Sunday 14 May 2017

சிவபானப் பாடல்கள்..

#சிவபானப்_பாடல்கள்

கஞ்சா என்றால் சிலருக்கு கோபம் வந்துவிடும் சிவபானமுன்னே சொல்லுவோம்.. அதைப் புகைத்தவர்கள் ஒவ்வொருவரும் அவர்களது கிறக்க நிலையை வித விதமாக சொல்லுவார்கள் அந்தரத்துல மிதந்த மாதிரியே இருந்துச்சு, இறக்கை கட்டி பறந்த மாதிரி இருந்துச்சு, இசை காதில் ஒலித்துக் கொண்டே இருந்துச்சு என்பார்கள்.

இந்த இசைப்பிரியர்கள் தான் இந்தப் பதிவின் நாயகர்கள்.. மதுரையில் ஆஹ்ஹா அச்சாறா.. சொல்றமுல்ல, கேக்குறோமுல்ல, சீ, இந்த ஒற்றை எழுத்தை இராகமாக இவர்கள் சொல்லும் அழகே தனி.. இதெல்லாம் இவர்கள் புழங்கும் வார்த்தைகள்.. இவர்கள் தனி உலகில் தனி வார்த்தைகளில் தனி ஒருவனாக சஞ்சரிப்பார்கள்.

எங்க ஊரில் சேகர் என்னும் தோழன் இருந்தான் கஞ்சா சேகர்ன்னா தான் தெரியும்.. தூரத்து உறவினன் வேறு.. நான் சேலத்திலிருந்து மதுரை குடியேறிய சமயம் அது.. இவனை சிகரெட் குடிப்பவன் என்று தான் நினைத்து இருந்தேன் ஆனால் குடலைப் பிரட்டும் ஒரு மூலிகை மணம் அடிக்க அது தான் கஞ்சா என்றார்கள் அறிந்தவர்கள்..!

சேகர் சார்மினார் சிகரெட் ஒன்றை வாங்கி கட்டை விரல் நகத்தில் அதை தட்டி உள்ளே இருக்கும் தூளை உதிர்ப்பான்.. மெல்ல பாக்கெட்டில் கைவிட்டு ஒரு பொட்டலத்தை பிரித்து புகையிலைத் துகள்கள் போல பழுப்பும் பச்சையும் கலந்து இருக்கும் சிறு குவியலில் அரிசியில் கல் பொறுக்குவது போல வெண் நிற விதைகளை..

நீக்குவான் பின்பு அதை உள்ளங்கையில் கொட்டி நடிகர் நம்பியார் மேனரிசம் போல கையை கசக்குவான்.. சமையல் குறிப்பு போல ஏற்கனவே உதிர்த்து வைத்துள்ள சிகரெட் துகளையும் இத்தோடு சேர்த்து 2 நிமிடங்கள் கசக்கி.. துப்பாக்கியில் மருந்து ஏற்றுவது போல அதை சிகரெட்டுக்குள் அடைப்பான்.. தேர்ந்த சிற்பி போல..

அடுத்து அதைப் பற்ற வைத்து நான்கு இழுப்புகள் 10 நிமிடம் தான் டீக்கடையில் இருக்கும் டேப்பில் பாடல்கள் போடச் சொல்லுவான்.. சின்னக் குட்டி நாத்தனா, நெத்தியில நீல நிறப் பொட்டு, மண்ணை நம்பி மரம் இருக்கு, இப்படி தபேலா முக்கிய இசையாக இருக்கும் பாடல்களில் அவனுக்கு அந்த தபேலா சத்தம் குமுக் குமுக் என..

டிஜிட்டல் அதிர்வுகளோடு கேட்குமாம்.. அது என்னா சுகம் தெரியுமாடா மாப்ள என்பான் அதற்கு அவன் வைத்த பெயர் குமுக்கு பாடல்கள்.. கஞ்சா போதையில் இல்லாத போது இதெல்லாம் சொல்லுவான்.. கஞ்சாவில் அந்த வெண்ணிற விதைகள் நீக்காவிட்டால் புகைக்கும் போது அனலில் அது வெடிக்குமாம்.!

அதான் நீக்குகிறேன், கஞ்சா அடிச்சுட்டு தேன் மிட்டாய் அல்லது பால்கோவா சாப்பிட்டா செம கிக் என கஞ்சாவின் பெருமைகள் விளக்கப்பாடங்கள் எல்லாம் எடுத்து இருக்கிறான்.. அவனுடன் ஏன் பழகினேன் என்றால் அவன் செலவில் சரவணா டூரிங் தியேட்டரில் சினிமாவுக்கு கூட்டிப் போவான் அநேகமாக வாரம் இரண்டுமுறை.. 

தியேட்டரில் இவனுக்கு ஒரு ஜமா சேர்ந்துவிடும் அனைவரும் கூடிக் கிறங்கி மிதந்து வருவார்கள் இடைவேளையில் மாப்ள 5 ரூபாய்க்கு தேன் மிட்டாய் வாங்குற என பணம் தருவான்.. ஒரு முறை மாப்ள வாடகை சைக்கிள் எடு ஒரு இடத்துக்கு போவோம் என்றவன் மீனாட்சி தியேட்டர் அருகே கூட்டிச் சென்றவன் ஓரிடத்தில் என்னை

நிற்க சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்த படி ஒரு சந்தில் தொலைந்து 10 நிமிடத்தில் வெளிப்பட்டான்.. சட்டுன்னு கண்டிய எடு மாப்ள என அவசரப்படுத்தி அங்கிருந்து கிளப்பினான் அது தான் கஞ்சா விற்கும் ஏரியா என்பது பின்னர் தெரிந்தது.. அதன் பின் அவன் தொடர்பும் விட்டுப்போனது இந்தப்பாடல்களை எங்கே கேட்டாலும்

சேகரும் கஞ்சா மணமும் நினைவில் வரும்..ஓ இரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து பாடலுக்கு கிறக்கத்தில் அவன் சொல்லும் அச்சாறாவும்,சீயும், ஆஹ்ஹாவும் சிக்சர் சிம்பல் காட்டும் அம்பயர் போல இரு கைகளையும் தூக்கு அதன் இரு ஆட்காட்டி  விரல்களையும ஆட்டி அவன் கம்போஸ் செய்வது தெரிகிறது.

No comments:

Post a Comment