Thursday 25 May 2017

அதியமான்கள்

திருச்சி மேலப்புலிவார் (மேலரண்) ரோடு.. திருச்சியின் பரபரப்பான சாலைகளில் ஒன்று.. கொளுத்தும் இந்த வெயிலிலும் தமிழ்ச்சங்கம் அருகே பாட்டா ஷோரூமின் அருகில் மட்டும் இந்த வெயிலிலும் கூட்டம் மொய்த்திருந்தது.

பொதுவாக வங்கி வாசலிலும்ATM வாசலிலும் தற்போது டாஸ்மாக் வாசலிலும் மட்டுமே கூட்டத்தை பார்த்த எனக்கு இந்தக்கூட்டத்தை கண்டு வியப்பு அப்படி என்ன தான் அங்கே என நெருங்கிப் பார்த்தேன் அட அருகே ஒரு ஏடிஎம் ஆனா கூட்டம் அங்கில்லை..!

கூட்டத்தை விலக்கி உள்ளே சென்றால் ப்ளூ நிற பாலிதீன் ஷீட்டை கூரையாக கட்டி அதனடியில் ஒருவர் கரும்பு ஜூஸ் பிழிந்து கொண்டிருக்க அருகில் இன்னொருவர் அதை எடுத்து கிளாசில் ஊற்றி வாடிக்கையாளர்களுக்கு தந்து கொண்டிருந்தார்.

சாதாரண கரும்பு ஜூஸ் கடைக்கு இவ்வளவு ஃபில்டப்பா என யோசிக்கிறிங்களா.?ஆனால் கூட்டம் அம்முதே அதிலும் சாப்பிட்ட பலர் இன்னொரு கிளாஸ் கேட்டு வாங்கிச் சாப்பிட காரணம் இருக்கு.. பிழியும் கரும்போடு அரை நெல்லிக்காய், புதினா, இஞ்சி, எலுமிச்சை, அருகம்புல் என வைத்து பிழிகிறார்கள் அவ்வளவு சுவை & ஆரோக்கியம்.

எப்படிங்க இந்த ஐடியா என்றேன் மிஷினில் கரும்பு பிழிந்து கொண்டிருந்த நல்லுச்சாமி அதீத கூச்சத்துடன் தன் உதவிக்கு நின்றிருந்த கருப்பையனை காட்டி அவர் கிட்ட கேளுங்க என்றார்.. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இதே இடத்தில் கடை வச்சி இருக்கோங்க.. ஆனா..

சமீபமா நம்ம உணவு பழக்க முறைகள் ஃபாஸ்ட் ஃபுட் ஜங் ஃபுட் அந்நிய நாட்டு குளிர் பானங்கள் இப்படி முறை தவறி போயிருக்கு இஞ்சி அரை நெல்லிக்காய் எல்லாம் எவ்வளவு மருத்துவ குணங்கள் உடையது என்பதை எல்லாம் மக்கள் மறந்துட்டாங்க..

இதையெல்லாம் ஏன் கரும்புச் சாறில் கலந்து தரக் கூடாதுன்னு யோசனை வந்தது ஏற்கனவே எலுமிச்சை வைத்து பிழிந்த போது நல்ல வரவேற்பிருந்தது அதனால் முயற்சித்தோம் மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு எல்லாரும் பாராட்டுறாங்க.

அது மட்டுமின்றி கடையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை காகித கப்புகள் தான் என்றார் கருப்பையன்.. ஆமாம் அவ்வளவு சுத்தமாக இருந்தது அந்த இடம் முறையான குப்பைத் தொட்டிகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்ட எலுமிச்சை,இஞ்சி, நெல்லிக்காய் எல்லாம்..

அழகாக பரத்தி வைத்திருந்தார்கள்.. பிழிந்த கரும்பு சக்கைகள் அழகாக பைகளில் அடைக்கப்பட்டு ஓரமாக வைத்து இருந்தார்கள் சாலையோரக் கடை என்றாலும் அவ்வளவு சுத்தம்.. ஒரு சிறிய சாலை ஓரக் கடை தான் என்றாலும் எவ்வளவு பொறுப்புணர்வு! மகிழ்வாக இருந்தது.

பெப்சி கோக் போன்ற பானங்களை அருந்துவதற்கு பதில் இவர்களைப்போல பொறுப்பு மிக்க சிறு வியாபாரிகளுக்கு நாம் ஆதரவளிக்கலாம்.. அந்த அதியமான் கூட அவ்வை ஒருவருக்கு மட்டுமே நெல்லிக்கனி தந்தார்.. 

ஆனால் தன்னிடம் வரும் எல்லா மக்களுக்கும் நெல்லிக்கனி தரும் இவர்களும் அதியமான்கள் தான்.. ஒரு கிளாஸ் ₹20/- மட்டுமே திருச்சி வந்தால் இங்கு ஒருமுறை வந்து சுவைக்க மறக்காதீர்கள் சமரசங்கள் ஏதுமின்றி மக்களுக்கு வயிறார நல்ல ஆரோக்கியமான பானத்தை தரும் இவர்களை மனதார வாழ்த்துவோம்..!

No comments:

Post a Comment