Sunday 14 May 2017

பொன்னாத்தா புராணம்..

பொன்னாத்தா கிழவிக்கு இப்ப வயசு எண்பத்தியேழு
பொங்கியவ தின்பதெல்லாம் கேப்பைக் கம்பங் கூழு
கரிசக்காட்டு மண்ணில் பொறந்த கரு கருகருப்பழகி
கைநாட்டு தான் இருந்தாலும் வேலயில பொறுப்பழகி
இன்னும் ஒத்த மனுஷியா தலயில் புல்லுக்கட்டு சுமப்பா
ஒரலு நிறைய அரிசி போட்டு கை மாத்தி மாத்தி இடிப்பா

பசு மாட்டை புடிச்சுக் கட்டி கழனி ஊத்தி பால் கறப்பா
பொழுதடைய வரும் கோழிய பஞ்சாரத்தில் அடைப்பா
ஊருணிக்கு நடையா நடந்து தண்ணி சுமந்து வருவா
ஊர்நாயம் பேசாம பொயிலை வெத்தலையும் இடிப்பா
டவுனுக்கு போற எந்தபஸ்சிலும் அவ ஏறி பார்த்ததில்ல
எங்கயும் எப்பவும் அந்த  நடை ஓய்ஞ்சு போனதில்ல

பொயிலை வெத்தலை அரிச்சதுல பாதி பல்லு போச்சு
அவ திரும்பத்திரும்ப பேசினா தான் புரியும் அந்தபேச்சு
சொந்த பந்தமுன்னாலும் ஒத்தக்காசு விட்டுத்தர மாட்டா
ஒரு புள்ளயும் இவளுக்கில்லை எதுக்கு இவ்வளவு சேத்தா
பொன்னாத்தா கிட்ட பணம் எம்புட்டு இருக்கு?அது ரகசியம்
அவகிட்ட கடன் கேட்டு அவ கொடுத்துட்டா அது அதிசயம்

இராவான ஊர் பஞ்சாயத்து டிவியில படம் பார்க்க வருவா
அத படத்தில் வரும் காட்சிக்கேத்தபடி சிரிப்பா இல்ல அழுவா
ஒண்ணே ஒண்ணு டிவியில அவளுக்கு செய்தி பார்க்க புடிக்காது
ஏன்னா அதுல பாட்டு சண்டை சிரிப்புன்னு காட்சி ஏதும் வாராது
இந்தா இப்ப செய்தி போட்டுட்டாக எந்திரிக்க போனவ அப்படியே உக்காந்தா இதுவரைக்கும் இல்லாத அதிசயமா சேதி எல்லாம்...

பார்த்தா.. இதுவே ஊரெல்லாம் சேதியாச்சு பொன்னாத்தா சேதி
பாக்க ஊரே அவளைப் பாக்க முடிஞ்சதும் அழுதுகிட்டே போனா
மறுநா காலையில இன்னொரு அதிசயம் மொத பஸ்சுல கையில
ஒரு மூட்டையோட ஏறிப்போனது.. பொன்னாத்தா எங்க போனா.?
ஊரெல்லாம் தினுசு தினுசா பேச்சு.. சாயங்காலமும் ஆச்சு..
டவுனுல இருந்து சாயங்கால பஸ்சுல வந்தாரு பெட்டிக்கடை காளி

பொன்னத்தா என்ன ஆனா தெரியுமாடான்னு கையில இருக்க 
நியூஸ் பேப்பரை காட்டுனாரு.. சாயங்காலம் வர்ற பேப்பர் அது
பகீர்னு கொல நடுங்க அதை புடுங்கி பார்த்தா மொத பக்கமே
பொன்னாத்தா கிழவி படம்..! சேதி படிக்க படிக்க அழுகை வந்துச்சு
அழுதுகிட்டே இருக்கேன்.. சேதிய படிச்ச எல்லாரும் அழுதாங்க
சேதி என்னான்னு சொல்லலை இல்ல இந்தா படிக்கிறேன் கேளுங்க

வெள்ள நிவாரணப் பணிகளுக்கு கலெக்டரிடம் 
தன் சேமிப்பு முழுவதையும் கிராமத்து மூதாட்டி..!

அட இப்ப நீங்க ஏன் அழுவுறிங்க..!!

No comments:

Post a Comment