அதிபரே வந்தாலும் டிராஃபிக்கை நிறுத்தினா மக்கள் சட்டையை புடிச்சு கேள்விகள் கேட்பாங்க.!

ஜெ: அது.. அந்தத் தப்பு பண்ணிட்டிங்க எதிர்த்து கேள்வி கேட்குற மாதிரி மக்களை கெடுத்து வச்சிருக்கிங்க... வாங்க எங்க ஊருக்கு வந்து பாருங்க நான் சொன்னா அதுக்கு மறு பேச்சு இருக்காது.. அட மீடியாக்களே வாயை மூடிகிட்டு பேசாதுன்னா பார்த்துக்கோங்க.!

ஹிலாரி: ஓ இன்ட்ரஸ்ட்டிங்.. ஆனா இங்க பாருங்க நாங்க மீடியாவை நம்பித் தான் அரசியல் பண்ணணும் தேர்தலுக்கு 6 மாசம் முன்னாடியே டிவியில் நிறைய டிபெட்.. கடைசியில் மோதுறவங்களே நேருக்கு நேர் பேசணும் வாதங்களை வைக்கணும்.. தனிமனித தாக்குதல் கூடாது ரொம்பக் கஷ்டம்..

ஜெ: நேருக்கு நேரா.. அதெல்லாம் எங்க ஊரில் சான்சே இல்லை.. எங்க நாட்டில் எதிர்க்கட்சித் தலைவருங்க சட்டசபைக்கே வர்றதில்ல டிவி நிகழ்ச்சிக்கா வருவாங்க.. அதெல்லாம் விடுங்க நீங்க இந்த எலக்ஷனில் ஜெயிக்க என்ன திட்டம் வச்சிருக்கிங்க.? 

ஹிலாரி: கொஞ்சம் கஷ்டமாத் தாங்க இருக்குது டிரம்ப்புக்கும் எனக்கும் ஆதரவு சரி சமமா இருக்குன்னு கருத்து கணிப்புகள் சொல்லுது.. அதை மீறி எப்படி ஜெயிக்க..?

ஜெ: ஹா..ஹா.. கருத்துக்கணிப்பை எல்லாமா நினைச்சு கலங்குறிங்க அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல..

ஹிலாரி: அப்படியா கருத்துக் கணிப்பை எப்படி மாத்த முடியுமுன்னு சொல்றிங்க..? 

ஜெ: சிம்பிள் காசு திணிப்பு இருந்தா கருத்துக் கணிப்பு மாறிடும் தட்ஸால்.!

ஹிலாரி: ஓ.. மீடியாவை விலை கொடுத்து வாங்கச் சொல்றிங்களா.!

ஜெ: அய்யே மீடியாவை வாங்க சொல்லலை மக்களை வாங்கச் சொன்னேன்.

ஹிலாரி : என்னாது மக்களை வாங்குறதா அது எப்படிங்க.?

ஜெ : ஒரு ஓட்டுக்கு 100 டாலர் மக்களுக்கு கொடுத்து பாருங்களேன் அடுத்த 10 வருஷத்துக்கு நீங்க தான் அதிபர்.

ஹிலாரி: ரியலி ஷாக்கிங்.. மக்கள் காசு வாங்கிட்டு கூட ஓட்டு போடுவாங்களா எங்களுக்கு அதிர்ச்சியா இருக்கு..!

ஜெ: முதன் முதலில் திருமங்கலம் தேர்தலில் எங்களுக்கும் கூட அதிர்ச்சியா தான் இருந்தது.. அப்புறம் பார்த்தோம் எதிர்க் கட்சி கொடுத்த இந்த ஃபார்மூலாவை நாங்க நல்லா மெருகேத்துனோம் மக்கள் எங்களை ஆட்சி ஏத்துனாங்க.. இதுக்கெல்லாம் யோசிக்கலாமா என்ன.?

ஹிலாரி: ஓட்டுக்கு டாலரா.? எனக்கு படபடப்பா இருக்குங்க சரி இது போகட்டும் வேற மக்கள் நல திட்டங்கள் ஏதாவது சொல்லுங்க..

ஜெ : நான் எங்க ஊரு திட்டங்களை சொல்றேன் அதுல மக்கள் நலம் இருக்கான்னு பதில் கேள்வி கேட்கக்கூடாது..

ஹிலாரி :சரி நீங்க சொல்லுங்க அமெரிக்காவுக்கு ஏற்றபடி அதை மாத்திக்கிறோம்.

ஜெ: அமெரிக்கா முழுவதும் அம்மா பர்கர் உணவகம் திறங்க..

ஹிலாரி : அம்மான்னா..? 

ஜெ: ஓ நீங்க என்னை குறிப்பிட்டதா நினைச்சிட்டிங்களா வேணாம் இப்படி வச்சுக்கோங்க மதர் பர்கர் கார்னர் இங்கே ஒரு டாலருக்கு 3 பர்கர் கிடைக்குமுன்னு அறிவிங்க..

ஹிலாரி: அதாருங்க மதர்.?

ஜெ: நீங்க தான் மேடம் அமெரிக்காவின் மதர் நீங்க தானே கண்டிப்பா உங்க போட்டோ போட மறந்துடாதிங்க..

ஹிலாரி : ஆஹா இந்த உணவக விஷயம் சூப்பர் அடுத்து..

ஜெ: மதர் மெடிக்கல், மதர் சூப்பர் மார்க்கெட், மதர் சிமெண்ட், மதர் ஷாப்பிங் மால், மதர் மினரல் வாட்டர், மதர் ஆஸ்பிடல்ஸ், மதர் இன்சூரன்ஸ், இப்படி பலப்பல திட்டங்கள் இருக்கு அதெல்லாம் வரிசையா செயல்படுத்தினா அடுத்த அதிபர் நீங்க தான்.

ஹிலாரி : ஓ அமெரிக்காவை மதர் லேண்டா மாத்த சொல்றிங்க.. அப்புறம்

ஜெ: ஏழை எளிய அமெரிக்க இளம் பெண்களின் திருமணத்துக்கு 1 பவுன் இலவசத் தாலி வழங்...

ஹிலாரி: ஒரு பவுன் தாலியா.? அப்படின்னா

ஜெ : ஓ பாருங்க எங்க ஊரு ஞாபகத்தில் சொல்லிட்டேன் 1 பவுன் வெட்டிங் ரிங் இலவசமாக கொடுக்கப்படும் அதோடு வெட்டிங் சூட் கவுன் முதலிய சீர் பொருட்களும் இலவசமாகத் தரப்படும்ன்னு சொல்லுங்க அடுத்து நிச்சயமா  நீங்க தான் ஜெயிப்பிங்க..!

(ஹிலாரி கண்கலங்குகிறார்) பாத்திங்களா செண்டிமெண்ட்டை நீங்களே அழுதுட்டிங்க இது நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும்.. கரெக்ட்டா

ஹிலாரி: அதில்லிங்க சும்மாவே அமெரிக்காவில் ஒருத்தர் ஏகப்பட்ட கல்யாணம் பண்ணுவாங்க இதுல 1 பவுன் வெட்டிங் ரிங் இலவசமா கொடுத்தா அதுக்காவே நிறைய கல்யாணம் பண்ணுவாங்களே அமெரிக்கப் பொருளாதாரம் என்னாகும்ன்னு நினைச்சேன்.. அழுகை வந்திருச்சு..

ஜெ: ஓ இங்க இந்த கலாச்சார சிக்கல் இருக்கா.. சரி சரி.. அது உங்க பாடு.. அட பாடுன்னதும் ஞாபகம் வருது நீங்க ஏன் விலையில்லா மாடுகளை மக்களுக்கு தரக்கூடாது..!

ஹிலாரி: ஆல்ரெடி அமெரிக்கா பால்வளம் மிகுந்த நாடுங்க.. 

ஜெ: அப்போ விலையில்லா ஸ்கூட்டி தான் பெஸ்ட் அது ஓ.கேவா..

ஹிலாரி: எல்லாத்துக்கும் ஒரு விலை கொடுத்துட்டா அப்புறம் எதையுமே விலை இல்லாம தந்துடலாம் சரிதானே..

ஜெ: வாவ் எக்ஸாட்லி இது தான் நான் சொல்ல வந்த தத்துவம் இதை எப்படி சொல்றதுன்னு இதுவரைக்கும் நானே சிந்திச்சுகிட்டு இருந்தேன் அமெரிக்கா வந்ததும் அது உங்க மூலம் கிடைச்சிடுச்சு தேங்ஸ் நீங்க தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகள் ஆல் தி பெஸ்ட்.

ஹிலாரி: யா.. எனக்கும் ஹேப்பி நிச்சயம் இந்தியா வந்தால் மீண்டும் சந்திக்கிறேன் தேங்ஸ் ஃபார் கம்மிங் டூ மை ஹோம்.. பி.ஏ மேடத்துக்கு அந்த நினைவுப் பரிசை எடு.. (பி.ஏவிடம் பதிலில்லை ஹிலாரி கூப்பிடுகிறார்) பி.ஏ..பி.ஏ.. எங்க போனாரு இவரு..?

ஜெ: உங்க பி.ஏ தானே அவர் வரமாட்டாரு ஏன்னா அவரு அப்பவே மயங்கி அதோ அங்க விழுந்திருக்கார் பாருங்க..

ஹிலாரி : இவர் எப்போங்க மயங்குனாரு?

ஜெ: அதுவா ஒரு ஓட்டுக்கு 100 டாலர்ன்னு சொன்னேன் இல்லியா அப்ப.. ஹா..ஹா.. (சிரித்தபடியே விடை பெறுகிறார் ஜெயலலிதா)

No comments:

Post a Comment