Thursday 25 May 2017

அமெரிக்க இடைத்தேர்தலில் அதிமுக அணியினர்..

முதல்சுற்று...

அமெரிக்க இடைத்தேர்தலில் டிரம்ப் தன் கட்சியை ஜெயிக்க வைக்க தொப்பி ஆட்களின் திறமையை அறிந்து அழைக்க.. ஹிலாரி அணி மின்கம்ப ஆட்களை அழைக்க நம்ம ஆட்கள் அங்கு போய் தேர்தல் வேலை பார்த்து இருந்தால் எப்படி இருக்கும் என ஓர் நகைச்சுவை கற்பனை ஆர்.கே.நகர் போல ஆர்கென்சா தொகுதி இடைத்தேர்தல்!

டிரம்ப் : மிஸ்டர் தொப்பி லீடர் இந்த பிரச்சாரத்துக்கு உங்களுக்கு என்னென்ன வசதிகள் வேணும் சொல்லுங்க செஞ்சிடலாம்..

தொப்பி: சார் ஒரு 100 மெகா சூட்கேஸ் கொடுங்க மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்.

டிரம்ப் : அட வெறும் 100 சூட்கேஸ் இருந்தா போதுமா செலவு கம்மியா ஈசியா இருக்கே.!

தொப்பி : ஆஹா...சார் அது உங்க மண்டை மாதிரி காலியா இருக்கக் கூடாது உள்ள ஃபுல்லா உங்க டாலர் கரன்சி அதுவும் 100 டாலர் கட்டுகளா இருக்கணும் புரியுதா.!

டிரம்ப் : அய்யோ அப்போ 100 மில்லியன் ஆகிடுமே ஒரு தொகுதிக்கு இது டூமச் இல்ல..

தொப்பி : சார் நாங்க நடக்காத எலக்ஷனுக்கே 100 கோடி செலவழிச்சு இருக்கோம் தொப்பிகிட்ட வந்து கப்பித் தனமா பேசிகிட்டு இருக்கிங்க.!

டிரம்ப் : ஓ..அப்படியா சரி இந்த ரூபாயெல்லாம் யாருக்கு.?

தொப்பி : அப்படி கேளுங்க உங்க தொகுதியை வார்டு வார்டா பிரிப்போம் ஒரு வார்டுக்கு 8 பூத்

டிரம்ப் : வாவ் இண்ட் ரஸ்டிங்.. குட் வோட் கேன்வாஸிங் சிஸ்டம்

தொப்பி : சார் இது வோட் கேன்வாசிங் இல்ல நோட் டிஸ்டிரிப்யூட் சிஸ்டம்.!

டிரம்ப் : நோட் டிஸ்டிரிப்யூட்.? புரியலையே

தொப்பி : அந்த 8 பூத்திலில் ஒரு ஓட்டுக்கு 100 டாலர்ன்னு பணத்தை டிஸ்டிரிப்யூட் பண்ணுவோம்..

டிரம்ப் : மைகாட் அது சட்டப்படி குற்றமாச்சே.?

தொப்பி : அதுக்கு தான் டோக்கன் சிஸ்டம் வச்சு இருக்கோம் பகிரங்கமா பணம் கிடையாது டோக்கன் இருந்தா பணம்..

டிரம்ப் : டோக்கன் எப்படி கொடுப்பிங்க.?

தொப்பி : அது எங்க பகுதி செயலர்கள் பார்த்துக்குவாங்க.. அது மட்டுமல்ல நீங்க போற இடத்தில் எல்லாம் பூத்தூவி ஆரத்தி எடுப்பாங்க இல்ல அதுக்கும் பணம் உண்டு..

டிரம்ப் : ஆரத்தி.?

தொப்பி : ஆமாங்க எங்க ஊரில் உண்டு வேணுண்ணா உங்க ஊரில் பொக்கே கொடுக்கச் சொல்லுவோம்.. அப்படியே நாலஞ்சு குழந்தைகளுக்கு பேரு வச்சி அஞ்சாறு கிழவிகளைக் கட்டி பிடிச்சு..

டிரம்ப்: வாவ் பெண்களை கட்டிப்பிடிக்கலாமா..? அப்போ நானே ரிசைன் பண்ணிட்டு போட்டியிடுறேனே..

தொப்பி: அய்யே இத்தனை வயசாகியும் பெண்கள்ன்னு சொன்ன உடனே அலைகிறீர் பாரும்.. ஜெயிக்கிற நினைப்பு இல்லியா.?

டிரம்ப் : அய்யோ அது இருக்கு.. எக்ஸ்பர்ட் நீங்க.. அதுக்கு தானே உங்களை கூப்பிட்டு  இருக்கோம் சொல்லுங்க..

தொப்பி : வியாபாரிகள் சங்கம், மீனவர்கள் சங்கம் இப்படி 10 பேர் இருக்கிற சங்கமா இருந்தாலும் அவங்களை உங்களுக்கு ஆதரவு தரச்சொல்லுங்க முக்கியமா அது மீடியாவில் வரணும்..

டிரம்ப் : 10 பேரு இருக்குற சங்கம் ஆதரவு கொடுத்து என்ன ஆகப்போகுது.?

தொப்பி : சரிதான் அமெரிக்கா ஏன் வளர்ந்திருக்குன்னு இப்போ தான் தெரியுது இவ்வளோ வெள்ளந்தியா இருக்கிங்களே வெள்ளக்காரரே..
அதில 10 பேர் இருக்கானோ 1000பேர் இருக்கானோ.. அது நமக்குத் தான் தெரியும் மக்களுக்கு அது தேவையில்ல மீடியாவில் அந்தச் சங்கம் ஆதரவு இந்தச் சங்கம் ஆதரவுன்னு வரணும்.. சரி தெரிஞ்ச ஹாலிவுட்/ ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ஸ் யாரும் இருக்காங்களா.?

டிரம்ப் : என்ன இப்படி கேட்டுட்டிங்க நானே ஒரு wwe ஸ்டார் தானே ஹாலிவுட்டில் நிறைய ஸ்டார் ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க..

தொப்பி : அப்போ கவலையை விடுங்க திறந்த ஜீப் ஒண்ணு ஏற்பாடு பன்ணிட்டு அதுல நாலு நடிகைகளோடு ஊர்வலம் ஏற்பாடு பண்ணுங்க பணப்பெட்டி ரெடின்னா ஓட்டுப் பெட்டி நம்மதுதான் ஓ.கே..

டிரம்ப் : டபுள் ஓ.கே.. பாஸ் ஒரு சந்தேகம் ஊர்வலம் போற ஜீப் மட்டும் திறந்திருக்கணுமா இல்ல நடிகைகளின் டிரஸ்சும் திறந்து இருக்கணுமா..?ஹி.ஹி.ஹி..

தொப்பி : நம்ம பண்ணப்போறது பிரச்சாரம்.. வேற தொழிலான ---சாரமில்ல.. வழியுற ஜொள்ளை தொடைச்சிட்டு பேச ரெடியாகுங்க..

இதே வேளையில் அங்கே ஹிலாரி கூடாரத்தில் ஆலோசனை...


இரண்டாம் சுற்று...

(ஹிலாரி வீட்டருகே மின்கம்ப அணியினர் பவ்யமாக நிற்க.. ஹிலாரி கார் போர்டிகோவுக்கு வர அத்தனை பேரும் காருக்கு முன் பாய்கின்றனர்)

நின்ற காரில் இருந்து பதறியபடி இறங்குகிறார் ஹிலாரி.. மை காட் இத்தனை பேரு சூசைட் பண்ணிக்கிற மனநிலையில் என் கார் முன்னால பாய்ந்து இருக்காங்களே.. என்ன ஆச்சு இன்னிக்கு.?

ஹிலாரி பி.ஏ: மேடம் அவங்க யாருன்னு தெரியலை நல்லா பாருங்க..

(ஹிலாரி அவர்களை பார்க்க அனைவரும் கார் டயருக்கு அடியில் கிடக்க..) ஓ.. கார் மெக்கானிக்குகளா..! ஒருத்தர் போதுமே எதுக்கு இத்தனை பேரு.?

ஹிலாரி பி.ஏ: அய்யோ மேடம் அவங்க மெக்கானிக் இல்ல நம்ம கட்சிக்காக இடைத்தேர்தலில் உதவி செய்ய தமிழ்நாட்டில் இருந்து வந்த மின் கம்பம் அணியினர்..

ஹிலாரி: ஓ அவங்களா அவங்க எதுக்கு என் கார் முன்னால விழுந்து கிடக்காங்க.!! மிஸ்டர்.. எல்லாரும் கொஞ்சம் எழுந்து நேரா நிற்கிறிங்களா.?

(அவர்கள் எழுந்தபடியே) அம்மா எந்திரிச்சு குனிஞ்சு வேணா நிற்கிறோம் நேரா நின்னு எங்களுக்கு பழக்கமில்லம்மா..

ஹிலாரி : ஏன்ப்பா.?

மின்கம்பம்: எங்க அம்மா எங்களை அப்படியே வளர்த்துட்டாங்கம்மா.. அமெரிக்காவுக்கு வந்ததே இங்க இருக்க அம்மா நீங்க கூப்பிட்டதால தான்.. நாங்க டிரம்ப்போட சூழ்ச்சிக்கு துணை போகமாட்டோம்.

ஹிலாரி: குட் இங்க பாருங்க டிரம்ப் ஆளுங்கட்சி அதனால அவர் அதிகாரத்தை பயன்படுத்துவார் நிறைய செலவும் செய்வார் நாம அவ்வளவு செலவு செய்யமுடியாது.. இந்த இடைத்தேர்தலில் ஜெயிக்க எங்க பட்ஜெட்டுக்குள்ள வர்ற மாதிரி  நல்ல ஐடியா இருக்கா.?

மின்கம்பம்: நிறைய இருக்கும்மா கவலைப்படாதிங்க இப்பதான் எங்க ஊரில் பணநாயகத்தை எதிர்த்து போராடி வந்துருக்கோம் இங்கேயும் அந்த பார்முலாவை ஃபாலோ பண்ணலாம்.

ஹிலாரி: இல்ல டிரம்ப் ஒரு ஓட்டுக்கு 100 டாலர் தரப்போறதா நியூஸ் வந்திருக்கு ஒட்டு மொத்த அமெரிக்காவும் அதே பேச்சா இருக்கு.. போன முறை அவர் ஜெயிச்சா மாதிரி இப்ப அவர் ஜெயிக்கக்கூடாது.

மின்கம்பம்: அம்மா உங்க வீட்டுக்காரர் கிளிண்டன் ஆதரவுன்னு ஒரு பேட்டி கொடுக்க சொல்லுங்க முதலில்..

ஹிலாரி: சில்லி.. அவர் எங்க கட்சி தானே அவர் ஆதரவு தந்து என்ன ஆகப்போகுது.?

மின்கம்பம்: இருந்தாலும் அவர் முன்னாள் அதிபர் தானே அவர் ஆதரவுன்னா ஒரு இமேஜ் வருமே.. இந்த நேரத்தில் யார் ஆதரவுன்னாலும் வாங்கிருங்கம்மா நாங்க வாசன் கிட்ட ஆதரவு வாங்கினா மாதிரி..

ஹிலாரி: இது ஒரு மேட்டர் இல்ல ஒரு அதட்டு அதட்டுனா அதுவா ஆதரவு கொடுத்துடும் வேற ஏதாவது நச்சுன்னு ஐடியா கொடுங்க..

மின்கம்பம்: சொல்றோம் அம்மா.. ஓட்டுபெட்டி நம் வசமாக நாமும் ஒரு பெட்டி கொண்டு வர்றோம்..

ஹிலாரி: என்ன பணமா.?! நெவர் நான் அந்த சீப்பான வழியில் இறங்க மாட்டேன்..

மின்கம்பம்: அய்யோ இது பணப்பெட்டி இல்லம்மா சவப்பெட்டி.!

ஹிலாரி: சவப்பெட்டியா.! என்ன உளர்றிங்க யாரு இங்க செத்து போனது.?

மின்கம்பம்: இப்ப சாகலை ஆனா முன்னாடி செத்துபோனாங்களே..

ஹிலாரி: நீங்க யாரைச் சொல்றிங்க.?

மின்கம்பம்: அம்மா அய்யா ஜான் கென்னடி இருக்காருல்ல..

ஹிலாரி : ஆமா அவர் நம்ம கட்சி சீனியர் தான்..

மின்கம்பம் : அவர் டெட்பாடி மாதிரி செய்யறோம் அதை ஒரு பெட்டி மேல வைக்கிறோம் அமெரிக்க கொடியை போர்த்துறோம் எல்லா ஓட்டையும் தூக்குறோம்.

ஹிலாரி: ஓ அனுதாப ஓட்டுகளா இந்த ஐடியா கொஞ்சம் முகம் சுளிக்க வைக்குதே.. மக்கள் ஏத்துப்பாங்களா.?

மின்கம்பம்: அம்மா.. எப்பவுமே மக்கள் கிட்ட செண்டிமெண்ட் தான் எடுக்கும்.. முதலில் இது கேவலமா இருந்தாலும் போகப்போக மக்கள் பழகிடுவாங்க.. நீங்க சரின்னா சவ ஊர்வலம் அடச்சே தேர்தல் ஊர்வலம் ஆரம்பிச்சிடலாம்

ஹிலாரி: நான் கொஞ்சம் யோசிக்கணுமே..

மின்கம்பம் : ரொம்ப யோசிக்காதிங்க அம்மா அது ஆபத்து..அமெரிக்க  மக்களுக்காக தன் உயிர் நீத்த அண்ணன் கென்னடி கட்சிக்கே உங்க ஓட்டுன்னு கேட்பதில் தப்பு ஒண்ணும் இல்லியே..

ஹிலாரி: அட இது நல்லாருக்கே அப்ப பிரச்சாரத்தை ஆரம்பிங்க

(அனைவரும் அம்மா என்று கத்தியபடி ஹிலாரி காலில் விழ ஆச்சர்யத்துடன் அங்கிருந்து நகர்கிறார்) நிறைந்தது.

No comments:

Post a Comment