Sunday 14 May 2017

பேரிடர்_கேட்டரிங்_சர்வீஸ் F(l)ood Sevice...

ஒரு ப்ளாஷ்பேக்...

ஜப்பான்..! கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி பேரழிவின் போது நிவாரண உதவிகளில் ஒரு காட்சி.. பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்குகிறார்கள் இராணுவ ஒழுங்குடன் வரிசையில் மக்கள்.. வரிசை மெல்ல புழு போல நகர்கிறது நிற்கும் மக்கள் அனைவருமே 3 நாட்கள் பட்டினி.. ஒரு மூதாட்டி ஒருவர் வரிசையில் வந்து நிற்கிறார்.. அவர் உணவு வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால் அவரை முன்னால் அழைத்து செல்கிறார் கடைசியில் நின்ற ஒருவர்.. வரிசையில் நின்ற யாரும் தடுக்கவில்லை கூச்சலிடவில்லை அவரை அழைத்து சென்றவர் அம்மூதாட்டிக்கு உணவு வாங்கித் தந்து விட்டு மீண்டும் பழையபடி தன் வரிசைக்கு திரும்புகிறார்.. இது தான் ஜப்பான் மக்களின் உயர்ந்த குணம்.. இந்த ஜப்பான் ப்ளாஷ்பேக் இந்தப் பதிவில் சரியான நேரத்தில் வரும்...இனி

டிசம்பர் 2 2015 காலையில் எழுந்த போதே வாசலில் ஆரவாரம்... கூச்சல்.. நீர் அலையடிக்கும் சத்தம்.. வெளியில் வந்து பார்த்தால் செம்பழுப்பு நிறத்தில் ஒரு செங்கடல் தெருவுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.. அதில் குழந்தைகள் கும்மாளமிட்டு குதித்துக் கொண்டும் சிலர் செல்ஃபி எடுத்துக் கொண்டும் திரிந்தனர். எல்லோரும் கூட்டம் கூட்டமாக போனது துரைச்சாமி சப்வே நிரம்பியதை காணத்தான்.. கிட்டத்தட்ட 15 அடி உயர சப்வே முழுதும் மூழ்கி 3 அடி அதிகமாக நீர் இருக்கிறது என்றார்கள்.. நானும் மொபைலுடன் கிளம்பினேன்.. முதல் நாள் இரவு மழையில் கீழே விழுந்து மிகச்சரியாக என் வலது கால் முட்டியின் நடுவே சங்கு சக்கரம் போல இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களை பக்கத்து பக்கத்தில் வைத்தது மாதிரி சிராய்ப்பு..!

கரண்ட் இனி 5 நாட்கள் இருக்காது என்பதெல்லாம் தெரியாத நான் 86 % பேட்டரி இருந்த செல்போனை எடுத்துக் கொண்டு சென்றது பெரிய முட்டாள்தனம் என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை.. ஓரளவு காலை உயர்த்தி நடந்தாலும் காயம் அவ்வப்போது நனைந்து கொண்டே இருந்தது.. ஒருவழியாக பாலத்தை வீடியோ எடுத்துவிட்டு அருகில் தென்பட்ட ஒரு டீக் கடையில் ஒரு டீ என்றேன் 20 ரூபா சார் என்றார்.. ஏன் என்றேன்.. பால் டிமாண்ட் என்றார்..சரி கொடுங்க என்றேன் துரைச்சாமி சப்வேயில் தேங்கிக் கிடந்த அம்மழைநீரின் டிட்டோ கலரில் சூடாக ஒன்றை டம்ளரில் நீட்டினார் (டீயாம்) இரண்டு மிடறு வாயிலும் மீதியை சாலையிலும் ஊற்றிவிட்டு திரும்பினால்.. நம்ம பெ.கருணாகரன் சார் வந்தார்.. இருவரும் பேசிக்கொண்டே அப்பகுதி முழுவதும் வலம் வந்தபோது ஒன்று புலப்பட்டது.

மாம்பலத்தில் என் வீடு இருக்கும் தெருவில் வலது பக்கம் 30 வீடு இடதுபக்கம் 30 வீடுகள் தூரத்திலேயே 12 ஓட்டல் கடைகள்.. மிகப் பிரபலமான வெங்கடேஸ்வரா போளி ஸ்டால், உடுப்பி ஓட்டல், மற்றும் ஆந்திரா மெஸ்சும் இதில் அடங்கும்.. அத்தனைக் கடைகளும் பூட்டியிருந்தன.. மக்கள் சாப்பிட வழியின்றி தவித்தனர் முக்கியமாக பேச்சிலர்கள்.. எங்கள் பகுதியில் டிசம்பர் 3 வரை மளிகைப் பொருட்களும் கிடைத்தன.. குடும்பங்களுக்கு பிரச்சனையில்லை..இருப்பினும் காஸ் தீர்ந்த வீடுகளில் சாப்பாடு இல்லை... ஒரு டீ கூட இல்லை.. இடையில் அரசியல் கட்சியினர் சார்பாக இலவச பொங்கல் வழங்கப்பட்டதை பார்த்தேன்.. அங்கிருக்கும் எல்லா மக்களுக்கும் பொங்கல் இருந்தது.. ஆனால் நம் மக்கள் முண்டி அடித்து பிடித்து கூச்சல் குழப்பத்துடன் ஆளாளுக்கு கை நீட்டி வாங்கி சிலர் பிறர் வாங்கிய கைகளில் இருந்ததை கீழே தட்டிவிட்டு யாருக்கும் பயனின்றி போய் ஒரு வழியாக பொங்கல் கொடுத்தவர்கள் போதும்டா சாமின்னு நிறுத்தி விட்டு கிளம்பினார்கள்..(ஜப்பான் ப்ளாஷ்பேக்)

கூட்டம் முடிந்ததும் ஒருவரே 16 பாக்கெட் பொங்கலுடன் தன் கைவசப் படுத்தும் திறமையை வெளிப்படுத்திய பெருமிதத்துடன் நடந்து போனார்.. எங்கும் உணவு இல்லை என்பதே பிரதானமாக தெரிந்தது கருணாகரன் சாரிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினேன்.. மனைவியிடம் ஆலோசித்தேன்.. வீட்டில் ஓட்டல் கடைக்கு தேவையான பொருட்கள் ஒரு மாதத்திற்கு இருந்தது.. உடனடியாக செயலில் இறங்கினோம்.. இலவசமாக வேண்டாம்..அதே நேரத்தில் நியாயமாக தரமாக நாம் செய்யும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் விலை நிர்ணயம் செய்வோம் என்றார் மனைவி.. என் மனதில் ஓடிய ஒரு வாசகம் பத்து, இருபது, முப்பது... அதாவது பத்து ரூபாய் முதல் முப்பது ரூபாய்க்கு மேல் விலை இல்லை..டீ பத்து ரூபாய், தோசை & சப்பாத்தி 20 ரூ, பொங்கல், கிச்சடி, புளியோதரை போன்ற உணவுகள் 30 ரூ இது என் யோசனை.. இதை நான் சொல்ல மனைவி ஒப்புக் கொண்டார். 

என் அண்ணியும் என்மகளும் உதவிக்கு வர கடைக்கு கிளம்பினேன். கடைக்கு போனதும் தான் விலை கேட்டு திடுக்கிட்டேன் தக்காளி 80 ரூ வெங்காயம் 80 ரூ கத்தரிக்காய் 100ரூ கறிவேப்பிலை கொத்தமல்லி கொசுறு அளவில் கூட இல்லை.. சுரைக்காய் உருளைக்கிழங்கு, காரட் போன்றவை 45 ரூபாய்க்கு கிடைத்தது.. ஒரு வழியாக வாங்கிக் கொண்டு திரும்பினேன்.. கவனிக்க கடைக்கு என்றால் போகவர 1 கி.மீ. இடுப்பளவு நீரில் நடந்து போக வேண்டும்.. பிறகு மளிகைக் கடை அதுவும் அப்படியே கோதுமை, ரவை, எண்ணை போன்றவை நல்லவேளையாக விலை உயரவில்லை.. பால் லிட்டர் 100 ரூபாய் என்றார்கள்.. பிரட் பாக்கெட் கிடைக்கவே இல்லை.. இத்தனை சாமான்களையும் 4 முறை இடுப்பளவு நீரில் நடந்து போய் வாங்கி வந்தேன்.. கால் முட்டியில் சிராய்ப்பு கனலாக எரிந்தது.. இருப்பினும் பெண்கள் கடைக்கு போய்வரும் சூழல் இல்லை.

ஒரு வழியாக வீடு திரும்பினால் காஸ் அரை சிலிண்டரே இருந்தது.. கடை போட்டால் இரு நாள் தான் தாக்குப் பிடிக்கும்.. வீட்டு உபயோகம் எனில் 10 நாட்கள் தாங்கும் யாரிடமாவது வாங்கலாம் என்றால் யாரும் தரவில்லை.. போன் இப்போது 56% பேட்டரியில் இருந்தது..ஒரு வழியாக வீட்டிற்கு எதிரில் அடைத்து வைத்த ஓட்டல் கடைக்காரர் நான் தான் கடை போட முடியலை நீங்க சர்வீசா செய்யறிங்க நான் தர்றேன்.. ஆனா சிலிண்டரை மழை நீர் கொஞ்சம் வடிந்தது நாளை எடுத்துத் தருகிறேன் என்றார்.. தெம்பாக சமைக்க ஆரம்பித்தோம்.. வீட்டு போர்டிகோ சமையலறை ஆனது.. சமையல் முடிய சாலையில் நீர் உயர சரியாக இருந்தது சாலையில் கார்கள் போனால் போர்டிகோ முழுவதும் அலை போல வந்து காலை நனைத்தது.. இப்போ என்ன செய்ய கடை இருப்பது தெரிய வேண்டும்..!

வீட்டுக்கு எதிரே இருந்த காம்ப்ளெக்ஸ் நல்ல உயரம் பார்வையாக இருந்தது.. பிரச்சனை ஒவ்வொரு முறையும் இடுப்பளவு நீரில் சமைத்ததை எடுத்துச் செல்ல வேண்டும்.. காலில் ஊறிய புண்ணுடன்.. பொங்கல், கிச்சடிகளை தலையில் சுமந்து இடுப்பளவு நீரில் சென்று கடை போட்டோம் ஒரிருவர் வந்து கேட்டு சுவை தரம் பற்றி சந்தேகித்து ஒரு பொட்டலம் வாங்கிப் போய் சில நிமிடங்களிலேயே வந்து 10 பொட்டலம் தாங்க எனக்கு 8 என வாங்க ஆரம்பித்தார்கள்.. கடை பற்றி பரவலாக தெரிய கூட்டம் முண்டியடித்து..ஆனால் தீரத்தீர நீரில் நடந்து போய் எடுத்து வரவேண்டும்.. இதில் கல்லூரி படிக்கும் என் மகளை பாராட்ட வேண்டும் என் கால் காயத்தை கண்டு பலமுறை அவள் தான் நீரில் நடந்து சர்வீஸ் செய்தாள்..

தினசரி 200 நபர்களுக்கு மூன்று வேளையும் சமைத்தோம்.. ஆளே இல்லாத தெருவில் கையில் மெழுகுவர்த்தியுடன் காத்திருந்து இரவு 10 மணி வரை பார்சல் செய்து தந்தோம்.. பால் லிட்டர் 150 ஆனது தான் பிரச்சனை.. ஆனால் சுக்கு மல்லி காபி போட்டு அதை ஈடு செய்தோம்.. மறு நாள் நாளிதழ் ஒன்றில் மழைக்கு ஏற்ற உணவு கிச்சடி,புளியோதரை,சப்பாத்தி, சுக்கு டீ என செய்தி வந்ததை ஏரியா வாசி ஒருவர் சொல்லிப் பாராட்டினார்.. இந்த 4 நாட்களில் கிட்டத்தட்ட 600 பேருக்கும் மேல் உணவருந்தியிருக்கிறார்கள்.. 18670 ரூபாய் வியாபாரம் 12 ஆயிரம் ரூபாய் செலவு.. மீதித் தொகையை வெள்ள நிவாரணத்தில் சேர்த்துவிட்டோம்.. மன நிறைவாக இருக்கிறது..இத்தனை முறை நடந்தும் கால் புண் சீழ் பிடிக்கவில்லை.. இது போதாதா என்ன..!

No comments:

Post a Comment