Sunday 27 December 2015

4. ஆழிமழைக் கண்ணா...

#ஆண்டாள்_பெருமை

கடல் நீர் ஆவியாகி மேகத்தில் சேர்ந்து மழையாகப் பொழிகிறது என்பது இன்றைய அறிவியல் மனிதர்களான நமக்கெல்லாம் தெரியும்.. ஆனால் இது ஆண்டாள் வாழ்ந்த காலத்திலும் தெரிந்திருக்கிறது என்பது தான் வியப்பான செய்தி. எந்த ரமணனும் இல்லாத காலத்திலும் ஆண்டாள் வாசித்த வானிலை அறிக்கை தான் இந்த பாடல்.. 

கருமை நிற கண்ணனை மேகமாக உருவகப்படுத்துகிறார் ஆண்டாள். மழைக் கடவுளான வருணா நீ கடலுக்குள் நுழைந்து நிறைய நீரை எடுத்துக் கொண்டு பெரும் ஒலியுடன் மேலெழுந்து மேகமாக மாறி மின்னல் ஒளிர அம்பு போல் சரம் சரமாய் மாலவன் அடியவர்களுக்கு  அருள்வது போல மழையை பொழிவாயாக என்கிறார்.

இதில் பெருமாளின் சங்கினை இடியாகவும் அவரது சக்கரத்தின் ஒளியை மின்னலாகவும் அவரது சாரங்கம் என்னும் வில் அம்பை மழையாகவும் ரசனையோடு உவமைப் படுத்துகிறார்.  மார்கழியிலும் அக் காலத்தில் மழை இருந்திருக்கிறது என்பது இன்றைய சென்னை வாசிகளுக்கு திகிலூட்டும் சேதி.

மார்கழி 4 ஆம் நாள் பாடல்...

ஆழிமழைக்கண்ணா!ஒன்று நீ கைகரவேல்;

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழியம் தோளுடைய பற்பநா பன்கையில்

ஆழி போல் மின்னி,வலம்புரி போல நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்

வாழ உலகினில் பெய்திடாய்,நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

No comments:

Post a Comment