Thursday 25 May 2017

பாண்டியன் காதலி.!

புரவி கனைக்கும் சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான் ஆறுமுகப் பாண்டியன் நேரம் நான்காம் ஜாமம் முடியும் தருவாயில் இருந்தது என்பதை சில பக்ஷிகளின் ஒலியால் அறிந்து கொண்டான்.. அவன் உறங்கிக் கொண்டிருந்த மரத்தடியில் விரித்து இருந்த அங்கியை சுருட்டிக் கொண்டான்.. மெலிதாக சோம்பல் முறித்துக் கொண்டான் மரத்துக்கு சற்றுத் தொலைவில் வைகை கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது.. மீண்டும் புரவியின் கனைப்புச் சப்தம்..

புரவியை நோக்கி நடக்கலானான்.. தன் எஜமானன் வருவதைக் கண்டு முன்னும் பின்னும் நகர்ந்தும் வித்யாசமாக உறுமல் போல கனைத்தும் தன் விசுவாசத்தை காட்டியது அக்குதிரை.. என்ன வீரா தாகமோ என்றபடி அதனை அவிழ்த்துவிட்டான் பாய்ச்சலோடு ஆற்றை நோக்கி விரைந்தது குதிரை.. அதன் பின்னாலேயே சென்ற ஆறுமுகன் தன் ஆடைகளை களைந்துவிட்டு அரையாடையோடு ஆற்றில் இறங்கினான்.. ஜிலீர் என சில்லிட்டது இரவு நேர வைகை.

குதிரை தண்ணீர் அருந்த தொலைவில் தெரிந்த இராமராயர் மண்டபத்தை பார்த்தான் 2காத தொலைவில் அகல் விளக்குகளின் ஒளியில் மிதக்கும் தெப்பம் போல ஆற்றுக்கு நடுவே தெரிந்தது.. ஒரு கணம் விழி மூடி யோசித்துவிட்டு.. வீரா நான் ஆற்றில் நீந்தப் போகிறேன் பத்திரமாக இரு என குதிரையை நோக்கி சொல்லிவிட்டு சரேலென நீரில் பாய்ந்தான் சித்திரை மாதமானாலும் ஆற்றின் வேகம் அதிகமாக இருந்தது அதை விட அபாரமாக இருந்தது அவன் நீச்சல்.

இரு நாழிகைகளுக்குள் மண்டபத்தை நீந்தி அடைந்தான்.. ஆறுமுகப் பாண்டியன் முத்துக் குளிப்பதில் வல்லவன் அவனுக்கு ஆறெல்லாம் சர்வ சாதாரணம் இந்த பாண்டிய தேசத்தில் அவனைப் போன்ற நீச்சல் வீரனைப் பார்ப்பதரிது.. மன்னர் குலசேகரப் பாண்டியனால் பாண்டியரின் இலட்சினையான மீனைப் போல நீந்தும் வீரம் என்பதால் மச்சப் பாண்டியன் என்னும் பட்டப்பெயரும் பெற்றவன்.. ஆனால் காலச் சூழலில் மன்னரால் தேடப்படும் அரசாங்க குற்றவாளி அவன்.

தலை மறைவாக இருந்த அவனை பாண்டிய நாட்டிற்கு வரச் சொன்னதே மன்னரின் சகோதரி சித்திரபானு தான்.. ஆம் அவன் காதலி அவள்..கதிரவன் உதிக்கும் முன்னே ராமராயர் மண்டபத்துக்கு வரச்சொல்லி சேதி அனுப்பி இருந்தாள்.. அதன் படி வந்துவிட்டான்.. ஈரம் சொட்டச் சொட்ட மண்டபத்தில் ஏறினான் அகல் விளக்குகளின் ஒளியில் அப்பிரதேசமே ஜாஜ்வல்யமாக ஜொலித்தது.. அதில் வெளிச்சம் வராத ஒரு இருள் பகுதிக்குள் சென்றான் இடுப்பிலிருந்த...

அரையாடையை நன்கு பிழிந்து அதிலேயே உடலை துவட்டிக் கொண்டான் மீண்டும் ஆடையைப் ஒட்டப் பிழிந்து இடையில் கட்டிக் கொண்டான்.. ஆற்றுக்கு நடுவே சிலு சிலுவென காற்று பிய்த்துக் கொண்டு அடித்தது அருகிலிருந்த தூணில் சாய்ந்து அமர்ந்தான்.. நான்காம் ஜாமம் பிரவாகம் எடுக்கும் வைகை சில்லென்ற காற்று அவனது நினைவுகளி கிளர்ந்தெழச் செய்தன.. சித்திரபானுவை முதன் முதலாக சித்திரா பவுர்ணமியில் அழகர் ஆற்றில் இறங்கும் முதல் நாள் இதே ராமராயர் மண்டபத்தில் பார்த்தது அவன் நினைவுக்கு வந்தது.

சித்திரபானு..! உன் குரல் கேட்டு எவ்வளவு நாளாயிற்று மெல்ல உறங்கிப்போனவனை எழுப்பியது பெண் குரல் "சீக்கிரம் எழுந்து மார்க்கெட் போயி காய் வாங்கிட்டு அப்படியே பால் வாங்கிட்டு வாங்கன்னு நேத்து நைட்டே சொன்னேன் இல்ல இதென்ன இன்னும் எந்திரிக்காம?? என் மனைவி பானு தான்.! சாரிம்மா கொஞ்சம் அசந்துட்டேன் இதோ இப்போ கிளம்பிடுறேன்மா என்ற போது படபடவென கைத்தட்டல் போல சத்தம்.! படுக்கையில் தலைமாட்டில் ஃபேன் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது நேற்றிரவு வாசித்த சாண்டில்யனின் ஜலதீபம் புத்தகம்.!

No comments:

Post a Comment