Thursday 10 December 2015

பாரதிக்கு

#பாரதிக்கு_சமர்ப்பணம்

செந்தமிழ்நாடெனும் போதினிலே- மழை வெள்ளமும் பாயுது வீட்டினிலே- எங்கள் அமைச்சர்கள் யாவர்க்கும் பேச்சும் இல்லே- பெருமூச்சும் பிறக்குது மக்கள் மூக்கினிலே..

சோகம் நிறைந்த தமிழ்நாடு- வீண் விளம்பரம்  நிறைந்த தமிழ்நாடு- நிலவினில் கண்டிடும் குழிகளைப் போல் நெடுஞ்சாலைகள் கொண்ட தமிழ்நாடு..

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்க் கண்டதோர் வையை பொருனைநதி- மணல் வாரி எடுத்து பின் வெள்ளத்திலே நன்கு மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாடு..

முத்தமிழ் பின்தள்ளி நல் ஆங்கிலத்தில் கல்விச் சாலைகள் கொண்ட தமிழ்நாடு-செல்வம் எத்தனை யுண்டோ அத்தனையும் விற்று கல்வி வியாபாரமான தமிழ்நாடு...

நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று மீனவர் வருவதை எதிர்பார்த்திருந்து அண்டை நாட்டிடம் அவர் மாட்டியதும் ஒரு கடிதம் எழுதுகின்ற தமிழ்நாடு...

வள்ளுவன் சிலப்பதி காரமென்று-மணியாரம் படைத்த தமிழ்நாடு
இதை புத்தகத்தில் மட்டும் படித்துவிட்டு வெட்டி ஜம்பம் அடிக்கும் தமிழ்நாடு...

சிங்கள நாட்டுக்கு கச்சத்தீவையுமே தாரையும் வார்த்த தமிழ்நாடு
புலிக்கொடி மீன்கொடி பறந்த இந்நாட்டினில் கட்சிக் கொடிகள் பறக்கவிட்ட திருநாடு..

ஏரிகள் எல்லாம் ஆக்ரமிப்பு அதை கேட்கவும் தைரியம் எழவும் இல்லை பிறர் வெள்ளத்து நிவாரணப் பொருட்களிலும் நன்கு ஸ்டிக்கர்கள் ஒட்டும் தமிழ்நாடு. 

<{புதிய பாரதி}>

No comments:

Post a Comment