Sunday 14 May 2017

ஹைபுன்..

பொதுவாக பெண்ணின் கண் பார்வை பேசாத மொழிகள் எல்லாம் பேசும்.. காதல் கூட விழி வழியாகத்தான் இதயம் நுழைகிறது. காதலியின் கடைக் கண் பார்வைக்கு காத்திருப்போர் எல்லாம் விழி பேசும் மொழிகளைக் சரியாகக் கற்றுக் கொண்டால் தான் அந்தக் காதல் நிறைவேறும். அவள் விழிகள் இரண்டு தான் ஆனால் அவை பேசும் மொழிகள் தான் எத்தனை எத்தனை.! கன்னியரின் கடைப்பார்வை கிட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் என்பார் பாரதிதாசன். பாரதியார் வேறு வகை.

ஒளி படைத்த கண்ணினாய் வா..வா..என்றார். தமிழ் சினிமா பேச ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை கண்கள், விழிகள், பார்வை என வந்த பாடல்கள் பல்லாயிரம்.. அந்தக் கண்கள் கோபம்,மகிழ்ச்சி, இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, பெருமிதம், அழுகை,சிரிப்பு என பல ரசங்களை வெளிப் படுத்தி விடும். சிலருக்கு பொய் பேசுவதை கண்களே காட்டிக் கொடுத்து விடும் பொதுவாக கண் பார்த்து பேசும் ஆண்களைப் பெண்களுக்கு மிகப் பிடிக்கும். காதலர்களுக்கு கண் பேசும் வார்த்தைகளை புரிந்து கொள்வது மிக சுலபம்.

ஹைபுன்..

என்ன? ஏன்? எப்போது?
எதற்கு?எங்கே?எப்படி?
இவ்வளவையும் கண்ணால் 
கேட்டிட உன்னால் தான் முடியும்.

2016 ஜனவரி 3 ஆம் தேதி கூவம் ஆற்றுப் பாகத்தைக் கடக்க நேர்ந்தது.. குப்பை குளம் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீச அது தன் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தது. அதிகமில்லை மிகச்சரியாக 30 நாட்களுக்கு முன் பளிங்கு போல ஓடிய ஒரு ஆறு மீண்டும் பாழாகியிருந்தது. 

பெரு வெள்ளத்தை தாங்கிக் கொள்வதை விட குப்பை கூளங்களை எப்படி அப்புறப் படுத்துவது நெகிழிப் பைகளை ஒழிப்பது போன்ற விழிப்புணர்வு மக்களுக்கு மிக மிக அவசியமாகிறது. ஏனெனில் இந்த குப்பைகளால் ஏற்பட்ட அடைப்பு தான் கழிவு நீர் வெள்ளமாய் வீடு புக காரணமாயிற்று. 

வெள்ளம் வடிந்த பின்னும் கழிவு நீர் தேங்குதல், கொசுக்கடி காய்ச்சல் என சுற்றுப்புற சுகாதாரமின்றிப் போனதால் நோயால் அவதிப் பட்டனர் பலர்.. இதெல்லாம் எங்கோ கடைக்கோடி கிராமத்தில் இல்லை சிங்காரத்தை பேரில் மட்டுமே கொண்டுள்ள தலைநகர் சென்னையில் தான்.

குப்பைகள் போட்டால் அபராதம் விதித்து தண்டனை சிங்கப்பூரில் ஆனால் இங்கு தண்டனை நோய்கள் நொடிகள் வருங்கால தலைமுறைக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தாவிட்டால் நாளை எவரும் சென்னையில் வாழும் வாழ்வு பற்றி ஒன்றும் பெருமையாக சொல்லிக் கொள்ள முடியாது.

ஹைபுன்...

ஊறிய நெகிழிகள் ஊரெங்கும் மிதக்க
நிலத்தடிக் கழிவுகள் ஊர்வலம் நடத்த
வைகுந்த கைலாய லோகங்கள் அடைந்திட
சாக்கடை மூடிகள் அடைப்பது இல்லை 
சாலையில் தேங்கிய மழைநீர் அலைகள்
கழிவுநீர் கலந்து புரியுது கொலைகள்
பசுக்களை வளர்த்து வாழ்ந்த நற்றமிழர் 
கொசுக்களை வளர்த்து வீழ்ந்தன ரிங்கு
தலைநகர் இதுவென பெருமிதம் கொள்ள
எதுவொன்றுமில்லை என்னத்தைச் சொல்ல.

No comments:

Post a Comment