Saturday 27 February 2016

மிச்சிகன் - டெட்ராய்ட்..

#ரெடி_ஸ்டார்ட்_கோ
(ஒரு வெற்றிப் பயணம்)

சிகாகோ..! ஸ்வாமி விவேகானந்தருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மறக்க முடியாத நகரம். யெஸ் எங்கள் முதல் அமெரிக்க பயணத்தில் நாங்கள் கால் பதித்த முதல் அமெரிக்க நகரம்.! பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என அனைவரையும் சகோதரத்துவத்துடன் அழைத்த வீரத்துறவியின் அதிர்வலைகள் எம்மீது மோத மெய்மறந்து நின்றோம்.எங்களை வந்து சந்தித்தார் நண்பர் வெற்றி. ஆம் அமெரிக்காவில் நாங்கள் முதன்முதலில் சந்தித்தது வெற்றியைத்தான்.!

அது அந்தப் பயணம் முழுவதும் தொடர்ந்தது. அமெரிக்காவில் எங்கள் முதல் நிகழ்ச்சி டெட்ராய்ட் நகரில்! மிச்சிகன் மாநில தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா. எங்களை சிகாகோவிலிருந்து டெட்ராய்ட்டுக்கு  வழியனுப்பத்தான் வெற்றி வந்திருந்தார். ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்கியது. அவர் எங்களுக்காக சிகாகோ சர்வதேச டெர்மினலில் காத்திருந்தார் அது தெரியாமல் நாங்கள் டிரைன் ஏறி டொமஸ்டிக் டெர்மினல் வந்துவிட்டோம்.

வைபை சற்று தாமதமாக கனெக்ட் ஆக ஒரு வழியாக எங்களை அந்த டெர்மினலில் வந்து பிடித்தார். அமெரிக்க காபியை ஆளுக்கு ஒரு வாளியில் வாங்கித்தந்தார்.. (அம்மாம் பெருசு) 21 மணிநேரப் பிரயாணக் களைப்பை அந்த வாளியில் போட்டு கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டோம். அங்கிருந்து டெட்ராய்ட் சங்கத் தலைவர் அண்ணாதுரையிடம் போனில் பேசினோம் அவர் கார்த்திக் என்பவர் உங்களை அழைத்துச் செல்ல வருவார் என்றார்.

வெற்றியிடம் விடை பெற்றுக் கொண்டு விமானம் ஏறினோம். மீண்டும் 1மணி நேரப் பயணம் வந்தது டெட்ராய்ட்... லக்கேஜுகளை கைப்பற்றிக் கொண்டு வெளியேறி உறைந்து நின்றோம். அவ்வளவு பனி பெய்து கொண்டிருந்தது அவசர அவசரமாக கையுறை குல்லாக்களை அணிந்து கொண்டு கார் ஏறினோம். வழியெங்கும் பனிதூவி எங்களை வரவேற்றது 40 நிமிட கார்ப் பயணம் தலைவர் அண்ணாதுரை அவர்களின் இல்லத்தில் முடிந்தது.

அவர் வீட்டில் தான் எங்களுக்கு தங்கும் வசதி செய்யப்பட்டு இருந்தது. நள்ளிரவு என்பதாலும் அமெரிக்காவில் அந்த வழக்கம் இல்லை என்பதாலும் யாரும் ஆரத்தி எடுக்காமலேயே அவரது வீட்டிற்குள் வலதுகாலை எடுத்து வைத்தோம். அந்த இரவிலும் சூடான உருளைக் கிழங்கு காரக்கறி லெமன் சாதம் வெள்ளை சாதம் ரசம் அப்பளம் என கிராண்ட் அண்ட் சிம்பிள் உணவு. முக்கியமாக வயிற்றுக்கு கெடுதல் தராத அருமையான உணவு.

அந்த இரவிலும் குளித்துவிட்டு தான் நான் சாப்பிடுவேன் என அவர்களை கிலியேற்றிவிட்டு குளிக்கப் போனேன். சசியும் கிறிஸ்டோபரும் நான் தலை துவட்டும் போதே சாப்பிட்டு தூங்கிவிட்டனர் என அவர்கள் அறையில் இருந்து வந்த மெல்லிய குறட்டை ஒலி என் காதில் சொல்லிப்போனது.. அடுத்த 10 நிமிடத்தில் அதே குறட்டை மொழியில் நானும் சாப்ட்டாச்சு என அவர்களுக்கு நான் பதில் தந்தேன். நிம்மதியாக உறங்கினோம்.( அவர்கள்?!)

காலை அவர் வீட்டுக்கு வெளியே வந்து மெய் மறந்தோம். சுற்றிலும் பனி படர்ந்திருந்தது மரம், புல்தரை,சாலை, வீட்டுக்கூரை என கடவுள் போல எங்கும் வியாபித்திருந்த  பனியை ரசித்தோம். சூடான காபியுடன் அதை ரசித்தது இன்னும் அருமை. காலையில் சூடான வெண்பொங்கல் இட்லி வடை என அருமையான சமையல் சுகுமாரி மேடத்தின் கோபிசெட்டி கொங்கு ஸ்டைல் குழம்பு வேறு. திருப்தியாக சாப்பிட்டு கிளம்பினோம்.

டெட்ராய்ட்டில் நடக்கும் கார் எக்ஸ்போ மிகப் பிரபலம். அங்கு செல்லும் அருமையான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. ஓடுகிற (கொஞ்சம் உறைந்த) டெட்ராய்ட் ஆற்றின் அந்தப்பக்கம் கனடாவின் ஆண்டாரியோவும் இந்தப்பக்கம் டெட்ராய்ட்டும் அதை வேடிக்கைபார்த்துக் கொண்டே கார் எக்ஸ்போவிற்குள் நுழைந்தோம். ஆகா உலகின் எல்லா பிராண்ட் கார்களும் அணிவகுத்து நின்றன. வண்ணமயமான கர்னிவலும் நடந்தது.ஆசை தீர கால் வலிக்க சுற்றிப் பார்த்தோம்..

 நண்பர் ப்ரகாஷ் வந்து எங்களுடன் இணைந்து கொண்டார். இனிய நினைவுகளுடன் அடுத்த நாள் நிகழ்ச்சி என்பதால் விரைவில் கிளம்பினோம். ஜனவரி 23 சனிக்கிழமை மீண்டும் அருமையான காலை உணவு நல்ல ஓய்வு எங்கள் நிகழ்ச்சி குறித்த திட்டமிடுதல் என மதியம் வரை நேரம் போனது மீண்டும் மதிய உணவுக்குப் பின் ஒரு குட்டித்தூக்கம் போட்டு நன்கு ஃபிரெஷ் ஆகி கிளம்பினோம். நிகழ்வு நடை பெறும் பேவர்லி ஹில்ஸ் பள்ளியை அடைந்தோம்.. 

அமெரிக்க வாழ் தமிழர்களின் குழந்தைகள் பெரியவர்கள் கலந்து கொண்ட பொங்கல் விழா போட்டிகள் நிறைவுற்று அனைவரும் அறுசுவை உணவை ருசித்து எங்கள் நகைச்சுவையை ரசிக்கக் காத்திருந்தனர். மேடையில் சசி முதலில் தன் நகைச்சுவையை ஆரம்பித்து கைத்தட்டல்கள் அள்ள மெல்ல மெல்ல பார்வையாளர்களை கிறிஸ்டோபர் ஆக்ரமிக்க நிகழ்ச்சி களை கட்டியது. 

பிறகு என் பணி மிகச் சுலபமாகிப் போக நிகழ்ச்சி முழுவதும் கரவொலியும் சிரிப்பொலியும் எழுந்து கொண்டே இருந்தது. நிறைவாக நிகழ்ச்சியை முடிக்கும் போது 2மணிநேரம் ஆகிவிட்டது என மேடையில் நாங்கள் சொன்ன போதுதான் பலர் கைக் கடிகாரத்தையே பார்த்தனர்.. அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி எங்களை பெருமை படுத்தினர். எங்கள் அனைவருக்கும் பொன்னாடை நினைவுப் பரிசுகளும் வழங்கி கவுரவித்தனர்.

இதை அப்படியே 6ஜெராக்ஸ் காப்பி எடுத்தது போலத்தான் அடுத்த 6 நிகழ்ச்சிகளும் பிறகு நடந்தன. ஆனால் இனி எங்கு நடந்தாலும் எத்தனை முறை அமெரிக்கா போனாலும் மிச்சிகன் தமிழ்ச்சங்கத்தையும் டெட்ராய்ட்டையும் மறக்க இயலாது. எங்கள் முதல் நிகழ்ச்சி அல்லவா.! தலைவர் அண்ணாதுரை முருகேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  மகேஷ் பாஸ்கரன், கார்த்திக் சாமிவேல், ஜகதீஷ் ஈரையன்,ராஜ் பழனிவேல், சாய்பிரபு, ஸ்ரீதர் லட்சுமிநாராயணன், சேதுராமலிங்கம் சுந்தரம்,கார்த்திக் லிங்கநாதன், ப்ரியா மகேஷ், வித்யா சதீஷ், அபர்ணா ஸ்ரீராம் உள்ளிட்ட அனைத்து தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கும்..

போர்டு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நண்பர் பிரகாஷ் அவர்களுக்கும் எங்கள் இதயங்கனிந்த நன்றி. டெட்ராய்ட்டை உலகக் கார்களின் நகரம் என்பார்கள்.. நாங்கள் இங்கு வெற்றிகரமாக ஸ்டார்ட் ஆனோம் இந்தப் பயணம் முழுவதும் அவ்வெற்றி எங்களுடன் இடையூறின்றி தொடர்ந்து கொண்டே இருந்தது. நாளையும் பல வெற்றிகளை குவிக்கும். எங்களால் என்றும் மறக்க முடியாது அமெரிக்காவில் எங்கள் முதல் காலடி பட்ட மிச்சிகன் மாகாண நினைவுகளை.

No comments:

Post a Comment