Sunday 27 December 2015

10. நோற்றுச் சுவர்க்கம்...

#ஆண்டாள்_பெருமை

ஆமா இவரு பெரிய பணக்காரரு அம்பானிக்கே கடன் கொடுத்தவரு மாதிரி பேசறாரு.. பொதுவாக நாம் கிண்டலாக பேசும் போது ஒப்பீடு இது போல மிகைப்படுத்தலாக இருக்கும்.. அதாவது அவரே பெரியவர் அதை விடவா நீ பெரியவன் என்னும் தொனியில் கூறுவோம்.. அதிகாலை எழும்பாமல் உறங்கிக் கிடக்கும் பெண்ணிற்கு ஆண்டாளும் ஒரு ஒப்பீடு தருகிறார்.

சொர்க்கம் புகவேண்டும் என்பதற்காக விரதம் இருக்கின்ற பெண்ணே.. நீ கதவைத்தான் திறக்கவில்லை ஒரு குரல் கொடுத்தாவது பதில் பேசலாமே.! நறுமண துளசியை மாலையாய் அணிந்திருக்கும் நாராயணன் பெருமையை ஊர் மெச்ச போற்றித் துதித்தால் அவர் பேரின்பத்தை நமக்கு பரிசாகத் தருவார்.. அதை விட்டுவிட்டு சிற்றின்பமான இந்த உறக்கம் தேவையா.?

அன்று யமனிடம் வாய் தவறி வரம் கேட்டு தூக்கத்தை வரமாக பெற்றானே கும்பகர்ணன் அவனிடம் நீ தூக்கத்தை பரிசாகப் பெற்றுக் கொண்டாயா.? உனக்கும் அவனுக்கும் போட்டியா? அல்லது அவன் உன்னிடம் தோற்று விட்டானா.? எல்லையற்ற உன் சோம்பலை துறந்துவிடு வா வந்து இவ்வாசல் கதவை திறந்துவிடு.. என உறங்குபவளை கும்பகர்ணனோடு ஒப்பிடுகிறார்.

எனக்கென்னவோ ஆண்டாள் பாடினால் கும்பகர்ணனே எழுந்து வந்து விடுவான் என்றே தோன்றுகிறது.

மார்கழி 10 ஆம் நாள் பாடல்...

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment