Thursday 25 May 2017

ஆனந்த தீபாவளி..

இந்த வறுமை காலத்தில் புண்பட்ட எங்கள் இதயத்தையும் பசி வாட்டும் வயிற்றையும் நாங்கள் சமாளித்தது ஒரு சுவையால்.. ஆம் அது தான் நகைச்சுவை.! என் அம்மா சரியான கிண்டல் பேர்வழி அலட்டிக் கொள்ளாது சட்சட்டென அவர் வாயில் இருந்து வரும் கமெண்ட்டுகள் அந்த காலத்தில் ஃபேஸ்புக் இருந்திருந்தால் ஒவ்வொன்றுக்கும் மினிமம் 2k லைக்குகள் வாங்கியிருப்பார் அந்தளவிற்கு குறும்பும் லொள்ளும் தெறிக்கும்.


என் பாட்டியே அவ்வளவு டைமிங்காக கவுண்ட்டர் கொடுப்பார்.. எங்கள் மணி மாமாவும் நக்கல் நையாண்டியில் டாக்டரேட் வாங்கியவர். அதிலும் எங்கள் சாந்தி சித்தி இருக்காங்களே அவர்கள் இமிடேட் மகாராணி.. ஒரு ஆளை பார்த்துவிட்டால் அவர் எப்படி நடப்பார் எப்படி பேசுவார் என்பதை எங்களுக்கு நடித்துக் காட்டுவார். பாட்டி வீடே கைத் தட்டித் தட்டி கண்ணில் நீர் வர சிரித்து அதிரும். 


அந்த சேலத்து ஃபார்முலாவைத்தான் மதுரையிலும் கடை பிடித்தோம்.  வறுமை மட்டும் போஷாக்காய் வளர்ந்து இருக்கும் எங்கள் வீட்டில் இந்த நோஞ்சான்கள் அடித்த லூட்டியில் தான்... வறுமை பாணபத்திரரைக் கண்ட ஹேமநாத பாகவதரைப் போல ஓடியிருக்கும். தம்பி பாலு பல்லைக் கடித்தபடி தேங்காய் சீனிவாசன் ஸ்டைலில் புதுப் புது வார்த்தைகள் சொல்லுவதில் கில்லி.. தங்கை உமா ஜுனியர் சித்தி. கடைக் குட்டித் தம்பி குமரன் சைலண்ட் டைனமிக் கமெண்டர்.


இவர்கள் எல்லாம் எனக்கு கற்றுக் கொடுத்ததில் தான் எனக்கு கொஞ்சமேனும் ஹ்யூமர் சென்ஸ் வந்திருக்கலாம்.. பாலு கம்சிலி கவுசிலி கக்கூசிலி.. என்னும் சொற்றொடரை அடிக்கடி சொல்லுவான் ஹவுஸ்மிங்கி, மங்கிஸ் த மேட் ஆஃப் த ஜிஞ்சர் பேர்ட், இவை எல்லாம் அவனது ஃபேமஸ் டயலாக்குகள்.. ஆண்டுகள் 20 ஆனாலும் இன்றும் நினைவில் வாழைப்பழத்தில் ஏற்றிய ஊசி போல பதிந்திருக்கிறது.


தீபாவளிக்கு வருவோம்.. புது சட்டை அப்போது குமார்ஸ் என்னும் கடை மதுரை அம்மன் சன்னதியில் இருந்தது 40 ரூபாய்க்கு சட்டை கிடைக்கும்.. அது மட்டும் தான் இருப்பதில் நல்ல பேன்ட்டாக துவைத்து வைத்துக் கொள்ளுவோம் அம்மாவுக்கு நூல் சேலை தங்கை வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் அவளுக்கு தாவணி பாவாடை செட் கிடைத்துவிடும்.. அப்பா ஒரு வேட்டியோடு திருப்தியாவார்.


364 நாட்களுக்குப் பின் காலை உணவாக இட்லி தோசை கிடைக்கும் ஒரே நாள் தீபாவளி.!அம்மா இரண்டு நாட்களுக்கு தேவையான அளவு மாவு ஆட்டி வைத்து விடுவார்.. வீட்டில் தங்கை உமா மட்டும் எப்போதும் அசைவம் பெரிதாக விரும்பி சாப்பிட்டதில்லை.. ஆனால் நான், தம்பி, அப்பா மூவரும் நன்கு சாப்பிடுவோம்.. அதிலும் பாலு தற்போது அசைவத்தை கைவிட்டு 10 ஆண்டுகள் ஆகிறது என்பது எட்டாவது அதிசயம்.


கோழி எடுக்க மாட்டார்கள்.. அம்மாவிடம் "வருஷத்துக்கு ஒரு நாளுடி பிள்ளைகளுக்கு ஆட்டுக்கறியே போடு" என்பார் அப்பா.. கடந்த காலத்தில் வாராவாரம் ஆரவாரம் என வாரம் 3 முறை அசைவம் எடுத்தவர் அல்லவா..! அந்த பழம் ஞாபகத்தில் அப்படிச் சொல்லுவார்.. அம்மா மட்டனில் ஒரு கால் கிலோவை குறைத்து ஒரு கிலோ சிக்கனும் வாங்கியிருப்பார் அப்பாவுக்கு தெரியாமல்..அது ஏன் தெரியுமா.? இருங்க தீபாவளிக்கு முன் தின இரவில் இருந்து வர்றேன்


தீபாவளி அன்று முதல் நாள் மழை பெய்தால் வீடு ஓழுகும் ஆங்காங்கே பாத்திரத்தை வைத்துவிட்டு அதில் விழும் நீரின் சத்தத்தை ஜலதரங்கம் போல பாவித்து விடிய விடிய பேசிக் கொண்டிருப்போம் மழை நின்று அதிகாலை ஆங்காங்கே பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்கும்.. அம்மா நனைந்த விறகுகளோடு அடுப்படியில் ஐக்கியமானால் கிளம்பும் புகையும் தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டதால் எரிச்சலும்..


கண்களை எரிக்க நான் தம்பிகளுக்கு எண்ணெய் தேய்த்துவிட அவர்கள் ஆணழகன் போட்டியில் கலந்து கொள்பவர்களைப் போல போஸ் கொடுக்க வீடே சிரிப்பலையில் அதிரும்.. ஒரு வழியாக குளித்து புத்தாடை (சட்டை) அணிந்து அமரும் போது அப்பா ஸ்வீட் கடை சம்பந்தமாகத் தான் அலைபவர் என்பதால் எப்படியாவது முதல் நாள் இரவே அவர் நண்பர்களைப் பார்த்து ஒரு கிலோ ஸ்வீட் அரைக்கிலோ காரம் வாங்கி வந்திருப்பார்.


அதை பிரித்து கொடுக்க அதை சாப்பிடுவதற்குள் சூடாக இட்லிகள் தலைக்கு கறிக்குழம்பு ஊற்றி குளித்து வரும்.. அரட்டையோடு சாப்பிட அடுத்த கட்ட உற்சாகம் கரை புரளும்.. எல்லாருக்கு கறி கொஞ்சம் தந்தாலே முக்கால் கிலோ கறி ஒரு முறை தான் வரும்.. 2வது முறை நாம் இட்லிக்கு வெறும் குழம்பு தான்.. ஏக்கத்துடன் பார்ப்போம்.. அப்போது தான் அடுத்த ரவுண்ட் சிக்கன் வரும்.. இப்போ புரியுதா..என அம்மா அப்பாவை பார்க்க அப்பா கண்கலங்கி ஆமோதிப்பார்.


உதிரி வெடி இரண்டு பாக்கெட் தான் அது தான் அன்றைக்கு மொத்த வெடியும்.. வெளியே கிளம்பினால் தெருவெங்கும் சுற்றி வெடிக்க பயப்படும் வசதிபடைத்த பயந்தாங் கொள்ளிகளின் வெடிகளை வெடித்து மதியம் வீடு வந்து மீண்டும் தோசை கறிக்குழம்பு சாப்பிட்டு தூங்கி.. மாலை டூரிங் டாக்கிசில் ஏதாவது ஒரு செகண்ட் ரிலீஸ்..


ரஜினி அல்லது கமல் படம் பார்த்துவிட்டு இரவு வீடு திரும்பி தெருவில் வெடிக்காத வெடிகளை சேகரித்து வைத்து இருப்போம் அந்த வெடிகளை கொளுத்தி கை கழுவி அமர்ந்து மீண்டும் இட்லி குழம்புடன் உணவு.. தூங்கப் போகையில் மீண்டும் மழை வந்துவிட்டால் நான் தாளம் போட்டு பாட ஒழுகும் கூரை பின்னணி இசைக்க கச்சேரி களை கட்டும். அப்போது தம்பி தங்கைகளுக்காக பேசியது தான் என் முதல் மிமிக்ரி மேடை.. வசதிகள் ஏதுமில்லை தான் ஆனால் அந்த தீபாவளி தான் வசந்த காலம் அது தந்துவிட்டு போன இன்பம் எக்காலமும் வாராது.


நிறைந்தது..

No comments:

Post a Comment