Thursday 25 May 2017

டாஸ்மாக் கி.பி 2050

அந்த கட்டிடத்தின் எதிரே நீண்ண்ண்ண்டடடட கியூ நத்தையைப் போல நகர்ந்து கொண்டு இருந்தது.. கட்டிடத்தின் உச்சந்தலையில் டாஸ்மாக் என ஆங்கிலத்திலும் தமிழிலும் லேசர் போர்டு நிறங்களை உமிழ்ந்து கொண்டிருந்தது.. ச்சே என்ன பொழப்புடா இது எப்போ நம்ம முறை வந்து எப்போ வாங்கிகிட்டு எப்போ வீட்டுக்கு போவது??

ரவி அலுத்துக் கொண்டான்.. "சார் என்னமோ நீங்க மட்டும் தான் கஷ்டப்படுறா மாதிரி சொல்றிங்க அப்போ என்னை நினைச்சுப் பாருங்க" என்றான் பின்னாலிருந்தவன்.. "குவார்ட்டர் 450 ரூபா இருந்துச்சு இப்போ 600 ரூபா ஆயிடுச்சு ஒரு ஆளுக்கு ரெண்டு குவார்ட்டர் மட்டும் தான் அதுவும் ஆதார் கார்டு இருந்தாத் தான்"

அநியாயம் சார் என்றார் ரவிக்கு முன்னால் நின்றவர் தன்பங்கிற்கு.. இதுல கடைகளை வேற குறைக்கப்போறாங்களாம்... என்றார் இன்னொருவர் கவலையாக.. என் ஒய்ப் மகளிர் டாஸ்மாக்கில் நின்னு இருக்கா ஆனா உரிய ஸ்டாக் இல்லாததால் ஒரு குவார்ட்டர் தான் தந்தாங்களாம் அந்த ஏரியா பெண்கள் பூரா மறியல் பண்றாங்களாம்..

இப்படி ஆளாளுக்கு புலம்ப க்யூ வேகமாக நகர ஆரம்பித்தது.. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சிலர் கள்ளத்தனமாக நான்கு குவார்ட்டர்கள் பெற்றுக் கொண்டனர்.. ரவி சேல்ஸ் கவுன்ட்டரை நெருங்கி தன் ஆதார் கார்டையும் டெபிட் கார்டையும் நீட்டினான்.. ஸ்வைப் செய்து இரு குவார்ட்டர் பாட்டில்களை பில்லோடு தந்தார்கள்.. 

கிளிங் என மெசஞ்சர் ஒளிர பார்த்தான் அவன் மனைவி தான்.. "இப்போ தான் நானும் ரெண்டு குவார்ட்டர் வாங்கினேன் வந்து பிக்கப் பண்ணிக்க முடியுமா என லொகேஷன் மேப்போடு செய்தி அனுப்பியிருந்தாள்.. வர்றேன் என பதிலிவிட்டு.. குவார்ட்டர் பாட்டில்களை காரில் பத்திரமாக வைத்து காரை கிளப்பி மனைவி இருக்கும் இடம் போய் சேர்ந்தான்..

அவளும் 2 குவார்ட்டர் பாட்டில்களோடு வண்டி ஏறினாள்.. அப்பாடா இன்னிக்கு 4 குவார்ட்டர் கிடைச்சதே.. என்றான் பெருமிதமாக.. ஆமாம் நீங்களும் ஏதோ பெரிய கம்பெனி ஜெனரல் மேனேஜர்... ஏதாவது ஒரு அரசியல்வாதி மூலமா டெய்லி 2 ஃபுல் வாங்க துப்பில்ல 2 ஃபுல் இருந்தா நம்ம குடும்பமே குடிச்சு சந்தோஷமா இருக்கலாமே!

நான் என்ன உங்க கிட்ட நகை நட்டா கேட்டேன்.. 2 ஃபுல் தானே என்றாள் கோபத்துடன்.. இரும்மா தெரிஞ்ச சென்ட்ரல் மினிஸ்டர் பி.ஏ. கிட்ட பேசிட்டேன் அடுத்த வாரம் ஒரு சிபாரிசு மெயில் அனுப்பறாராம்.. அது கிடைச்சா நமக்கு டெய்லி 2 ஃபுல் கிடைச்சிடும் என்றான்.. ஹை நிஜமாவா சூப்பர்.. டியர் இந்த சந்தோஷத்தை செலிபரேட் பண்ண..

இப்பவே நாம ஒரு குவார்ட்டர் அடிச்சுடலாமா.. என்றாள்! ஏய் அதுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு.. அந்த ஃபுல் வந்ததும் கொண்டாடலாம் நாட் நவ்.. என்ற போது செல்லில் அழைப்பு கவுதம் என ஒளிர்ந்தது அவர்களது 12 வயது மகன் வீட்டில் இருந்து கூப்பிடுகிறான்.. எடுத்து பேசு என்றான் ரவி.. ஹலோ கவுதம் செல்லம் டாடி மம்மி ரெண்டு பேரும் வீட்டுக்கு..

வந்துகிட்டு இருக்கோம் என்ன கண்ணா வேணும்.? மம்மி குவார்ட்டர் வாங்கிட்டிங்களா நான் குடிக்கணும் சீக்கிரம் வாங்கம்மா" என்றான்.. தோ 5 மினிட்ஸ் கண்ணா.. வீட்டுக்கு வந்ததும் டாடி மம்மி நீ எல்லாம் சேர்ந்து குடிக்கலாம் என்றவள்.. போனை அணைத்ததும் கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.. ரவி பதறினான்..

ஏய் என்னம்மா ஆச்சு பையன் என்ன சொன்னான்.. பாவங்க அவன் எப்போ குவார்ட்டர் வருமுன்னு ஏங்கி கேட்டான் வந்துடுறோமுன்னு சொல்லியிருக்கேன்.. பாவம் பிள்ளைக்கு எவ்வளவு தாகம் இருந்திருந்தா தவிச்சு போயி போன் பண்ணியிருப்பான் என்றாள்.. பின்சீட்டில் குவார்ட்டர் பாட்டில்களில் இருந்த குடிநீரும் தளும்பி ஆம் என்றது.

தண்ணீர் பற்றாக்குறையாலும் அரசுக்கு அதிக வருவாய் என்பதாலும் மதுவுக்கு பதில் டாஸ்மாக்கே குடிநீரை பாட்டில்களில் அடைத்து விற்கும் நிலை வந்தால் எப்படி இருக்குமென சிந்தித்ததன் விளைவே இப்பதிவு.

No comments:

Post a Comment