Sunday 27 December 2015

9. தூமணி மாடத்து...

#ஆண்டாள்_பெருமை

பாலுமகேந்திரா, பி.சி.ஶ்ரீராம், சந்தோஷ்சிவன், மணிகண்டன் போன்ற புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்கள் படமாக்கும் காட்சிகள் கலைநயம் மிக்கதாக இருக்கும். அதற்கு முக்கியக் காரணம் காட்சிக்கேற்ற அழகான லைட்டிங்.! இயற்கையாகவோ செயற்கையாகவோ வரும் ஒளியின் மூலம் அந்தக் காட்சியை மெருகு ஏற்றுவார்கள். ஆண்டாளும் ஒரு ஒளிப்பதிவாளர் தான்.

ஆண்டாள் இப்பாடலில் நம் கண்முன்னே படமாக லைட்டிங் அமைக்கிறார்
ப்படி (வைட் ஆங்கிளில்)ஒரு வீடு அந்த அதிகாலை இருளில் வீட்டில் ஒரு அழகான விளக்கு மாடம் அங்கு மணிகளுடன் வெண்ணிற திரைச்சீலைகள் அசைகின்றன அதனைச் சுற்றி அலங்காரமான விளக்குகள் எரிகின்றன. 

மணம் கமழும் சாம்பிராணிப் புகை பரவிக்கிடக்க காமிரா பார்வேர்டில் ஜூம் ஆகிறது. இலவம் பஞ்சுமெத்தையில் உறங்கிக் கொண்டு இருக்கிறாள் ஒருத்தி. அப்படியே இந்த காட்சியைக் கற்பனை செய்து பார்த்தால் அடடா ஒரு மணிரத்னம் படம் போலவோ ஷங்கர் படம் போலவோ இருக்கிறதா..!!

ஆண்டாள் ரசனை ராணி.. அவளது அழகியல் மிகுந்த பார்வை பாசுரங்களின் பல இடத்தில் பிரதிபலிக்கும்.. வார்த்தைகளிலேயே இந்தக் காட்சியை அமைத்த அவள் திறனைப் பாருங்கள் வளமானகற்பனை, ஆழ்ந்த ரசனை, கண்ணன் மேல் கொண்ட அளவிலாக் காதல் அத்தனையும் விளங்கும்.

இங்கே இந்த காட்சியை நிறுத்திவிட்டு அடுத்த ஷாட் அப்படியே கதவிற்கு இந்தப்பக்கம் நாம் மாற்றுவோம்... அங்கே தினமும் இந்த வீட்டிற்கு வரும் அப் பெண்ணின் தோழிகள் கதவுக்கு வெளியில் இருந்து இவளை கூப்பிட்டு எழுப்புகிறார்கள். மாமன் மகளே என்ன உறக்கம்? மணிக்கதவை திறந்துவிடு
அட மாமியே நீ உன் மகளை எழுப்ப மாட்டாயா.?

உன் மகள் என்ன பேசா மடந்தையா? செவித்திறன் அற்றவளா? மயங்கிக் கிடக்கிறாளா? யாராவது அவளை மந்திரத்தால் மயக்கிவிட்டார்களா? மாயவர்களுக்கு எல்லாம் பெரிய மாயன், மாதவன்,வைகுந்தன் என்று அவன் பல நாமங்களை சொல்லிப்பாடுவோம் அவளை சீக்கிரம் எழுப்பு... ஆண்டாள் இது போல கூப்பிட்டு நம்மை எழுப்பினால் அதற்காகவே தூங்கலாம் போல.

மார்கழி 9 ஆம் நாள் பாடல்...

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.

No comments:

Post a Comment